Friday, February 22, 2013

ஒருங்கிணைந்த இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு -2013

மக்களே...!!!!

இன்னைக்கு பதிவு ஒரு தகவல். மத்திய அரசுக்கு சொந்தமானதும், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ளதுமான, இந்தியாவின் முதன்மையான முதுகலை மற்றும் ஆராய்ச்சி கல்வி நிறுவனமான இந்திய அறிவியல் கழகம் (INDIAN INSTITUTE SCIENCE) கடந்த 2011 ஆம் வருடத்தில் இருந்து 4 வருட ஒருங்கிணைந்த இளநிலை பட்டப்படிப்புகளை (Integerated Four-Year Bachelor of Science (BS) Program) வழங்கி வருகிறது. இந்திய அறிவியல் கழகம் துவங்கி 100 வருடங்களை (1909-2009) கடந்ததை கொண்டாடும் வகையிலும், பள்ளிப்படிப்பை முடிக்கும் மாணவர்களை நேரடியாக ஆராய்ச்சி துறையில் ஈர்த்து இந்திய மாணவர்களிடம் ஆராய்ச்சிக்கான ஆர்வத்தை ஊட்டுவதற்காகவும், இந்த புதிய பட்டப்படிப்பை இந்திய அறிவியல் கழகம் அறிமுகப்படுத்தியது. இதன்படி,  இந்த படிப்பினை முடிப்பவர்கள் தனியாக முதுகலை பட்டப்படிப்பை படிக்க தேவையில்லை.  இதன்படி இந்த படிப்பிற்கான இந்திய அறிவியல் கழகம் தற்போதைய ஆண்டிற்கான  மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்களை வழங்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


இந்த 4 வருட பட்டப்படிப்பு வருடத்திற்கு இரண்டு பருவங்கள் (SEMESTER) வீதம் மொத்தம் 8 பருவங்களாக வழங்கப்படும். கடைசி வருடத்தின் கடைசி பருவம் முழுக்க முழுக்க ஆராய்ச்சி திட்டமாக இருக்கும். இதன்படி மாணவர்கள் ஒரு சிறிய ஆராய்ச்சி திட்டத்தினை மேற்கொண்டு அதனை முடித்து கொடுக்க வேண்டும். இந்தபடிப்பினை வழங்கும் துறைகள் - உயிரியல் - BIOLOGY, கணிதம் - MATHEMATICS, வேதியியல் - CHEMISTRY, சூழ்நிலையியல் அறிவியல் - ENVIRONMENTAL SCIENCE, மூலப்பொருட்கள் அறிவியல் (தமிழாக்கம் சரியான்னு தெரியல... தெரிஞ்சவங்க சொல்லுங்க ப்ளீஸ்...!!!!!!!) - MATERIAL SCIENCE, இயற்பியல் - PHYSICS. மேற்கண்ட துறையை சம்பந்தப்பட்ட பாடங்களை 11 மற்றும் 12ஆம் வகுப்பில் படித்த அல்லது படித்து முடிக்கப்போகும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வாகும் மாணவர்கள் தங்களது பாடதிட்டத்தினை தேர்வு செய்யும்போது தங்களது விருப்பப்படி எந்த துறையிலும் தேர்வு செய்துக்கொள்ளலாம். இது சம்பந்தப்பட்ட முழுமையான விவரங்களுக்கு இந்த லிங்க் கிளிக் செய்யவும்.


PUC - இரண்டாம் வருடம் (நம்ம ஊர்ல இது இப்போ வழக்கத்தில் இல்லை) அல்லது 12 ஆம் வகுப்பு ஏற்கனவே (2012) முடித்தவர்கள் அல்லது இந்த வருடம் (2013) முடிக்க இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள். அதனுடன் தனது படிப்பை முதல் வகுப்பில் அல்லது 60% சதவித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. இவர்கள் தனது கடைசி வருட (11th & 12th) பாடத்திட்டத்தில் வேதியியல், இயற்பியல் மற்றும் கணிதம் கட்டாயமாகவும், இதனுடன் உயிரியல், கணிப்பொறி அறிவியல், புள்ளியியல், அல்லது மின்னணுவியல் இவற்றில் ஏதாவது ஒன்றையும் படித்திருக்க வேண்டும். 


