Saturday, March 30, 2013

சில சுவாரஸ்யங்கள்: ஒரு அரியக் கண்டுபிடிப்பு

மக்களே...!!!  

ஒரு சந்தோஷமான செய்தியோட இன்னைக்கு பதிவை ஆரம்பிக்கிறதா இருக்கேன். அது என்னன்னா இந்த பதிவு நம்ம வலைப்பூவின் 100 வது பதிவு. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. நான் எழுத ஆரம்பிக்கும்போது இவ்வளவு நாள் நான் தொடர்ந்து எழுதப்போறேன், என்னால எழுத முடியும் அப்படிங்கற நம்பிக்கை எனக்கே இல்லை. ஏன்னா வலைப்பூ ஆரம்பிச்சி முழுசா ரெண்டு பதிவு கூட எழுதாம, அதை டீல்ல விட்ட அனுபவம் எனக்கு ஏற்கனவே இருக்கு. ஆனா, எப்படியோ தட்டி தடுமாறி நூறு பதிவுகளை தொட்டுட்டேன். இது எல்லாத்துக்கும் உங்க ஆதரவு மட்டுமே காரணம். இது நூறாவது பதிவு அப்படிங்கறதால ஸ்பெஷலா ஏதாவது எழுதலாம்ன்னு இருந்தேன். அப்போ கெடைச்சதுதான் இந்த விஷயம். நம்ம நூறாவது பதிவும் சில சுவாரஸ்யங்கள் பகுதி தான். வாங்க இன்னைக்கு பதிவுக்கு போகலாம்.

இதுவரைக்கும் இந்த உலகத்துல கண்டுபிடிக்கப்பட்ட மேம்படுத்தப்படாத ஒரு செல் உயிரினங்கள்ள இருந்து, மேம்படுத்தப்பட்ட தாவரங்கள், மனிதன் வரைக்கும், எல்லாத்தையும் முறையா வகைப்படுத்தி பிரிவுகள், உட்பிரிவுகள் எல்லாம் பண்ணி பட்டியல் போட்டு வெச்சிருக்காங்க.  இன்னும் புதுசு புதுசா உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படும்போது ஏற்கனவே இருக்கிற பட்டியலோட ஒப்பிட்டு அதை சரியா வகைப்படுத்துவாங்க. ஒருவேளை ஏற்கனவே இருக்கிற பட்டியலோட ஒத்துப்போகலன்னா புதுசா ஒரு பிரிவை உண்டாக்கி அதுல சேர்த்து வெப்பாங்க. எந்த பிரிவுலயும் சேராத உயிரினங்களை வகைப்படுத்தடாதவை அப்படிங்கற ஒரு பிரிவை உண்டாக்கி அதுல சேர்த்து வெச்சிருக்காங்க. இது பொதுவா உயிரினங்களை வகைப்படுத்தி வெச்சிருக்கிற முறை.

சில சமயம், இதுல தவறுகளும் நடந்திருக்கு. ஒரு உயிரினத்தை வகைப்படுத்துபோது, அதனுடைய புறத்தோற்றம், உடல் உறுப்புகள், ஒரு செல் உயிரினமா இருந்தா செல் நுண்ணுறுப்புகள், உணவு, அதை சாப்பிடும் முறை, ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு எப்படி நகரும், அதனோட வாழிடம் இன்னும் என்னென்னவோ கணக்குல எடுத்து பரிசோதனைகள் எல்லாம் செய்து, அப்புறம் தான் அந்த உயிரினம் என்ன வகைப்பாட்டுல வரும்ன்னு முடிவு பண்ணுவாங்க. இதுல ஏதாவது தப்பு நடந்திட்டா, அது தப்பான பிரிவுக்கு போய் சேரும். அப்புறம் வேற யாராவது அதை கண்டுபுடிச்சி சரியான பிரிவுல மாத்தி வெப்பாங்க. இதுவெல்லாம் சொல்றதுக்கு சுலபமா இருந்தாலும் செய்யிறது அவ்வளவு சுலபம் இல்லை. ஒரு விஞ்ஞானி தான் வெக்கிற ஒவ்வொரு வாதத்துக்கும் சரியான ஆதாரங்களை காட்டனும். அந்த துறையில ஆராய்ச்சி செய்யும் எல்லாரையும் திருப்திப்படுத்தற  மாதிரியான ஆதாரங்கள் நம்மக்கிட்ட இருந்தா மட்டுமே நம்ம ஆராய்ச்சி முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்படும். இல்லைன்னா சுலபமா ஒதுக்கிடுவாங்க. அதுக்காக அதை தவறுன்னும் சொல்ல முடியாது. ஏன்னா, உயிரியல் துறையில் நடக்கிற எல்லா விதமான ஆராய்ச்சிகளும் எதோ ஒரு வகையில உயிரோட சம்பந்தப்பட்டது. எதோ ஒரு நோய்க்கு மருந்து, இல்லைன்னா புது சிகிச்சை இப்படி. மறுக்கப்படும் ஆதாரங்கள் ஒரு வேளை சரியாவே இருந்திட்டாலும் அதனால தவறு நேர வாய்ப்பில்லை. ஆனா, தவறான தகவல் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அதனால விளைவது உயிர் பலி  இல்லையா ...?????

ஓகே... நம்ம விசயத்துக்கு வருவோம். NANO-EUKARYOTES  (OR) PICO-EUKARYOTES - இது உயிரினங்களோட வகைப்பாடுல இருக்கிற, 2-10 மைக்ரான் அளவுள்ள (1 மைக்ரான் - 1 மீட்டர்ல பத்து லட்சத்துல ஒரு பங்கு)  கடல் வாழ் ஒரு செல் உயிரின பிரிவு (SINGLE  CELL ORGANISMS). கடல் தண்ணியோட மேற்பரப்புல வாழும் ஒரு செல் உயிரினங்கள் (PROTISTS). இந்த பிரிவு இருக்கே தவிர, முறையா, அதிகாரப்பூர்வமா உயிரினங்களோட வகைப்பாடுல இன்னும் சேர்க்கப்படல. இப்படி ஒரு பிரிவு உண்டாக்கிட்டாங்களே தவிர, உயிரினங்களோட வகைப்பாடுல மற்றப் பிரிவுகளோட, ஒரு பிரிவா சேர்க்கப்படற அளவுக்கு தேவையான தகவல்கள், ஆதாரங்கள் இன்னும் கிடைக்கல. சில உயிரினங்கள் இருக்குன்னு சில பரிசோதனைகளின் முடிவுகள் அடிப்படையில மட்டுமே (MOLECULAR PHYLOGENETIC ANALYSIS), அதாவது அந்த உயிரினங்களை நேரடியா கண்ணால பார்க்காமலேயே, அறிவிச்சிருக்காங்களே தவிர அந்த உயிரினங்களை தனியா பிரிச்செடுத்து, பரிசோதனைக்கூடத்துல வளர்த்து, யாரும் இதை மற்றவர்களுக்கு காட்ட முடியல.

கடல் தண்ணிய    2-10 மைக்ரான் அளவுள்ள உயிரினங்களை தனியா பிரிக்கும் அளவுள்ள வடிக்கட்டியில (MEMBRANE FILTERS) வடிக்கட்டி,  அதுல கிடைக்கும் உயிரினங்களோட DNA வை பரிசோதிச்சப்போ, ஏற்கனவே தெரிஞ்ச, முறையா வகைப்படுத்தப்பட்ட உயிரினங்களோட DNA-வோடவும், மற்ற பிரிவுகள்ள இருக்கும் எந்த உயிரினங்களின்  DNA கூடவும் சேராத, ஒரு புது DNA வகை இருக்கறதையும் கண்டுபிடிச்சாங்க. இதை வெச்சி தான் இப்படி ஒரு பிரிவு இருக்குன்னு தெரிஞ்சி, இந்த பிரிவை உண்டாக்கினாங்க. ஆனா, மிகச்சிறிய அளவுள்ள  இந்த செல்களோட ஏகப்பட்ட மற்ற செல்களும் சேர்ந்து தான் வந்ததாலயும், அந்த செல்களுக்கு இடையே இந்த செல்களை கண்டுபிடிக்கறதுல இருந்த சிரமங்கள், இவை என்ன மாதிரியான சூழ்நிலையில வளரும், என்ன சாப்பிடும் இதெல்லாம் ஒண்ணுமே தெரியாததாலயும்  பரிசோதனைக்கூடத்துல வளர்க்க முடியாத நிலை. அதனால இந்த பிரிவு அப்படியே இருந்தது.

இந்த பிரிவுல இருந்த ஒரு உட்பிரிவு - சிறிய கடல்பாசிகள் - PICOPLANKTON. இந்த உட்பிரிவை சேர்ந்த இரண்டாம் நிலை ஒட்டுண்ணி (SECONDARY ENDOSYMBIONTS) வகை -  PICOBILIPHYTA. இந்த ஒட்டுண்ணி வகையிலயும் அதே கதைதான். யாரும் இந்த பிரிவுல இருந்த செல்களை இதுவரைக்கும் கண்ணால பார்த்தது இல்லை. இந்த பிரிவுல இருக்கிற செல்கள் தனக்கு தானே உணவு தயாரிக்கிற திறமை (AUTOTROPH) இருக்குன்னு சில பேரும், இல்லைன்னு (HETEROTROPHS) சில பேரும், (இந்த ரெண்டு பண்புகளையும் கொண்டதுன்னும் சொல்றவங்க இருக்காங்க), சூரிய ஒளியை பயன்படுத்தி சக்தி தயாரிக்க கூடியவை (PHOTOSYNTHETIC) அப்படின்னு சில பேரும், இல்லைன்னு சில பேரும், இவைகள் மிகச் சிறிய EUKARYOTES வகையை சேர்ந்தது அல்ல  அப்படின்னு சில பேரும் சொல்லிட்டு இருந்தாங்க. ஆனா, எதுக்குமே முறையான ஆதாரங்கள் கிடையாது.


இதுல என்ன சுவாரஸ்யம் அப்படின்னு பார்க்கறிங்களா...!!!! இனிமே தான் மேட்டரே. மேல சொன்னது எல்லாம் கொஞ்ச நாள் முன்னாடி இருந்த நிலைமை. இப்போ இந்த PICOBILIPHYTA அப்படிங்கற வகையே தப்புன்னும், தனக்கு தானே உணவு தயாரிக்கிறது - AUTOTROPHS  கிடையாதுன்னும், சூரிய ஒளியை பயன்படுத்தி உணவு தயாரிக்கிறது - PHOTOSYNTHETIC கிடையாதுன்னும், இந்த பிரிவை சேர்ந்த, ஒரு செல் உயிரினத்தை கண்டுபுடிச்சி, அதை தனியா வெற்றிகரமா பிரிச்செடுத்து, பரிசோதனைக்கூடத்துல வளர்த்து புகைப்படங்களோட முறையா நிரூபிச்சிருக்காங்க. அந்த செல்லோட பேரு Picomonas judraskeda - பிக்கோமோனஸ் யுட்ராஸ்கீடா. PICOBILIPHYTA அப்படிங்கற இந்த வகையோட பேரையே இந்த ஆதாரங்களோட அடிப்படையில PICOZOA அப்படின்னு புதுசா மாத்தியும் வெச்சிருக்காங்க. ஏன்னா, உலக அளவில் விஞ்ஞானிகள் வகுத்து வெச்சிருக்கிற வகைப்பாட்டு விதிமுறைகள்படி, தன்னிச்சையாக உணவு தயாரிக்கும் செல்களுக்கு (AUTOTROPHS) மட்டும் தான் பேருக்கு பின்னாடி - PHYTA அப்படின்னு வரும். தானே உணவு தயாரித்துக்கொள்ள இயலாத செல்களுக்கு -ZOA அப்படின்னுதான் வரும்.   


எலக்ட்ரான் மைக்ராஸ்கோப்ல பார்த்து இன்னும் நிறைய சோதனைகளை செய்து பார்த்ததுல, இந்த செல்களுடைய அமைப்பு, செல் நுண்ணுறுப்புகள் பத்தியெல்லாம் பல சுவாரஸ்யமான தகவல்கள் கெடைச்சிருக்கு. இந்த செல்லோட வெளிப்புற அமைப்பு, அது ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு இடம்பெயரும் முறை, உணவு பழக்கம் எல்லாமே இப்போ இருக்கிற செல்கள்ல இருந்து முழுமையா வேற மாதிரி இருக்கு. வழக்கமா மத்த ஒரு செல் வகை உயிரினங்கள் இன்னொரு ஒரு செல் உயிரினங்களை உணவாக சாப்பிடும். ஆனா, இவை கடல் தண்ணியோட மேற்பரப்புல மிதக்கும் கரிம வேதிப்பொருட்களையும், கடல் கூழ்மங்கள் - COLLOIDS மாதிரியான பொருட்களை சாப்பிடும். இந்த, உணவு பழக்கத்தின் காரணமா, இந்த உயிரினங்கள் கடலின் மேற்பரப்பில் உள்ள மாசுக்களை அகற்றும் பணியில் முக்கிய பங்காற்றும் எனவும் நம்பப்படுகிறது.




இதை செய்தது, என்னோட நண்பர் பேரு டாக்டர். ராம்குமார் சீனிவாசன், ஊரு மதுரை பக்கத்துல திருமங்கலம். இங்க நான் ரிசர்ச் பண்ணிட்டு இருக்கிற பல்கலைக்கழகத்துல தான் Ph. D முடிச்சிருக்கார். அவர் தன்னோட Ph. D- க்காக செய்திருக்கிற ரிசர்ச் தான் மேல சொன்னது. உயிரினங்களோட வகைப்பாட்டுல ஒரு புது உட்பிரிவையே உண்டாக்கியிருக்கார். அவர் என்னோட நண்பர் அப்படிங்கறது எனக்கு பெருமை. நம்ம தமிழ்நாட்டுக்காரர் அப்படிங்கறது நமக்கெல்லாம் பெருமை. இவர் செய்த ஆராய்ச்சி கட்டுரை உலக அளவில் வெளிவரும் PLOS ONE பத்திரிகையில் வெளியாகியுள்ளது

என்னதான் விஞ்ஞானிகள் உயிரினங்களோட பரிணாம வளர்ச்சி பத்தின ஆராய்ச்சியை முழுமூச்சா செய்தாலும், அத்தனை தகவல்களும் நமக்கு இன்னும் கெடைக்கல. பரிணாம வளர்ச்சியில உருவான எத்தனையோ உயிரினங்கள் இன்னும் நம்மால அறியப்படாமலே இருக்கு. இந்த செல் கூட அப்படிப்பட்ட ஒண்ணுதான்.   இதுமாதிரியான கண்டுபிடிப்புகள் பரிணாம வளர்ச்சியில் விட்டுப்போன தகவல்களை தெரிஞ்சிக்க ரொம்பவே உதவியா இருக்கும். ஸோ, மக்களே சில சுவாரஸ்யங்கள் பகுதியில இந்த சுவாரஸ்யமும் உங்களுக்கு பிடிச்சிருக்கும்ன்னு நெனக்கிறேன். என்ஜாய் பண்ணுங்க. அடுத்த பதிவுல சிந்திப்போம்.

Wednesday, March 27, 2013

சில சுவாரஸ்யங்கள்: எய்ட்ஸ் இனி இல்லை...!!!

மக்களே...!!!

சில சுவாரஸ்யங்கள் பகுதி எழுதி கொஞ்ச நாள் ஆயிடுச்சி இல்ல..? இந்த பகுதிக்கான விஷயம் எதுவும் சரியா மாட்டல. வேற எந்த காரணமும் இல்லை. இப்போ, நான் சொல்ல போற விஷயம் என்னன்னா, விஞ்ஞானிகள் உயிர்கொல்லி நோயான எய்ட்ஸ்க்கு கிட்டத்தட்ட மருந்து கண்டுபிடிச்சிட்டாங்க.  இன்னைக்கு பதிவை பார்க்கலாமா?

முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு, முழுமையா குணமடைந்த முதல் எய்ட்ஸ் கேஸ் பதிவு பண்ணப்பட்டிருக்கு. இந்த மாத முதல் வாரத்தில் அமெரிக்காவின் மிசிசிப்பி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஜான் ஹோப்கின்ஸ் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் மஸ்ஸாசூசெட்ஸ் மெடிக்கல் ஸ்கூல் பல்கலைக்கழகத்தை (Johns Hopkins Children's Center, the University of Mississippi Medical Center and the University of Massachusetts Medical School) சேர்ந்த விஞ்ஞானிகள் இதை அமெரிக்காவில் நடந்த ஒரு கருத்தரங்கில் அறிவிச்சிருக்காங்க. இவங்க அறிக்கையின் படி, பிறந்து சில நேரங்களே ஆன, பிறக்கும் போதே எய்ட்ஸ் நோயுடன் பிறந்த குழந்தைக்கு முப்பது மணி நேர இடைவிடாத சிகிச்சை மூலம் இந்த நோய் முற்றிலுமாக குணப்படுத்தப்பட்டுள்ளது. 

இதுபோல பிறக்கும்போதே எய்ட்ஸ் நோயுடன் இருந்த குழந்தை குணமடைவது இதுவே முதல் முறை. டாக்டர். டிபோரா பெர்சோத், வைரஸ் அறிவியல் நிபுணர் (தமிழாக்கம் சரியான்னு தெரியல, தவறா இருந்தா சொல்லுங்கப்பா) - DR. DEBORAH PERSAUD, M.D., a virologist at Johns Hopkins Children's Center, டாக்டர். கேத்தரின் லுசுரியாகா, நோய் எதிர்ப்பியல் நிபுணர் - DR. KATHERINE LUZURIAGA, M.D., an immunologist at the University of Massachusetts Medical School, இவங்க தான் விஞ்ஞானிகள் குழுவுக்கு தலைமை தாங்கி இந்த ஆராய்ச்சியை செய்திருக்காங்க. டாக்டர். ஹன்னாஹ் கேய், எய்ட்ஸ் நோய் சிகிச்சை நிபுணர்  - Hannah Gay, M.D., a pediatric HIV specialist at the University of Mississippi Medical Center, விஞ்ஞானிகள் தயாரிச்ச மருந்தை கொண்டு சிகிச்சை செய்திருக்கார். 