அதோடு கீழ்க்கண்ட தேர்வுகளில் ஏதாவது ஒன்றினை கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

KVPY:  இது மத்திய அரசின் தொழில் நுட்பத்துறை தேசிய அளவிலான, ஆர்வமுள்ள பள்ளி மாணவர்களை அறிவியல் துறையிலும், ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட படிப்புகளில் ஈர்க்கவும், அதற்கான உதவித்தொகை வழங்க தகுதியுடைய மாணவர்களை தேர்வு செய்யவும் நடத்தும் தேர்வு. இதன் மூலம் தேர்வாகும் மாணவர்கள் இந்தியாவின் முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில் உதவித்தொகையுடன் கூடிய ஆராய்ச்சி திட்டங்களில் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். இது சம்பந்தப்பட்ட மேலதிக தகவல்களுக்கு இந்த லின்கை கிளிக் செய்யலாம்.

இந்த KVPY தேர்வில் சில பிரிவுகள் உண்டு. இந்த பல்வேறு பிரிவுகளின் கீழ் 2011 ஆம் ஆண்டு மற்றும் 2012 ஆம் ஆண்டும் தேர்வு பெற்று உதவித் தொகைக்கு தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி படைத்தவர்கள் ஆவர்.  

  • KVPY-SA [appeared in 2011, and selected for the Fellowship]
  • KVPY-SB [appeared in 2012, and selected for the Fellowship]
  • KVPY-SX [appeared in 2012, and selected for the Fellowship]
  • KVPY Fellows selected through the Empowerment Initiative for SC/ST candidates
  •                                                                (அல்லது) 

  IIT-JEE-Main: Appearing in 2013 and securing a minimum of 60% (GN),     
                        54% (OBC-NCL), 30% (SC/ST/PH).
                                                   (அல்லது)

IIT-JEE-Advanced: Appearing in 2013 and securing a minimum of 60% 
                               (GN), 54% (OBC-NCL), 30% (SC/ST/PH).
                                                   (அல்லது)

NEET-UG: Appearing in 2013 and getting selected in the main merit list. 

மற்ற மூன்று தேர்வுகளும் தேசிய அளவிலான, மத்திய அரசின் அனைத்து IIT - களில் ENGINEERING - தொழில்நுட்ப துறையில் சேர்வதற்கான  நுழைவுத் தேர்வுகளாகும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்கள் மற்றும்  உடல் ஊனமுற்றோருக்கான இடஒதுக்கீடு மத்திய அரசின் விதிகளின் படி வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்கள் இணையத்தின் மூலமே அனுப்பப்பட வேண்டும். இந்த இணைய விண்ணப்பங்களை இந்திய அறிவியல் நிறுவனத்தின் இணைய தளத்தில் காணலாம். இந்த விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி ஏப்ரல் 30. விண்ணப்பத்தின் விலை பொது பிரிவினருக்கு 400/- ரூபாயும், ஊனமுற்றவர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி பிரிவினருக்கு 200/- ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் மாணவர்கள் இந்தியாவின் தலைச்சிறந்த கல்வி நிறுவனத்தில் படிக்கப்போவதோடு, இந்தியாவின் தலைச்சிறந்த பேராசிரியர்கள், விஞ்ஞானிகளோடு பணிபுரியும் வாய்ப்பினையும் பெறுவார்கள். அதோடு பின்னாளில் ஆராய்ச்சி மேற்படிப்புக்கு அங்கேயே விண்ணப்பிக்கும் போது அவர்களுக்கு தேவையான முன்னுரிமையும் அளிக்கப்படும். ஸோ, மக்களே...!!!!!!! ஆர்வமிருக்கறவங்க இந்த படிப்புக்கு விண்ணபிக்கலாம் அல்லது உங்களுக்கு தெரிஞ்சவங்க இருந்தா சொல்லுங்க. அடுத்த பதிவுல சிந்திப்போம்.  


Monday, February 18, 2013

உயிர்நுட்பம் FACEBOOK பக்கம்

மக்களே...!!!

நம்ம வலைப்பூவை இன்னும் நெறைய பேரிடம் கொண்டு சேர்க்கும்  முயற்சியாக, நான் எழுதும் பதிவுகளை உயிர்நுட்பம் FACEBOOK கணக்கிலும் பகிர்ந்திட்டு வரேன். நம்ம வலைப்பூவை தொடர்ந்து படிச்சிட்டு வர நம்ம நண்பர்களுக்கு இது தெரியும்.  அதோட உங்க மேலான ஆதரவினால நம்ம வலைப்பூ நல்ல முறையில சிறப்பா இயங்கிட்டு வருது.  அதுக்காக உங்க எல்லாருக்கும் என்னோட மனமார்ந்த  நன்றிகள்.