அந்த குழந்தையின் அம்மா ஒரு எய்ட்ஸ் நோயாளி. அதனால அந்த குழந்தை கருவில் இருக்கும்போதே எய்ட்ஸ் நோய் தாக்கியிருக்கு. அப்புறம் பிறந்தே சில மணி நேரங்களிலேயே விஞ்ஞானிகள் சிகிச்சையை ஆரம்பிச்சிருக்காங்க. முப்பது மணி நேரம் இடைவிடாத கண்காணிப்புல, குறிப்பிட்ட கால இடைவெளியில தவறாம மருத்துகள் கொடுக்கப்பட்டு இருக்கு. பிறகு சோதனை செய்து பார்த்தப்போ நோயின் கடுமை மற்றும் HIV வைரஸ் அளவு குறைஞ்சிடுச்சி. பிறகு தொடர் சிகிச்சையை நிறுத்திட்டு, 10 மாதங்கள் குறிப்பிட்ட கால அளவுக்கு ஒரு முறை அந்த குழந்தைக்கு மருந்துகள் கொடுத்திருக்காங்க. அதற்க்கு அப்புறம் சிகிச்சையை நிறுத்திட்டு. 18 மாதங்கள் கண்காணிப்புல வெச்சி, குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒரு முறை குழந்தையின் இரத்த மாதிரிகளை எடுத்து சோதனை செய்திருக்காங்க. ஆனா HIV வைரஸ் மறுபடியும்  வளரல. 

வழக்கம் போல, இதையெல்லாம் ஏத்துக்காத சிலர், இரத்த மாதிரிகளை சோதனை செய்யும்போது சோதனைகள்ள ஏதாவது தப்பு வந்திருக்கும் அப்படின்னு எல்லாம் பேசிட்டு இருக்காங்க. எது எப்படியோ, இதனால சில பேருக்காவது நல்லது நடந்தா சந்தோசமே...!!! அடுத்த பதிவுல சிந்திப்போம்.

Tuesday, March 26, 2013

தொடர்: பரிணாமம் - EVOLUTION: பூமியின் தோற்றம் - FORMATION OF EARTH - 1

மக்களே...!!!

கொஞ்ச நாளாவே கவனிச்சிட்டு வரேன். நம்ம வலைப்பூவை படிக்கும் வாசகர்களோட எண்ணிக்கை கணிசமான அளவுக்கு கூடியிருக்கு. ஒரு நாளைக்கு சராசரியா 200 தடவை நம்ம வலைப்பூ படிக்கப்படுகிறது. அமெரிக்கா மாதிரியான மேற்கத்திய நாடுகள் மட்டும் இல்லாம, டெல்லி, மகாராஷ்டிராவிலயும், ஈரோடு, சிவகாசி, சேலம், கன்னியாகுமரி என கடைக்கோடி தமிழகம் வரை எல்லா பகுதிகள்ல இருந்தும் வாசகர்கள் படிக்கிறாங்க. ஒரு சினிமாவோ, இல்லை அரசியலோ அல்லது கதை கவிதை அப்படின்னு எந்த ஒரு என்டர்டெயின்மென்ட்டும் இல்லாத, முழுமையான அறிவியல் பேசும் வலைப்பூவுக்கு இந்த வரவேற்பு உணமையிலேயே மிகப்பெரியது தானே. இதையெல்லாம் பார்க்கும்போது உங்க ஆர்வத்துக்கு தீனி போடக்கூடிய அளவுக்கு நெறைய எழுதனுமே அப்படிங்கற கவலை வர ஆரம்பிச்சிடுச்சி. முடிஞ்ச வரை நெறைய எழுத முயற்சி பண்றேன். இன்னைக்கு நான் ரொம்ப நாள் முன்னாடியே எழுதறதா அறிவிச்ச தொடர் '' பரிணாமம் '' ஆரம்பிக்கிறதா இருக்கேன். இந்த தொடர், எதோ அறிவிச்சோம், எழுதினோம்ன்னு இல்லாம ஒரு முழுமையான, அனைத்து விதமான தகவல்களை உள்ளடக்கின முழுமையான தொடரா இருக்கணும் அப்படிங்கறது என்னோட திட்டம். ஆனா, தேவையான அளவுக்கு தகவல்களை சேகரிக்க போதிய நேரமின்மை, என்னோட சோம்பேறித்தனம் இப்படி சில பல காரணங்களால அப்புறம், அப்புறம்ன்னு தள்ளிப்போட்டுட்டே வந்தேன். ஒரு வழியா இன்னைக்கு ஆரம்பிச்சிட்டாச்சி. வாங்க இன்னைக்கு பதிவுக்கு போகலாம்.

பரிணாமம் பத்தி எழுதணும் அப்படின்னா நேரிடையா பரிணாமம் பத்தி மட்டும் சொல்லிட்டு சொல்லிட முடியாது. ஏன்னா, பின்னாடி நமக்கு வரக்கூடிய சந்தேகங்களுக்கு பதில் கிடைக்காது. ஒரு விஷயத்தை பத்தி முழுமையா தெரிஞ்சிக்கணும் அப்படின்னா அந்த விஷயம் மட்டும் இல்லாம அதனோட தொடர்புடைய எல்லா விசயங்களையும் கண்டிப்பா தெரிஞ்சிக்கணும். அப்போ தான் அந்த தகவல்கள் முழுமை அடையும். இந்த வகையில் - பரிணாமம் அப்படின்னா அது வெறும்  இந்த பூமியில் உள்ள உயிரினங்களோட பரிணாமம் மட்டும் இல்லாம அதனோட தொடர்புடைய இந்த பூமி, தண்ணீர், காற்று, வேதிப்பொருட்கள், காடு, மலைன்னு ஒரு சின்ன துரும்பு கூட விடாம அத்தனையும் நாம பார்க்கணும். தெளிவா சொல்லனும்னா உயிரினங்கள் அதனோட பரிணாமம் அப்படின்னு சொல்லனும்னு அது எப்படி உருவாச்சின்னு பார்க்கணும், அதே அளவுக்கு அது உருவான இடம் எது, இடத்தோட தன்மை, அந்த இடத்துல இருந்த எது ஒரு உயிரினம் உருவாக காரணமா இருந்ததுன்னு எல்லாமே பார்க்கணும். அதுதான் ஒரு முழுமையான அலசலா இருக்கும். அதை தான் நாம இங்க பண்ண போறோம்.



பரிணாமம் அப்படின்னா என்ன? - இது தான் நமக்கு முன்னாடி இருக்கிற முதல் கேள்வி. ஒரு இனத்துக்குள்ள காலம் காலமா, பரம்பரை பரம்பரையா இருந்துவர குணத்தில் ஏற்படும் நிலையான மாற்றம். இங்க குணம் அப்படிங்கறது குறிப்பாக அந்த இனத்துக்குன்னு இருக்கும் தோற்றத்தை குறிக்கும்.  அப்படி உருவாகிற மாற்றத்துக்கு என்ன வேணும்னாலும் காரணமா இருக்கலாம். முக்கியமா, திடீர்ன்னு உருவாகும் அந்த மாற்றம் காலப்போக்கில் அப்படியே நிலைச்சிடும்.    அடுத்த அடுத்த பரம்பரையில் தொடரும். ஸோ, ஒரு உயிரினம் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள தனக்கு தானே உருவாக்கிக்கொள்ளும் மாற்றங்கள், புது குணங்கள் இதுக்கு பேருதான் தான் பரிணாமம், பரிணாம வளர்ச்சி.


ஸோ, நாம மொதல்ல இந்த பிரபஞ்சம் அப்புறம், இந்த பூமி எப்படி உருவாச்சி அப்படிங்கறதுல இருந்து ஆரம்பிக்கலாம்.  நம்ம பூமியோட வரலாறு சரியா 4.5 பில்லியன் வருசங்களுக்கு முன்னாடியில் இருந்து ஆரம்பிக்கிறது. இந்த நாலாயிரத்தி ஐநூறு பில்லியன் (10 இலட்சம் - 1 மில்லியன், 10 மில்லியன் - 1 பில்லியன்) அப்படிங்கற வரைக்கும் நம்ம விஞ்ஞானிகள் யூகிச்சிருக்காங்க. அதுக்கு முன்னாடி எவ்வளவு வருசங்கள் அப்படியே இருந்ததுன்னு யாருக்கும் தெரியாது.