இப்போ, நெறைய புது நண்பர்கள் நம்ம வலைப்பூவுக்கு தொடர்ந்து வரத்தொடங்கி இருக்காங்க. அவங்களுக்கும் இது தெரியனும் இல்லையா ? இந்த லிங்க் அவங்களுக்காக. எல்லாரும் கண்டிப்பா நம்ம FACEBOOK கணக்குலயும் சேருங்க. உங்களுக்கு தெரிஞ்சவங்க, நண்பர்கள் எல்லாருக்கும் நம்ம வலைப்பூவை அறிமுகப்படுத்தி வைங்க. படிச்சிட்டு தவறாம பின்னூட்டம் போடுங்க. அது என் வேலையை இன்னும் செம்மைபடுத்திக்க ரொம்பவே உதவியா இருக்கும். சீக்கிரமே அடுத்த பதிவுல சிந்திப்போம்.

Thursday, February 14, 2013

கேள்வி நேரம் - QUIZ TIME - 1

மனிதன் என்பவன் ஒரு செல் உயிரில் இருந்து கொஞ்சம் கொஞ்சமா பரிணாம வளர்ச்சி அடைந்து வந்தவன் அப்படிங்கறது நமக்கு எல்லாம் தெரியும். இந்த பரிணாம வளர்ச்சியில் கடைசியா வந்த உயிரினம் மனிதன் தான். பரிணாம வளர்ச்சியின் கோட்பாடுகள் படி உபயோகத்தில் இல்லாத உறுப்புகள் அல்லது சிறப்புகள் அடுத்த படி நிலையில் காணாம போயிடும். அதேப்போல அதிகப்படியான உபயோகத்தில் இருக்கும் உறுப்புகள் அல்லது சிறப்புகள் பெரியதாக அல்லது அதிகப்படியாக மேம்பாடு அடையும். அதேப்போல எந்த ஒரு படி நிலையும் நிலையானது அல்ல. வேண்டுமானால் முந்தின நிலையில் உருவான உயிரினங்கள் அப்படியே இருக்கலாமே தவிர, பரிணாமம் காலப்போக்கில் அடுத்த படிநிலைக்கு நகரும். அதன்படி மனிதனுக்கு அடுத்த நிலையும் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
 
                                                      படத்து மேல கிளிக் பண்ணி பெருசாக்கி பார்க்கலாம் 

இப்போ என்னோட கேள்வி - மனிதனுக்கு அடுத்தத கட்டமாக வரக்கூடிய உயிரினம் எப்படி இருக்கும் அப்படின்னு உங்களால் யூகிக்க முடிகிறதா ? முடிகிறது என்றால் அந்த உயிரினம் எப்படி இருக்கும் ? அப்படி இருப்பதற்கான காரணம் என்னவாக இருக்கும் ?

பதில் எழுதுங்க மக்களே...!!!!!!!!!

Wednesday, February 13, 2013

FLAVIN ADENINE DINUCLEOTIDE (FAD+) - பிளேவின் அடினைன் டை-நியூக்ளியோடைடு - ஒரு அறிமுகம்...!!!!


மக்களே...!!!

நம்மளோட NAD பத்தின போன பதிவு படிச்சிருப்பிங்க. எப்படி இருந்தது ? ENERGY TRANSFER சம்பந்தப்பட்ட வேதி வினைகள் பத்தி சீக்கிரமே படிக்கபோறோம். அது சம்பந்தப்பட்ட சில மேலதிக தகவல்கள் தான் வரிசையா பார்த்திட்டு இருக்கோம். ENERGY TRANSFER வேதிவினைகள் அப்படிங்கறது நம்ம செல்கள்ள ENERGY அதாவது சக்தி தயாரிக்கப்படும் முறை, அது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கடத்தப்படும் முறை, மீதமுள்ளதை செல்லுக்குல்லயே சேமிக்கப்படும் முறை இப்படி எல்லாம் வரும். இதையெல்லாம் வரிசையா பார்க்கும் பொது மெல்ல போக போக நிறைய புது புது விஷயங்கள் வரும். அப்போ புரியாம போக நிறைய வாய்ப்புகள் இருக்கு. அப்படி ஆகக் கூடாதுன்னுதான் அது பத்தின ஒரு சின்ன முன்னோட்டம் குடுத்திட்டு இருக்கேன்.

இந்த ENERGY TRANSFER வேதிவினைகள் வரிசையில தாவரங்களில் சக்தி தயாரிக்கப்படும் முறையும் அடக்கம். நம்ம DR.DOLITTLE இதைப்பத்தி சொல்ல சொல்லி கேட்டிருக்கார். இப்போ முன்னோட்டம் குடுத்திட்டு இருக்கிற விஷயங்கள் இதுக்கும் பொருந்தும். அதனால தாவர செல்களில் ENERGY தயாராகும் முறை பத்தியும் சீக்கிரமே பார்க்கலாம்.