வானத்துல தான்தோன்றிதனமா சுத்திட்டு இருந்த விண்கற்கள் ஒன்னுக்கொன்னு மோதி உடைஞ்சி இப்படியே போயிட்டு இருந்த கால கட்டம். அப்போவெல்லாம் இந்த உயிர் வேதிப்பொருட்கள் கார்பன், நைட்ரஜன் இதெல்லாம் எதுவுமே கிடையாது. எரிநட்சத்திரம் அல்லது விண்கற்கள் ஒன்னுக்கொன்னு மோதிக்கிட்டப்போ எப்படியோ அதுல இருந்த வேதிப்பொருட்கள் ஒன்னுக்கொன்னு கலந்து ஒரு இடத்துல கெடைச்சிருக்கு. அப்படி வந்தது தான் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன். இப்படியே சின்ன சின்ன அளவுல நடந்திட்டு இருந்த மோதல்கள் அதன் மூலம் வெளியான வாயுக்கள் கதிர்கள் அப்படின்னு எல்லாம் சேர்ந்து எப்படியோ ஒரு நட்சத்திர மற்றும் கோள்களோட தொகுப்பை ( 200-400 மில்லியன் கோள்களும், நட்சத்திரங்களும் சேர்ந்த தொகுப்பு) உருவாக்க அதுதான் நம்ம பிரபஞ்சம். அதுல ஒரு புள்ளி தான் நம்ம சூரியனும் அதனை சேர்ந்த கோள்களும். விண்கற்களுக்குள்ள  நடந்த ஒரு பெரும் மோதல், அதனால வெளியான சக்தி எல்லாம் சேர்ந்து ஒரு நெருப்பு கோளத்தையும், அதுக்கு ஒரு ஈர்ப்பு சக்தியையும் உருவாக்க அது தான் பின்னாளில் ஒரு சூரியனா உருவெடுத்தது, அது தான் நம்ம சூரிய குடும்பத்தின் ஆரம்பம்.

சூரியனுக்கும் நம்ம பூமி மாதிரியே ஈர்ப்பு சக்தி இருக்கு. இந்த ஈர்ப்பு சக்தி வந்ததும் அதனுடைய எல்லைக்குள்ள வந்த எல்லா விண்கற்களையும் தன்னை நோக்கி இழுக்க இன்னும் ஒரு பெரிய மோதல் நடந்து அங்க. இது தான் சூரிய குடும்பத்துல இருக்கும் மத்த கோள்கள் உருவான அடிப்படை. பல மில்லியன் ஆண்டுகள் வரலாறு கொண்டது நம்ம பிரபஞ்சம் . யோசிச்சி பாருங்க பூமிக்கே 4.5 பில்லியன் வருஷம் வரலாறுன்னா சூரியனுக்கு எவ்வளவு பில்லியன் வருஷ வரலாறோ ? யாருக்கு தெரியும்?. இப்படி உருவான சூரியன்ல இருந்து மிகப்பெரிய மோதல் காரணமா உடைஞ்சி வெளிய வந்தது தான் பூமி, மத்த கோள்கள். ஆனா, பூமி அப்போ ஒரு சின்ன விண்கல் அளவுக்கு தான் இருந்ததிருக்கு. ஆனா, ஈர்ப்பு விசையோட. நம்ம பூமி மட்டும் இல்லாம நம்ம பால்வெளி மண்டலத்துல இருக்கிற மற்ற கோள்கள் கூட சூரியன்ல இருந்து விண்கற்கள் மோதின காரணமா தனியா உடைஞ்சி வந்தவை. தனியா வந்த இந்த கோள்கள் அப்போ ஒரு பெரிய உருகின கொதிக்கிற பாறைக்குழம்பு அவ்ளோதான். இப்போ கடல் முழுக்க தண்ணியா இருக்கே, அங்க தண்ணிக்கு பதிலா கொதிக்கிற நெருப்பு குழம்பா இருந்தா எப்படி இருக்கும்? அது தான் அப்போ பூமி இருந்த நிலை. வேற எதுவும் அங்க கெடையாது. கடுமையான கண்கொண்டு பார்க்க கூட  முடியாத அளவுக்கு நெருப்பு குழம்பு. மிக மிக சின்னதா இருந்த பூமி தன்னோட ஈர்ப்புவிசையை பயன்படுத்தி பக்கத்துல இருந்த சின்ன சின்ன கற்களையும், சிறு சிறு கோள்களையும் ஈர்க்க, கொஞ்சம் கொஞ்சமா பெருசா ஆனது. நம்ம ஒரு பூமி பல நூறு சின்ன சின்ன கோள்கள், எரி நட்சத்திரங்கள் சேர்ந்ததுன்னு சொல்றாங்க. இந்த மோதல்கள் காரணமா, அப்போ நம்ம பூமியில சில வேதிப்பொருள்களும் உருவாச்சி. அது கார்பன் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன். உருவான அது இப்படியே ஒரு 500-600 வருசங்கள் இருந்திருக்கு. அப்போ நம்ம பூமியில தண்ணி ஆக்சிஜன் எல்லாம் கெடையாது. பூமி சூரியன்கிட்ட ரொம்ப நெருங்கின இடத்துல இருந்தது. அதனால நம்ம பூமியே நெருப்பு கோளமாதான் இருந்தது என்ன ஒன்னே ஒன்னு மத்த விண்கற்கள் விழுந்துட்டே இருந்ததால அளவு மட்டும் பெருசா ஆகிட்டு இருந்தது. அதோட ஈர்ப்பு விசையும் ரொம்ப அதிகம்.



இப்போ அடுத்த திருப்பம் - அப்போ இருந்த சனி, இன்னொரு கோள் அளவுல ரொம்ப பெருசு - கிட்டத்தட்ட 11 மடங்கு, சூரியன்ல இருந்து ரொம்ப தள்ளி பூமிக்கு அடுத்தப்படியா இருந்தது. அதனால நெருப்பு கோளம் ஆற ஆரம்பிச்சிருந்த நிலையில நம்ம பூமி மேல வினாடிக்கு பத்து மைல் வேகத்துல வந்து மோத, நல்லா கொதிக்கிற பாறை குழம்பா இருந்த பூமி சிதறிடுச்சி. கொதிக்கிற பாறை குழம்பு மற்றும் பூமியில இருந்த வாயுக்களும் பிரபஞ்ச வெளியில சிதற, அந்த சிதறல்களை தன்னோட ஈர்ப்பு சக்தி மூலமா சனி இழுத்து கொண்டது. அது தான் இன்னைக்கு நாம சனி கிரகத்தை சுத்தி பார்க்கிற சிவப்பு வளையம். இந்த மோதல்னால நம்ம பூமிக்கு கெடைச்ச நன்மை ரெண்டு,

1. பூமி சூரியன்ல இருந்து ரொம்ப தூரம் தள்ளி வந்தது
2. பூமியில இருந்து சிதறின ஒரு துண்டு நிலாவாக மாறியது. 

முதல்ல உருவான நிலா பூமிக்கு மிக பக்கத்துல இருந்ததாம். அதனால நம்ம பூமியோட ஈர்ப்பு விசையில நெறைய மாற்றங்கள் நடந்து, இதன் காரணமா உருவான ஒரு சக்தி நம்ம பூமிக்கு மிக பலமான புவி ஈர்ப்பு விசையை உருவாக்கி குடுத்திச்சி.

இப்போ, பூமி சூரியன்ல இருந்து ரொம்ப தூரமா தள்ளி வந்ததால இப்போ பூமி நெருப்பு குழம்பு நிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமா ஆற, வப்பநிலையும் குறைஞ்சிட்டே வந்தது. அதே சமயம் புவி ஈர்ப்பு விசை அதிகரிச்சதால நம்ம பூமி அண்டவெளியில சுத்திட்டு இருந்த மத்த கோள்களையும், விண்கற்களையும் ஈர்க்க, அதுவும் நம்ம பூமியில வந்து விழுந்தது. இது தான் நம்ம பூமியோட வரலாறுல நேர்ந்த அடுத்த திருப்பம்.

3900 மில்லியன் வருசங்கள் முன்பு - அது என்னன்னா அப்படி வந்து விழுந்த வின்கற்கள்ல இருந்தது என்ன தெரியுமா - உறைஞ்சி போன தண்ணீர். பனிக்கட்டி. பல நூறு வருசங்களா தொடர்ந்து வந்து விழுந்திட்டே இருந்த பனிக்கட்டி கொஞ்சம் கொஞ்சமா பூமியை நிரப்ப ஆரம்பிக்க இப்போ பூமி முழுக்க தண்ணீர். இது தான் கடல் உருவான கதை. ஆனா, மேல்பக்கம் மட்டும் தான் தண்ணி. உள்ளே ஓடிட்டு இருந்தது நெருப்பு குழம்பு. அது வெளியிடும் வாயுக்கள். இன்னும் ஒரு நூறு பில்லியன் வருடங்கள் கடக்க, இதுக்கு முன்னாடி பூமியே நெருப்பு குழம்பா இருந்ததால அதுல இருந்து வெளியேறும் வாயுக்கள் எளிதா வெளியேறிடும். இப்ப பூமியோட மேற்பக்கம் கெட்டிப்பட அதுக்கும் மேல தண்ணீர் நிரம்பி இன்னும்  கடினமாகிட்டது. இதனால உள்ளேயே தங்கிவிட்ட வாயுக்கள் ஒரு கட்டத்துல அழுத்தம் தாங்காம பீறிட்டு பூமிய உடைச்சிட்டு வெளிய வந்தது தான் எரிமலை. மலைகளும், நிலமும் உருவான கதை இது. இந்த மாதிரியான நிகழ்வுகள் ஒரு 300-400 மில்லியன் வருடங்கள் தொடர்ந்து நடத்திட்டு இருந்தது. அத்தனை வருடங்கள் தொடர்ந்து வெளியேறின பாறை குழம்புகள் எல்லாம் தண்ணி காரணமா இறுகி ஒண்ணா சேர்ந்து பின்னாளில் நிலமாக மாறியது.