போன பதிவுல NAD பத்தி சொல்லியிருந்தேன். கிட்டத்தட்ட அதே மாதிரி FLAVIN ADENINE DINUCLEOTIDE (FAD+) - ப்ளேவின் அடினைன் டை-நியூக்ளியோடைடு  அப்படிங்கற இன்னொரு துணை என்சைம் இருக்கு. அது பத்தி தான் இன்னைக்கு பதிவு. இன்னைக்கு பதிவுக்கு போகலாம். 

FAD - வேதிக்கட்டமைப்பு 

FAD அப்படிங்கறது ரிபோப்ளேவின்-RIBOFLAVIN அப்படிங்கற கரிம வேதிப்பொருளும், ADP யும் சேர்ந்து உருவாகும் துணை என்சைம். இதனோட வேதிக்கட்டமைப்பு பார்த்திங்கன்னா ஒரு  ரிபோப்ஃளேவின் மூலக்கூறு, ADP மூலக்கூறினுடைய பாஸ்பேட் தொகுதியோட இணைந்த அமைப்பு. 
 
இதில் ரிபோப்ஃளேவின் அப்படிங்கறது வேற ஒன்னும் இல்ல, விட்டமின் B2. இதனுடைய வழக்கு பெயர் விட்டமின் B2. வணிகப்பெயர் ரிபோப்ளேவின்-RIBOFLAVIN. வேதியியல் பெயர் 7,8-DIMETHYL-10-[(2S,3S,4R)-2,3,4,5-TETRAHYDROXYPENTYL] BENZO [g] PTERIDINE -2,4 - DIONE. இதை ஆங்கிலத்துல படிக்கவே கஷ்டமா இருக்கு. ஸோ, நான் தமிழாக்கம் எல்லாம் செஞ்சி உங்களை கஷ்டப்படுத்த போறதில்லை. அப்படியே விடுவோம். 

FAD-யும் NAD மாதிரியே ரிடாக்ஸ் வினைகளில் துணை புரியும் அதே வேலையை செய்யிறது தான். இதுலயும் ஆக்சிஜன் ஒடுங்கிய (FAD+) மற்றும் ஆக்சிஜனேற்ற (FADH2) வகைகள் இருக்கு. FAD ரெண்டு எலக்ட்ரான் அல்லது ஹைட்ரஜன் மூலக்கூறுகளை வாங்கிகிட்டு FADH2-வாக மாறும் தன்மை உடையது. 

இதுவும் கிட்டத்தட்ட NAD மாதிரி தான் அப்படிங்கறதால பெரிய அளவுல இதை பத்தி எதுவும் சொல்லல. இதுக்கு மேல எதுவும் தகவல் தேவைப்பட்டா பின்னாடி சொல்றேன்.  

                      படத்து மேல கிளிக் பண்ணி பெருசாக்கி பார்க்கலாம்  


ப்ஃளேவின் மோனோ நியூக்ளியோடைடு - FLAVIN MONO NUCLEOTIDE (FMN)

FMN அப்படிங்கறது  RIBOFLAVIN-5'-PHOSPHATE - ரிபோப்ஃளேவின்-5'-பாஸ்பேட், அதாவது ரிபோப்ஃளேவின் கூட பாஸ்பேட் தொகுதி இணைந்த அமைப்பு. நெறைய என்சைம்களில் இது தான் FUNCTIONAL GROUP - தமிழ்ல சொன்னா வேலை செய்யும் தொகுதி அல்லது வேலை செய்யும் மூலக்கூறு. அப்படின்னா இந்த மூலக்கூறு அந்த என்சைமோட இணைஞ்சி இருந்தா மட்டும் தான் அந்த என்சைம் வேலை செய்யும் திறனுடையதா இருக்கும். அப்படி இல்லன்னா அதனால் தன்னுடைய வேலை செய்ய முடியாது.  

மக்களே, மறுபடியும் நான் சொல்ல விரும்பறது தான், எல்லாம் படிங்க. ஆனா மறக்காம பின்னூட்டம் போடுங்க. மறுபடியும் அடுத்த பதிவுல சிந்திப்போம்.

Friday, February 8, 2013

நிகோடினமைடு அடினைன் டை- நியூக்ளியோடைடு - NIKOTINAMIDE ADENINE DINUCLEOTIDE (NAD+) - ஒரு அறிமுகம்...!!!

மக்களே...!!!   

நாம செல் அமைப்புல அடுத்ததா மைட்டோகாண்ட்ரியா பத்தி பார்க்க வேண்டியது. ஆனா அதுக்கு முன்னாடி பார்க்க வேண்டிய சில விஷயங்கள் இன்னும் முடியாததால அதை தள்ளி போட்டிருக்கோம். ATP க்கு அப்புறம் நாம பார்க்கிற இருக்கிற விஷயம்  நிகோடினமைடு அடினைன் டை- நியூக்ளியோடைடு - NIKOTINAMIDE ADENINE DINUCLEOTIDE (NAD). இனிமே இதை NAD+ அப்படின்னே சொல்லுவோம். NAD ஒரு CO-ENZYME - அதாவது செல்களில் காணப்படும் ஒரு துணை நொதி அல்லது துணை என்சைம். இது துணை நொதியா இருந்தாலும் நியூக்ளியோடைடு வகையை சேர்ந்தது. இதனோட வேதிக்கட்டமைப்பில் இரு நியூக்ளியோடைடுகளை கொண்டது. அதாவது டை - நியூக்ளியோடைடு  வகையை சேர்ந்தது.

                                                 படத்து மேல கிளிக் பண்ணி பெருசாக்கி பார்க்கலாம் 


துணை நொதி அல்லது துணை என்சைம் அப்படிங்கறதை  எப்படி விளக்கலாம் அப்படின்னா ஒரு என்சைம் முழுமையா வேலை செய்யும் திறனுடையதாக - A COMPLETE ACTIVE ENZYME மாற அவசியம் தேவையான ஒரு புரோட்டீன் அல்லாத வேதிப்பொருள் அல்லது கரிமவேதிப்பொருள் (இது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மூலக்கூறுகளாக இருக்கலாம்). இவைகள் என்சைம் கூட சேர்ந்து அதை முழுமையான வேலை செய்யும் திறனுடையதாக மாற்றும். உதாரணத்துக்கு விட்டமின்கள். நாம சாப்பிடற நமக்கு தேவையான எல்லா விட்டமின்களும் CO-ENZYME தான். ஆனா, எல்லா என்சைம்களுக்கும் CO-ENZYME தேவை இல்லை. இப்படி CO-ENZYME தேவைப்படற என்சைம்கள் அதனோட CO-ENZYME கூட சேர்ந்து இருக்கும்போது மட்டும் தான் தன்னோட வேலையை செய்ய முடியும். இல்லன்னா அது சும்மா ஒரு புரோட்டீன் துண்டு அவ்ளோதான். இந்த மெயின் என்சைம் APOENZYME அப்படின்னு சொல்வாங்க. சில என்சைம்களுக்கு CO-ENZYME மற்றும் CO-FACTOR ரெண்டுமே கூட தேவைப்படும். இப்படி APOENZYME மற்றும் CO-ENZYME சேர்ந்த என்சைம் HOLOENZYME அப்படின்னு பேரு.

                                          படத்துமேல கிளிக் பண்ணி பெருசாக்கி பார்க்கலாம்

இன்னொன்னு இருக்கு. CO-FACTOR - இது சுத்தமான உலோக மூலக்கூறுகள் - மெட்டல் அயன்கள் - INORGANIC METALS IONS. அறிவியல் மொழியில் சொல்லணும் அப்படின்னா நம்ம மினரல்கள் - MINERALS. உதாரணம் இரும்பு, கால்சியம் இதுவெல்லாம்.

ஓகே... நம்ம விசயத்துக்கு வருவோம். NAD இதனோட முக்கியமான வேலை என்ன ? எங்க எல்லாம் இது CO-ENZYME-மாக வேலை செய்யிது ? இது தான் நமக்கு ரொம்ப முக்கியமான தகவல்.

REDOX REACTIONS - ரிடாக்ஸ் ரியாக்சன் - ரிடாக்ஸ் வேதி வினைகள் - சில சொற்களை நாம ரொம்ப முயற்சி பண்ணி மொழி மாற்றம் செய்ய வேண்டாம்ன்னு நெனக்கிறேன். ரிடாக்ஸ் அப்படிங்கறதை அப்படியே ரிடாக்ஸ் அப்படின்னே சொல்லலாம். ரிடாக்ஸ் வேதி வினைகள் அப்படிங்கறது எலக்ட்ரான்களை இடப்பெயர்ச்சி அல்லது கடத்துதல் சார்ந்த வினைகள். அதுல முக்கியமானது ATP உருவாகும் வேதி வினைகள். ATP உருவாக நடைபெறகூடிய வினைகள் எல்லாமே இந்த வகையை சேர்ந்தவையே.


உயிருள்ள செல்கள்ள நடக்கும் வேதிவினைகள் எல்லாம் முக்கியமான,  தேவையான சக்தியை தயாரிக்கவும், உருவான சக்தியை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு கடத்தவும் நடக்கிறது தான். இதுல ரெண்டுவகையான வேதிவினைகள் நடக்கும். ஒன்னு, REDUCTION (OR) OXIDO REDUCTION REACTION - ஒடுக்க வினைகள் (அ) ஆக்சிஜனொடுக்க வினைகள். இன்னொன்னு, OXIDATION REACTION - ஆக்சிஜனேற்ற வினைகள்.