இப்போ பாருங்க -

4500 மில்லியன் வருடங்கள் முன்பு  - பூமி ஏறும் நெருப்பு குழம்பு
3900 மில்லியன் வருடங்கள் முன்பு - தண்ணீர் உருவானது - கடல்
3800 மில்லயன் வருடங்கள் முன்பு  - நிலம் உண்டானது

நீரும் நிலமும் கொண்ட இந்த பூமியில மறுபடியும் விண்கற்கள் தாக்குதல். இப்போ விழுந்த இவை எல்லாம் கடலுக்குள்ள போய் இன்னொரு வேதிப்பொருளை வெளியிட்டது அது - கார்பன். கார்பன் முதல்ல கிடையாது. அப்புறம் தான் வந்தது. வான வெளியில் நடந்த ஒரு மிகப்பெரும் மோதல் அல்லது மிகப்பெரும் வெடிப்பு காரணமாத்தான் இந்த பூமி உருவாச்சி அப்படிங்கறதை மிக சரியாக விளக்கினது BIG BANG THEORY - பெரும் மோதல் தியரம் அல்லது பெரும் வெடிப்பு தியரம் அப்படின்னு சொல்லுவாங்க. இப்போ பூமியில தண்ணி இருக்கு, நிலம் இருக்கு அதோட, நைட்ரஜன், கார்பன் டை ஆக்சைடு மற்றும் கார்பன் எல்லாம் இருக்கு. பூமி உருவான கதை இவ்ளோதான். பரிணாமம் பத்தி படிக்கிற இந்த தொடர்ல முதல் படி கடக்கிறோம்.

இங்க இன்னொரு விசயமும் சொல்ல ஆசைப்படறேன். அது என்னன்னா, இந்த பிரபஞ்சத்துல நம்ம இடம் எது? இந்த பிரபஞ்சம் அப்படிங்கறது எவ்வளவு பெருசு? நம்ம பூமி தவிர வேற என்னவெல்லாம் இருக்கு?

இந்த தகவல்கள் நம்ம தொடருக்கு கொஞ்சம் சம்பந்தம் இல்லாததுன்னாலும் கொஞ்சம் அதிகமா தெரிஞ்சிக்கறது ஒன்னும் தப்பில்லைன்னு நெனக்கிறேன்.
முதல் விஷயம் - நம்ம பிரபஞ்சம் அப்படிங்கறது சூரியன், 9 கோள்கள் அதோட பெயர் தெரியாத விண்கற்கள், நட்சத்திரங்கள், நிலா, நம்ம சூரிய குடும்பம் மாதிரி எத்தனையோ சூரிய குடும்பங்கள் இதுவெல்லாம் சேர்ந்தது. நம்ம பூமிக்கு ஒரு நிலா இருக்கிற மாதிரி, சூரிய குடும்பத்தோட மற்ற கிரகங்களுக்கு நிலா இருக்கான்னு ஒரு சந்தேகம் வந்தது. தகவல்கள் எதுவும் கிடைக்குதான்னு தேடிப்பார்த்தப்போ கிடைச்சது இன்னும் சுவாரஸ்யமான தகவல்கள். நம்ம பூமிக்கு ஒரு நிலா இருக்கிற மாதிரி நம்ம சூரிய குடும்பத்தில் இருக்கிற மற்ற கோள்களில் (சிலதுக்கு மட்டும்) அதுக்குன்னு தனியா நிலா இருக்கு.

1. மார்ஸ் - MARS - செவ்வாய் - 2 நிலாக்கள்
2. ஜுபிடர் - வியாழன் - JUPITOR - 63 நிலாக்கள்   
3. SATURN - சனி - 62 நிலாக்கள் 
4. URANUS - யுரேனஸ் - 27 நிலாக்கள்
5. NEPTUNE - நெப்டியூன் - 13 நிலாக்கள் 

ஓகே.... விசயத்துக்கு வருவோம். சூரியனுடைய ஈர்ப்பு விசைக்கு கட்டுப்பட்டு, ஒரு நீள்வட்டப்பதையில சூரியனை சுத்திவரும் பூமி மற்ற கோள்கள் அதனோட சேர்ந்து தோராயமா 200-400 மில்லியன் நட்சத்திரங்களும், பெயர் தெரியாத கோள்களும், நம்ம சூரிய குடும்பம் மாதிரி எத்தனையோ சூரிய குடும்பங்கள் இப்படி எல்லாம் சேர்ந்தது நம்ம பிரபஞ்சம். இதை MILKEY WAY - பால்வெளி மண்டலம் அப்படின்னு சொல்லுவாங்க.



நம்ம பிரபஞ்சமான பால்வெளி மண்டலத்தோட பரப்பளவு மட்டுமே 120000 ஒளி ஆண்டுகள். நம்ம பிரபஞ்சத்துக்கு மிக அருகில் இருக்கிற பிரபஞ்சம் 1.77 மில்லியன் ஒளி ஆண்டுகள். மிக குறைந்தபட்ச தூரமே இவ்ளோன்னா அப்புறம் மத்ததெல்லாம்? நெனச்சி பார்க்கவே தலை சுத்துது. நம்ம சூரிய குடும்பத்தின் மத்த கோள்கள் பூமியில இருந்து எவ்ளோ தூரம் இருக்கும் ? நான் சொல்றதுலயும் விஷயம் இருக்கு... எவ்வளவோ பிரபஞ்சத்துல நம்மளோடதும் ஒரு பிரபஞ்சம், அதுல இருக்கிற பல இலட்சக்கணக்கான கோள்களில் நம்ம பூமியும் ஒன்னு. அந்த பூமியில எங்கயோ ஒரு புள்ளி நாம.


பூமியில இருந்து மற்ற கோள்களோட தூரம் -

1. புதன் - MERCURY - 57,000,000 மைல்கள்
2. வெள்ளி - VENUS - 23,700,000 மைல்கள்
3. செவ்வாய் - MARS - 35,000,000 மைல்கள்
4. வியாழன் - JUPITER - 500,000,000 மைல்கள்
5. சனி - SATURN - 746,000,000 மைல்கள்
6. யுரேனஸ் - URANUS - 1,687,000,000 மைல்கள்
7. நெப்டியூன் - NEPTUNE - 2,680,000,000 மைல்கள்
8. புஃளூட்டோ - PLUTO - 94.5 மைல்கள்


வானவெளியில் நம்ம பால்வெளி மண்டலம் மாதிரி இன்னும் பல ஆயிரக்கணக்கான பிரபஞ்சங்கள் இருக்கு. அதுல பல நம்ம பிரபஞ்சம் மாதிரியே சூரியன் அதுக்கூட சில கோள்கள் அப்படின்னு ஒரே மாதிரியாவும், பல வேற மாதிரியும் இருக்கு.   யாருக்கு தெரியும் ? அதுல சிலதுல நம்ம மாதிரியே உயிரினங்கள் கூட இருக்கலாம். மற்ற கிரகவாசிகள் பத்தி இதுவரைக்கும் முறையா பதிவு பண்ணப்பட்ட தகவல்கள் எதுவும் கிடையாது. ஆனாலும், அங்க பார்த்தேன்,  இங்க பார்த்தேன்னு நெறைய தகவல்கள், வதந்திகள் உலவுது.



வேற கிரகங்களில் யாரும் இருக்காங்களா (ஒரு வேளை இருந்தால்) அப்படின்னு கண்டுபிடிக்க ஒரு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கு, NASA - நாசா (அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்) மூலமா. அது என்னன்னா, ஒரு செயற்கைகோள்ல பூமி அப்படின்னு ஒரு கிரகத்துல மனிதர்கள் அப்படிங்கிற உயிர்கள் வசிக்கிறதையும், அவங்களை நட்பு வேண்டி தொடர்பு கொள்றவங்க தொடர்பு கொள்ளலாம் அப்படின்னு உலகத்தில் இருக்கிற எல்லா மொழிகள்லயும் பதிவு பண்ணி வானத்தில் ஒலிபரப்பரப்பிட்டு இருக்காங்க ரொம்ப வருசமா. இது இன்னமும் போயிட்டு தான் இருக்கு.



இன்னைக்கு இது போதும்ன்னு நெனக்கிறேன். பூமியை பத்தின விரிவான தகவல்களோட இந்த தொடரின் அடுத்த பகுதியில சிந்திப்போம்.


Tuesday, March 19, 2013

செல் அமைப்பு: குளோரோபிளாஸ்ட்டின் கட்டமைப்பு- STRUCTURE OF CHLOROPLAST- 8

மக்களே...!!!