REDUCTION (OR) OXIDO REDUCTION - ஒடுக்க (அ) ஆக்சிஜனொடுக்க வினைகள்

ஒடுக்க வினைகள் அப்படிங்கறது GAIN OF ELECTRON (OR) HYDROGEN - அதாவது  எலெக்ட்ரான் ஈட்டுதல். ஒரு வேதி வினையில் ஈடுபடும் வேதிப்பொருள் உடன் ஈடுபடும் வேதிப்பொருள் கிட்ட இருந்து எலக்ட்ரான்களை அல்லது ஹைட்ரஜன் மூலக்கூறுகளை எடுத்துக்கும். இதுக்கு ஒடுக்க வினைகள் அப்படின்னு பேரு.

OXIDATION REACTION - ஆக்சிஜனேற்ற வினைகள்

ஆக்சிஜனேற்ற வினைகள் அப்படிங்கறது ஒரு வேதி வினையில் ஈடுபடும் வேதிப்பொருள் தன்னுடன் வினைபுரியும் மற்றொரு வேதிப்பொருள் கிட்ட தன்னோட எலக்ட்ரான்களை அல்லது ஹைட்ரஜன் மூலக்கூறுகளை இழக்கும். இந்த மாதிரியான வேதி வினைகள் தான் ரிடாக்ஸ் ரியாக்சன்கள் - REDOX REACTIONS. இந்த மாதிரி ஒரு வேதிப்பொருள் கிட்ட இருந்து எலக்ட்ரான்கள் அல்லது ஹைட்ரஜன்களை இன்னொரு வேதிப்பொருள் கிட்ட நேரிடையா  குடுக்கவோ எடுக்கவோ முடியாது. அப்படி குடுக்கவோ எடுக்கவோ உதவற வேதிப்பொருள் தான் இந்த  நிகோடினமைடு அடினைன் டை- நியூக்ளியோடைடு - NIKOTINAMIDE ADENINE DINUCLEOTIDE - NAD+   

நாம சாப்பிடற சாப்பாட்டுல இருந்து கெடைக்கிற குளுக்கோஸ் முழுமையா ஜீரணம் ஆகறது அப்படின்னு நான் முன்னாடி நெறைய தடவ சொல்லியிருக்கேன்.  இந்த வேதிவினைகள் எல்லாமே OXIDATION வகையை சேர்ந்தது. இதுல இருந்து வெளிப்படற எலக்ட்ரான்கள் தான் பின்னாடி ATP உருவாக தேவையானது, தேவைப்படறது. அதுபத்தி நாம பின்னாடி விளக்கமா படிக்கலாம்.

இது எப்படி வேலை செய்யிது அப்படின்னு பார்க்கலாம். A மற்றும் B அப்படின்னு ரெண்டு வேதிப்பொருள்களை கற்பனை செய்துக்கலாம். இந்த ரெண்டும் RIDOX REACTION - ல ஈடுபடறதா வெச்சிக்கலாம். கீழ இருக்கிற ரெண்டு படங்களையும் பாருங்க. A2e- or A2H அப்படிங்கற வேதிப்பொருள் தன்கிட்ட இருந்து ரெண்டு எலக்ட்ரான்களை (2e-) அல்லது ரெண்டு ஹைட்ரஜன்களை (2H) இன்னொரு வேதிப்பொருளான B கிட்ட இழந்திட்டு A என ஒடுக்கமடையிது. A2e- or A2H கிட்ட இருந்து ரெண்டு எலக்ட்ரான்களை அல்லது ரெண்டு ஹைட்ரஜன்களை  வாங்கி B ஆக்சிஜனேற்றம் (B2e- or B2H ) அடையிது.

இந்த வேதிவினையோட முதல் படி - A தன்கிட்ட இருக்கிற இந்த எலக்ட்ரான்கள் அல்லது ஹைட்ரஜன் மூலக்கூறுகளை வாங்கி கொடுக்கிற வேலை இந்த பதிவோட கதாநாயகன் நிகோடினமைடு அடினைன் டை- நியூக்ளியோடைடு - NAD- NIKOTINAMIDE ADENINE DINUCLEOTIDE - டோட வேலை. அதன்படி சாதாரண நிலையில் இருக்கிற NAD+ வேதிப்பொருள் A கிட்ட இருந்து எலக்ட்ரான் அல்லது ஹைட்ரஜனை வாங்கி NADH ஆக மாறும் அதாவது ஒடுக்கமடையும். எலக்ட்ரான்களை கொடுத்து A ஆக்சிஜனேற்றம் அடையும்.