எப்படி இருக்கீங்க...? செல் அமைப்பு தொடர்ல செல் நுண்ணுறுப்புகள் பத்தி படிச்சிட்டு இருக்கோம். போன பதிவுல மைட்டோகாண்ட்ரியா பத்தி சொல்லியிருந்தேன். எப்படி இருந்தது...? படிச்சவங்க உங்க கருத்துகளை மறக்காம எனக்கு எழுதுங்க. இதுல ஒரு விஷயத்தை நான் மறுபடியும் ஞாபகப்படுத்த விரும்பறேன். செல் அமைப்பு படிக்கிற நாம எல்லா வகையான செல் நுண்ணுறுப்புகளையும் மொத்தமா படிக்கிறோம். வேறு தாவர செல் நுண்ணுறுப்புகள் அல்லது வெறும் விலங்கு செல் நுண்ணுறுப்புகள் அல்லது பேக்டீரியா செல் நுண்ணுறுப்பு இப்படி வகைப்படுத்தி படிக்கல. மொதல்ல எல்லா செல் நுண்ணுறுப்புகளையும் பார்க்கலாம். இந்த வகைப்பாடுகளை பத்தின தகவல்களை, பின்னாடி எல்லாம் சொல்லி முடிச்சிட்டு கடைசியா பார்க்கலாம்.   சரியா...?

ஒரு தாவர செல்லுக்கும் விலங்கு செல்லுக்கும் நடுவுல இருக்கிற வேறுபாடு, ஆனா அதனோட அமைப்பு இல்லாம சொல்லணும் அப்படின்னா சொல்றதுக்கு ஒரு விஷயம் - தாவர செல் அதனோட உணவை தானே தயாரிச்சிக்கும். ஆனா, விலங்கு செல்லால் அது முடியாது. (இங்க நான் குறிப்பிட்டு சொல்லவேண்டிய விஷயம் என்னன்னா - இங்க நான் உணவுன்னு சொன்னது நேரிடையா உணவுதான். அது சக்தி - ENERGY கிடையாது) தாவர செல்லும் விலங்கு செல்லும் தனக்கு தேவையான சக்தியை தானே தயாரிச்சிக்கும். ஆனா, அதற்கு மூலப்பொருளான குளுக்கோஸ் - இந்த குளுக்கோஸை ஒரு தாவர செல் தானே தயாரிக்கக்கூடிய ஆற்றலை கொண்டிருக்கு. ஆனா விலங்கு செல்லுக்கு தனியா சாப்பாடு மூலமாதான் இந்த குளுக்கோஸ் கிடைக்கும். அந்த வேலை நடக்கிற இடம் குளோரோபிளாஸ்ட். 

செல் அமைப்பு வரிசையில அடுத்ததா நாம பார்க்க இருக்கறது குளோரோபிளாஸ்ட் - CHLOROPLAST. ஒரு தாவரத்தின் எல்லா பச்சை நிற இடமும் இந்த குளோரோபிளாஸ்ட் நிரம்பியது. இது பச்சை நிறத்துல இருக்க காரணம் இதுக்குள்ள நிரம்பியிருக்கிற நிறமி - குளோரோஃபில் - CHLOROPHIL. இந்த பச்சை நிற நிறமி தான் சூரிய ஒளியை கிரகிச்சி உணவு தயாரிக்கும் வேலைக்கு குடுக்கும். குளோரோபிளாஸ்ட் ஒரு நீள்வட்ட இரட்டை சவ்வு மூடிய, செல் நுண்ணுறுப்பு. இந்த இரு சவ்வுகளும் மைட்டோகாண்ட்ரியாவுல இருக்கிறது மாதிரியே இரட்டை கொழுப்பு படலம் அமைப்பு கொண்டது. மைட்டோகாண்ட்ரியால இருக்கிறது மாதிரியே இரு சவ்வுகளுக்கு நடுவுல இடைவெளி இருக்கு. அது INTERMEMBRANE SPACE அப்படின்னு சொல்வாங்க.  வெளிப்பக்க சவ்வு அதாவது சைட்டோபிளாசத்துக்கு பக்கமா இருக்கும் சவ்வு வழக்கமா கொஞ்சம் எல்லா வகையான (அயனிகள், சர்க்கரை மூலக்கூறுகள்) வேதிப்பொருட்களையும் உள்ளே போக அனுமத்திச்சிடும். ஆனா, உட்பக்க சவ்வுக்கிட்ட இந்த வேலை நடக்காது.   ஒவ்வொரு வேதிப்பொருளும் அதுக்குன்னு ஒரு TRANSPORTER - இடமாற்றி அல்லது ஊர்தி (எப்படி வேணும்னாலும் வெச்சிக்கலாம்) இருக்கும்.  அதனோட உதவியோடத்தான் உட்பக்க சவ்வை கடந்து குளோரோபிளாஸ்ட்டோட நடுபகுதிக்கு போக முடியும். சில ALGAE - ஆல்கே - பாசிகள் வகை தாவரங்கள்ல இருக்கிற குளோரோபிளாஸ்ட்டுகள் இரண்டுக்கும் மேற்ப்பட்ட சவ்வுகளோடு இருக்கும்.

இரட்டை சவ்வு மூடிய குளோரோபிளாஸ்ட் ஸ்ட்ரோமா - STROMA அப்படின்னு சொல்லப்படற நீர்மம் நிரம்பியிருக்கும். இந்த ஸ்ட்ரோமாவுல தான் குளோரோபிளாஸ்ட்டின் வேலையை செய்ய தேவையான எல்லா என்சைம்களும், புரோட்டீன்களும் கலந்திருக்கும்.  குளோரோபிளாஸ்ட்டும் முன்னாளில் பேக்டீரியாவா இருந்தது இல்லையா...!!!!! அதனால  மைட்டோகாண்ட்ரியா மாதிரியே குளோரோபிளாஸ்ட்டும் அதுக்குன்னு தனி மரபு அணுக்கள் (DNA, RNA), புரோட்டீன் தயாரிக்க தேவையான புரோட்டீன்கள் (ரைபோசோம்) வெச்சிருக்கும்.



குளோரோபிளாஸ்ட்டோட நடுவுல பார்த்திங்கன்னா நெறைய நாணயங்களை அடுக்கி வெச்ச மாதிரி அமைப்பு இருக்கும். வெளிய இருந்து பார்க்கும் போது அது வெறும் நாணயம் மாதிரி இருந்தாலும் ஒவ்வொரு அடுக்கும் அதுக்குள்ளே வெற்றிடம் மாதிரி திறந்ததா இருக்கும். இப்படி அடுக்கி வெச்ச அமைப்பு குளோரோபிளாஸ்ட் முழுக்க இருக்கும். ஒவ்வொரு அடுக்கும் ஒரு டியூப் மாதிரி ஒரு அமைப்பு மூலம் இணைக்கப்பட்டு இருக்கும்.

ஸோ, ஒரு முழு அடுக்குல இருக்கிற ஒற்றை நாணயம் மாதிரியான அமைப்பு - தைலக்காய்டு - THYLAKOID அப்படின்னு பேரு. இந்த தைலக்காய்டும் சவ்வு மூடிய அமைப்பு தான். இங்க இருக்கிற சவ்வுல தான் சூரிய ஒளியை கிரகிக்கும் சக்தி கொண்ட நிறமிகள் இருக்கும். இதுல இன்னொரு விசயமும் இருக்கு. இந்த தைலக்காய்டு சவ்வு அமைப்பு மேம்படுத்தப்படாத செல்களில் அதாவது பேக்டீரியா மாதிரியான செல்களில் வேற மாதிரியும், மேம்படுத்தப்பட்ட செல்களில் (சில உயர் வகை தாவரங்கள்) வேற மாதிரியும் இருக்கும்.

மேம்படுத்தப்படாத செல்கள் -     இதன் தைலக்காய்டு சவ்வில் ஆசிட்  
                                                                   புரோட்டீன்கள் (ACIDIC PROTEINS ) 
                                                                   நிரம்பியிருக்கும். இது pH 4.0 ல கூட நல்லா 
                                                                   வேலை செய்யும். 
மேம்படுத்தப்பட்ட செல்கள்  -      பாஸ்போ லிப்பிடுகள் மற்றும் கேலக்டோ 
                                                                  லிப்பிடுகள் (GALACTOLIPIDS) நிரம்பிய 
                                                                  தைலக்காய்டு சவ்வு  

பல நாணயங்கள் சேர்ந்த (அதாவது பல தைலக்காய்டுகள் சேர்ந்த அமைப்பு - GRANUM - கிராணம் அப்படின்னு பேரு. இந்த ஒவ்வொரு கிராணமும் ஒரு டியூப் மாதிரி ஒரு அமைப்பால் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த டியூப் லேமல்லே - LAMELLAE அப்படின்னு சொல்வாங்க.

ஒரு சாதாரண குளோரோபிளாஸ்ட் அமைப்பு இவ்ளோதான் இருக்கும். இங்க அமைப்பு மட்டும் தான் படிக்கிறோம். இதனோட சரியான வேலை என்ன, அது எப்படி வேலை செய்யும் அதெல்லாம் பின்னாடி பார்க்கலாம். நம்ம FACE BOOK கணக்கை தவறாம பாருங்க. ஸோ, அடுத்த பதிவுல சிந்திப்போம். 

Tuesday, March 12, 2013

செல் அமைப்பு: மைட்டோகாண்ட்ரியாவின் கட்டமைப்பு - MITOCHONDRIAL STRUCTURE - 7

மக்களே...!!!