                                           (படத்து மேல கிளிக் பண்ணி பெருசாக்கி பார்க்கலாம்)

A2e- - எலக்ட்ரான்களை கொடுத்து ஆக்சிஜனேற்றம் அடையும் - A வாக மாறும்.
 NAD+ - எலக்ட்ரான்களை வாங்கி ஒடுக்கம் அடையும் - NADH ஆக மாறும்.
 
ரெண்டாவது படி - ஒடுக்கமடைஞ்ச NADH கிட்ட இருந்து B எலக்ட்ரான்களை வாங்கி ஒடுக்கம் அடையும். NADH தன்கிட்ட இருந்த எலக்ட்ரான்களை கொடுத்து  NADஆக ஆக்சிஜனேற்றம் அடையும்.

ஓகே மக்களே...!!! பதிவை படிங்க. உங்க சந்தேகங்களையும் கேள்விகளையும் மெயில்லயோ, பின்னூட்டத்துலயோ சொல்லுங்க. அடுத்த பதிவுல சிந்திப்போம்.
 

Monday, February 4, 2013

வீடியோ: சில சுவாரஸ்யமான, உபயோகமான வீடியோக்கள்...!!!

மக்களே...!!!
 
நம்ம வலைப்பூவுல அப்பப்போ சுவாரஸ்யமான அல்லது படிக்கிற மாணவர்களுக்கு உபயோகமா இருக்கிற மாதிரியான வீடியோக்கள் கிடைக்குபோது வெளியிடறோம்ன்னு உங்களுக்கு தெரியும். அந்த வரிசையில இன்னைக்கு PHYSIOLOGY AND ANATOMY (உடலியல்) தலைப்புல நான் பார்த்த வீடியோ தொகுப்பு உங்களுக்காக. 



எனக்கு இதுல ரொம்ப பிடிச்சிருந்தது முதல்ல வர செல் - செல் தொடர்பு கொள்ளும் முறை, இரண்டாவது கருவாக்கம் (FERTILIZATION), மூணாவது நாம சாப்பிடற உணவு எப்படி ஜீரணம் ஆகுதுன்னு காட்ற அருமையான வீடியோ. இது நம்மளோட அடுத்த பதிவுக்கும் மிக உபயோகமா இருக்கும். ரொம்ப நல்ல அனிமேசன். தவறாம எல்லா வீடியோக்களையும் பாருங்க. நான் ஒரு சாம்பிள் வீடியோ மட்டும் இணைக்கிறேன். இந்த லிங்க்ல எல்லா வீடியோக்களையும் பார்க்கலாம். என்ஜாய் பண்ணுங்க. அடுத்த பதிவுல சிந்திப்போம்.

சில சுவாரஸ்யங்கள்: கோழி முட்டையின் அறிவியல் பூர்வமான கட்டமைப்பு - 2

மக்களே...!!!

DR. DOLITTLE நம்ம வலைப்பூவை தொடர்ந்து படிக்கிற வாசகர். இவர் ஒரு மிருக நல டாக்டரும் கூட. நன் எழுதறதை படிச்சிட்டு தன்னோட கருத்துக்களையும், தனக்கு தெரிஞ்ச புது விசயங்களையும் அப்பப்போ சொல்லுவார். நல்ல மாட்டுக்கு ஒரு ஊசி அப்படிங்கற பேர்ல ஒரு வலைப்பூவை எழுதிட்டு இருக்கார். நம்மளோட வலைப்பூவில வந்த கோழி முட்டை - அறிவியல் பூர்வமான கட்டமைப்பு  பதிவு படிச்சிட்டு சில மேலதிக சுவாரஸ்யமான தகவல்களை கமெண்ட்ல சொல்லியிருக்கார். நன்றி டாக்டர்...!!! அவர் சொன்ன சில விஷயங்கள் சுவாரஸ்யமாவும் இருந்ததால அதையும் ஒரு பதிவா போடலாம்னு தோணுச்சி. ஸோ, இன்னைக்கு பதிவு டாக்டர் சொன்ன தகவல்கள் தான். வாங்க இன்னைக்கு பதிவுக்கு போகலாம்.  