இன்னைக்கு பதிவை சந்தோசமான செய்தியோட ஆரம்பிக்கிறேன். நான் இங்க எழுத ஆரம்பிச்சி 11 மாசம் ஆகுது. அதுக்குள்ளே நம்ம வலைப்பூ நம்ம ஊரு மற்றும் வெளிநாட்டு வாசகர்கள் மத்தியில ஓரளவு நல்லாவே போய் சேர்ந்திருக்கு. வெற்றிகரமா பதிமூணாயிரம் PAGE VIEWS தாண்டியிருக்கிறோம். உயிர்நுட்பம் வலைப்பூவிற்கு 50 பின்தொடர்பவர்கள் சேர்ந்திருக்காங்க. எந்த விதமான பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாத வெறும் உயிரியல் மட்டும் எழுதும் வலைப்பூவுக்கு இந்த அளவு வரவேற்பு நிஜமாவே என்னை பிரமிக்க வைக்கிது. நான் எழுதினாலும் இல்லைன்னாலும் தினமும் 60-70 வாசகர்கள் குறைந்தது ஒரு முறையாவது நம்ம வலைப்பூவுக்கு  வந்து போறாங்க. ரொம்ப சந்தோசமா இருக்கு. எல்லாம் நீங்க குடுக்கற வரவேற்பும், ஆதரவும் மட்டும் தான் காரணம். உங்க எல்லாருக்கும் என்னோட பணிவான வணக்கங்களையும், நன்றியையும் இந்த சந்தர்ப்பத்தில் சொல்லிக்கிறேன். நம்ம நான் வலைப்பூவுல எழுதறதை FACE BOOK கணக்குலயும் பகிர்ந்திட்டு வரேன். எல்லாரும் தவறாம படிச்சிட்டு உங்க கருத்துக்களை பின்னூட்டத்தில் சொல்லுங்க. முடிஞ்சா உங்களுக்கு தெரிஞ்ச சில பேருக்கு நம்ம வலைப்பூவை அறிமுகப்படுத்தி வைங்க.  அதன் மூலம் இன்னும் நெறைய பேருக்கு நம்ம வலைப்பூ போய் சேரும். 

ஓகே... விசயத்துக்கு வருவோம். செல் அமைப்பு தொடர்ல செல் சுவர் பத்தி நாம பார்த்திட்டு இருந்தது கொஞ்ச நாள் முன்னாடியே முடிஞ்சிடுச்சி. அடுத்ததா நாம பார்க்க இருக்கறது மைட்டோகாண்ட்ரியா பத்தி. அதுக்கு முனாடி தெரிஞ்சிக்க வேண்டிய சில விஷயங்கள் இருந்ததால அது பத்தி சொல்ல ஆரம்பிச்சேன். அதுவும் ஓரளவுக்கு முடிஞ்சது. இப்போ, இங்க மைட்டோகாண்ட்ரியாவை பத்தின முதல் அறிமுகம், அதன் அமைப்பு, வேலை, அதன் முக்கியத்துவம் அப்படின்னு அதனோட ஆதி முதல் அந்தம்  வரை ஒன்னு ஒண்ணா சொல்ல ஆரம்பிச்சா சரியா இருக்கும். இன்னைக்கு பதிவுக்கு போகலாம்.  

மைட்டோகாண்ட்ரியா - MITOCHONDRIA

மைட்டோகாண்ட்ரியா - இந்த பேரை நாம கேள்விபட்டிருப்போம். நம்ம வலைப்பூ ஆரம்பத்தில் இருந்து படிக்கிற வாசகர்களுக்கு ஓரளவுக்கு இதை பத்தி தெரிஞ்சிருக்கும். நம்ம செல்லோட POWER CENTER - பவர் சென்டர் (பவர் ஸ்டார் அல்ல) - சக்தி உருவாகும் இடம். நாம சாப்பிடும் சாப்பாடு செரிக்கப்பட்டு குளுகோஸ் மூலக்கூறுகளாக மாத்தினதுக்கு அப்புறம், உருவான குளுக்கோஸ் முழுமையான, நம்ம அன்றாட தேவைக்கான, சக்தியா மாற்றப்படறது இங்க தான். இந்த மைட்டோகாண்ட்ரியாவோட முன் வரலாறுன்னு பார்த்தா, பல ஆச்சர்யமான, சுவாரஸ்யமான விஷயங்கள் கொட்டிக்கிடக்குது. அதுல ரொம்ப ரொம்ப ஆச்சர்யப்பட வைக்கிற ஒரு ரெண்டு விசயங்களை நான் இங்க சொல்றேன். ஒன்னு, முதன் முதல்ல செல்கள் உருவாகும்போது அதுல மைட்டோகாண்ட்ரியா அப்படிங்கற ஒன்னு இல்லவே இல்லை. ரெண்டாவது, இப்போ இருக்கிற மைட்டோகாண்ட்ரியா நம்ம செல்லை சேர்ந்த செல் நுண்ணுறுப்பு கிடையாது, அது  முன்னொரு காலத்தில ஒரு தனி பேக்டீரியா. விலங்கு செல்கள்ல மைட்டோகாண்ட்ரியா அப்படின்னா தாவர செல்கள்ல இதே சக்தி தயாரிக்கும் வேலையை செய்யிறது குளோரோபிளாஸ்ட். இதுக்கும் அதே முன் வரலாறு தான். இது கண்டிப்பா உங்களுக்கு ஆச்சர்யமா இருக்கும். வாங்க...!!! அதை இன்னும் விளக்கமாவே பார்க்கலாம்.


முதல்ல இந்த பூமி உருவானப்போ பல லட்சக்கணக்கான வருசங்களுக்கு இங்க எந்த விதமான உயிர்களும் கிடையாது. சூரியன்ல இருந்து பிரிஞ்சி வந்த மிகப்பெரிய விண்கல் தான் இந்த பூமி. அதுக்கப்புறமா பல விண்கற்கள், நட்சத்திரங்கள் மூலமா பல  தாக்குதல்களை சந்திச்சி, எப்படியோ கொஞ்சம் கொஞ்சமா புவிஈர்ப்பு விசை உருவானதும், தனக்கு பக்கத்தில வர எல்லாத்தையும் தனக்குள்ள ஈர்த்து மிகப்பெரிய கோளமா, கோளா உருவானது. இப்படி பல கோள்களும், நட்சத்திரங்களும், விண்கற்களும் ஒன்னு சேர்ந்ததுல நம்ம பூமியில கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன் (ஆக்சிஜன் இல்லை) இந்த மூணும் நம்ம பூமிக்கு வந்திடுச்சி, ஆனா தனி தனியா இருந்தது. நாளடைவில் (அதுக்காக சில நாள் எல்லாம் இல்லை - சில ஆயிரம் வருடங்கள்) இதுல்லாம் ஒன்னுக்கொன்னு வினை புரிஞ்சி சில கூட்டு மூலக்கூறுகள்  உதாரணத்துக்கு - மீத்தேன் உருவானது. அதுல இருந்து கொஞ்சம் கொஞ்சமா பரிணாம அடைஞ்சி முதல் உயிருள்ள செல்கள் உருவானதுக்கு அப்புறமும் ஆக்சிஜன் இந்த பூமியில் இல்லை. அப்போ இருந்த  உயிர்கள் எல்லாமே ஆக்சிஜன் இல்லாமயே, தண்ணியில கெடைச்ச சில கூட்டு கரிம வேதி மூலக்கூறுகளை சாப்பிட்டு உயிர் வாழ்ந்திட்டு இருந்தது. இன்னொரு முக்கியமான விஷயம் - ஆக்சிஜன் தனியா கிடையாதே தவிர, தண்ணியாவும், கார்பன் டை ஆக்சைடுளையும் சேர்ந்து இருந்தது. ஆனா, ஆக்சிஜன் தனியா இருக்கிற வரைதான் அதால நமக்கு உபயோகம். இல்லன்னா நமக்கு எந்த விதமான பிரயோஜனமும் இல்லை.