 தகவல் - 1

மனிதர்கள்ல பெண்களில் பாலின குரோமோசோம்கள் ஒரே மாதிரி இருக்கும். அதாவது XX. இதை HOMOGAMETIC - ஹோமோகேமிடிக் அப்படின்னு சொல்வாங்க. அதுவே ஆண்களின் பாலினம் சம்பந்தப்பட்ட குரோமோசோம்கள் XY. இதை HETEROGAMETIC - ஹெடிரோகேமிடிக் அப்படின்னு சொல்வாங்க. ஸோ, பிறக்கும் குழந்தையின் பாலினம் ஆணின் குரோமோசோம் பிரிதலை பொறுத்தே அமையும். கொஞ்சம் விளக்கமா வேணும்ன்னா நம்ம பழைய பதிவு ஒன்னு ரொம்ப விளக்கமாவே எழுதியிருக்கேன். அதை படிச்சி தெரிஞ்சிக்கலாம். அதுவே பறவைகள் இனத்தில் தலைகீழ். இங்க ஆண்தான் ஹோமொகேமிடிக். பெண் ஹெடிரோகேமிடிக். புதியதா உருவாகும் குட்டி பறவை ஆணா பெண்ணான்னு பெண் தாய் பறவையின் குரோமோசோம் பிரிதலை பொறுத்தே அமையும். 


                              (படத்து மேல கிளிக் பண்ணி பெருசாக்கி பார்க்கலாம்)


தகவல் - 2

ரெண்டாவது தகவல், இன்னும் கொஞ்சம் வித்தியாசமானது. மனிதர்களில் செல்களில் உருவாகும் கழிவு பொருள்களை வெளியேற்றுவதில் முக்கியமான வழி சிறுநீர் உருவாக்கி அது மூலமா வெளியேற்றுவது. மனித செல்கள் எல்லா கரிம வேதிப்பொருள்களை உபயோகப்படுத்திட்டு மிஞ்சியவற்றை கண்டிப்பா வெளியேத்தணும். அப்படி வெளியேத்த மீதி இருக்கிற கரிம வேதிப்பொருள்களை யூரியா - UREA அப்படிங்கற கரிம வேதிப்பொருளா மாத்தி அதை அப்படியே ரத்தத்துல கலக்கவிடும். அப்படி கலக்கிற யூரியா சிறுநீர் பிரியும் போது சிறுநீர்ல கலந்து சிறுநீர் வழியா வெளியேற்றப்பட்டு விடும். இதை வீடியோல நீங்க பார்க்கலாம். 



ஆனா, பறவைகள்ள இது வழக்கம் இல்லை. பறவை செல்கள் வெளியேற்றும் யூரியா அப்படியே வெளியேற்றப்படுவதில்லை. அதை அப்படியே URIC ACID - யூரிக் ஆசிட்டாக மாற்றப்பட்டு அதை அப்படியே வெளியேற்றிடும். பறவைகளில் தனியா சிறுநீர் அப்படின்னு ஒன்னு உருவாகறதில்லை. 

இதுக்கு என்ன காரணம் ? யூரியா சிறுநீர்ல வெளியேற்றனும் அப்படின்னா, அது தண்ணியில கரைக்கப்பட்டு அப்புறம்தான் சிறுநீரா வெளியேறும். யூரியா தண்ணியில கரையனும் அப்படின்னா  நிறைய அளவு தண்ணி வேணும். மனித உடல்ல அதுக்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. ஏன்னா மனித உடல்ல நிறைய தண்ணி இருக்கு. ஆனா, பறவையின் உடல்ல அவ்வளவு தண்ணி எதிர்ப்பார்க்க முடியாது. பறவை செல்கள் உருவாக்கும் யூரியாவை அப்படியே சிறுநீர் வழியா வெளியேத்தினா பறவை தன்னோட சாதாரண வேலைக்கு கூட தண்ணி பத்தாம செத்து போயிடும். 

தகவல் - 3

இது முட்டை பத்தின விஷயம் தான். கோழியோட முட்டை மட்டும் இல்லை, எல்லா பறவைகளோட முட்டையோட வடிவம் பத்தி உங்களுக்கு தெரியும். ஒரு பக்கம்  குறுகலான முனையும், மறுப்பக்கம் கொஞ்சம் பெரிய வடிவமும் இருக்கும். இதுக்கும் ஒரு காரணம் இருக்கு. ஒரு கோழியோட முட்டையை எடுத்து தரையில உருட்டி விட்டு பாருங்க. அது உருட்டி விட்ட இடத்திலேயே தான் சுத்தி சுத்தி வருமே தவிர உருண்டு உங்களை விட்டு தூரமா போகாது. அதுக்கு காரணம் இந்த ஸ்பெஷல் வடிவம்தான் காரணம். 

அவ்ளோதான் மக்களே...!!! படிங்க. பின்னூட்டம் போடுங்க. இந்த தகவல்களை சொன்ன டாக்டருக்கு மறுபடியும் ஒரு பெரிய நன்றி. மறுபடியும் அடுத்த பதிவுல சிந்திப்போம்.