அப்போ ஹைட்ரஜன், நைட்ரஜன் மற்றும் கார்பன் தனக்கு தானே தன்னிச்சையா வினைபுரிஞ்சி உருவான கூட்டு மூலக்கூறுகள்ள பல அமினோ அமிலங்கள், சர்க்கரை மூலக்கூறுகள் இப்படி எல்லாமே அடக்கம். தானா உருவான இது எல்லாமே அப்போ பூமி முழுக்க தண்ணி தானே இருந்தது, ஸோ,  அப்போ இருந்த தண்ணியில கரைஞ்சி இருந்தது. சரியா சொல்லணும் அப்படின்னா அப்போ இருந்தது வெறும் தண்ணி இல்லை, இது எல்லாம் வேதி மூலக்கூறுகளும் கரைஞ்சி உருவான லிக்விட் (LIQUID) கெமிக்கல் அப்படின்னு சொன்னா அதுதான் சரியா இருக்கும். இததான் அப்போ இருந்த ஒரு செல் உயிர்கள் சாப்பிட்டு, ஆக்சிஜன் இல்லாமையே ஜீரணம் பண்ணி உயிர் வாழ்ந்திட்டு இருந்தது. அதுவரைக்கும் எல்லா செல்களும் சாப்பாட்டுக்காக தன்னை சுத்தி இருந்த வாழிடத்தை நம்பி இருந்தது. அதன்மூலம் சாப்பிட்டு தன்னோட எண்ணிக்கையை பெருக்கிட்டு இருந்தது. இப்படி செல்கள் எண்ணிக்கை பெருக பெருக, புது விதமான பிரச்சனை வர ஆரம்பிச்சது. அது உணவுக்கான போட்டி. செல்களோட எண்ணிக்கை கம்மியா, கட்டுக்குள்ள இருந்த வரை எதுவும் ஒன்னும் பிரச்சனை இல்லை. பிறகு எண்ணிக்கை பெருக பெருக உணவுக்கான போட்டி அதிகமாக ஆரம்பிச்சது. இப்படி செல்கள் எண்ணிக்கை அதிகமாகி போட்டி அதிகமாக அதிகமாக செல்கள் தன்னோட பங்கு உணவை தக்க வைத்துக்கொள்ள ஏதாவது செய்தாக வேண்டிய நிலைமை. அதனால ஒவ்வொரு செல்லும் தான் இருந்த இடம், அந்த இடத்தில் கிடைத்த உணவு, இதை பொறுத்து, என்ன செஞ்சா தனக்கான உணவை கஷ்டப்படாம பெற முடியும்ன்னு பார்த்து அதுக்கேத்த மாதிரி தன்னோட பண்புகள், குணநலன்கள் எல்லாத்தையும் மாத்திக்க ஆரம்பிச்சது. இதை தான் நாம பரிணாமம் அப்படின்னு சொல்றோம். ஆனா, இந்த மாறுபாடு எல்லா செல்லுக்கும் ஒரே மாதிரி இருக்காது. இருக்கல. அது இடத்துக்கு இடம், கெடச்ச உணவு இதுக்கெல்லாம் ஏத்த மாதிரி மாறி மாறி தான் இருந்தது. அதனால தான் இந்த உலகத்துல நெறைய வகையான செல்கள், உயிரினங்கள் நமக்கு இடையே இருக்கு.

ஸோ, ஏற்கனவே  இருந்த ஒரு செல் தன்னை தானே மாத்திக்கிட்டு செய்த ரெண்டு செயல் இன்னும் தெளிவா சொல்லனும்ன்னா செல்கள் தனக்குள்ள வளர்த்துக்கிட்ட தனக்கு தானே செய்துக்கிட்ட ரெண்டு மாற்றம் தான் இந்த பூமியை இன்னும் உயிர்ப்பா வெச்சிருக்கு. இந்த ரெண்டு மாற்றம் மட்டும் இல்லான்னா இன்னும் இந்த பூமி முழுக்க வெறும் ஒரு செல் உயிர்கள் மட்டும் தான் இருந்திருக்கும்.  எப்படின்னா, இதுவரைக்கும் இருந்த செல் எல்லாமே வெளியில கெடைச்ச உணவை தான் தேடி தேடி சாப்பிட்டு இருந்தது. இப்படியே இருந்திருந்தா, செல் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க கண்டிப்பா உணவோட அளவு குறைஞ்சிட்டு தான் இருந்திருக்கும். ஒரு அளவுக்கு அப்புறம் உணவோட அளவுக்கு ஏத்த மாதிரி செல்கள் எண்ணிக்கை குறைஞ்சி அப்புறம் அதிகமாகி இப்படி தான் இருந்திருக்கும்.

ஆனா, செல்கள் தனக்குள்ள ஏற்படுத்திக்கிட்ட ரெண்டு முக்கியமான மாற்றம் -

1. AUTO SYNTHESIS - தனக்கு தானே உணவை தயாரிக்க கத்துக்கிட்டது
2. MULTI CELLULARITY - கூட்டு வாழ்க்கை - அதாவது பல்வேறு வகையான
திறமைகளை கொண்ட ஒற்றை செல்கள் சேர்ந்து வேலைகளை பங்கு போட்டுகிட்டு ஒரு உயிரா வாழ ஆரம்பிச்சது.

இந்த ரெண்டும் தான் இன்னைக்கு இந்த பூமியில இவ்வளவு உயிர்கள் தோன்ற காரணமா அமைஞ்சது.

முதன் முதல்ல உணவை தயாரிக்க ஆரம்பிச்ச ரெண்டு பேக்டீரியா சையனோபேக்டீரியா - CYANOBACTERIA மற்றும் ஆல்ஃபா - புரோட்டியோ பேக்டீரியா - α-PROTEO BACTERIA. இது ரெண்டும் தான்முதன் முதல்ல ஆக்சிஜனை உபயோகப்படுத்தினது மற்றும் ஆக்சிஜனை உபயோகப்படுத்தி உணவை ஜீரணம் செய்து தனக்கு தேவையான சக்தியை தயார் பண்ணிக்கிட்டது, தன்னோட உணவை தானே தயார் பண்ணிக்கிட்டது, சூரிய ஒளியையும், கார்பன் டை ஆக்சைடையும் உபயோகப்படுத்தி சக்தி தயாரிச்சது - இந்த ரெண்டும் தாவரங்கள்ள நடக்கிற ஒரு செயல், இப்படின்னு பல புரட்சிகளை பண்ணினது. (இங்க எனக்கு ஒரு கேள்வியும் உண்டு. அதை சந்தேகம் அப்படின்னு கூட சொல்லலாம். அந்த காலக்கட்டத்தில், ஆக்சிஜன் அப்படின்னு ஒன்னு தனியா இல்லாத பட்சத்தில், அப்போ தண்ணீரும், கார்பன் டை ஆக்சைடும் எப்படி உருவாகி இருக்கும்? தெரிஞ்சவங்க சொல்லலாம்) அது எப்படின்னு நாம இப்போ பார்க்க போறது இல்லை ஆனா, அதனால விளைந்த விளைவுகள் தான் இப்போ நாம முக்கியமா தெரிஞ்சிக்க போறோம். இந்த செல்கள் ரெண்டும் இப்படி இந்த வகையில மேம்பாடு அடைஞ்ச மாதிரி வேற இடத்துல செல்கள் வேற மாதிரி மேம்பாடு  அடைஞ்சிருந்தது. இப்படி செல்கள் சில விசயத்துல நல்ல முன்னேற்றமும், சில விசயங்கள்ல பெரிய வளர்ச்சி அடையாம இப்படி ரெண்டுங்கெட்டானா தான் இருந்துச்சி. அப்புறம் ஒன்னுக்கொன்னு அதனோட தனி தன்மையை உணர்ந்து, அதுக்கு மேல தனக்கு என்ன வேணும்ன்னு யோசிச்சி, அந்த வேலையை செய்யக்கூடிய செல்களோட கூட்டணி போட்டு கடைசியா நமக்கு கெடைச்சது தான் இன்னைக்கு நாம பார்க்கற முழுமையா மேம்பாடு அடைஞ்ச செல்கள். சாதாரண செல் சையனோபேக்டீரியாவோட (CHLOROPLAST - குளோரோபிளாஸ்ட்) கூட்டணி போட்டது தாவர செல்லாவும், சாதாரண செல் புரோட்டியோபேக்டீரியாவோட (MITOCHONDRIA - மைட்டோகாண்ட்ரியா) கூட்டணி போட்டது விலங்கு செல்லாவும் உருவெடுக்க நமக்கு கடைசியா தாவரம் விலங்கு அப்படின்னு இரு வேறு உலகம் கெடைச்சது. இதுதான் நமக்கு மைட்டோகாண்ட்ரியாவும், குளோரோபிளாஸ்ட்டும் கெடைச்ச கதை.


இருந்தாலும் இன்னமும் புரோகேரியோட் செல்கள்ல இன்னமும் மைட்டோகாண்ட்ரியா  கிடையாது. அதுக்கு பதிலா செல் சவ்வே சக்தி தயாரிக்கும் வேலையை பார்த்திடும். இப்படி மேம்பாடு அடைஞ்ச செல் இந்த பேக்டேரியாவுக்கு உணவும் பாதுகாப்பும் கொடுக்க, ஆக்சிஜனை உபயோகப்படுத்த தெரிஞ்ச பேக்டீரியா சக்தி தயாரிக்க உதவி செய்து தன நன்றியை தெரிவிச்சது. இப்படி ஒன்னுக்கொன்னு உதவி செய்துக்கற முறையை SYMBIOSIS அப்படின்னு ஆங்கிலத்துல சொல்வாங்க. இதை தமிழ்ப்படுத்த தெரியல. அதோட செல்லுக்குள்ளயே போய் தங்கியிருந்து உதவி செய்து, உதவி வாங்கிக்கறதுக்கு ENDOSYMBIOSIS அப்படின்னு பேரு. இதையும் தமிழாக்கம் செய்யணும். தெரிஞ்சவங்க சொல்லுங்க ப்ளீஸ்...!!!!!!! ஸோ மக்களே, முன்வரலாறு போதும். விளக்கமா நாம பரிணாமம் தொடர்ல பின்னாடி பார்க்கலாம். இப்போ நம்ம பதிவோட முக்கியமான செய்தி - மைட்டோகாண்ட்ரியா வேதி கட்டமைப்புக்கு  வருவோம்.

மைட்டோ காண்ட்ரியா - MITOCHONDRIA - வேதிக்கட்டமைப்பு

மைட்டோகாண்ட்ரியா இது ஒரு MEMBRANE BOUND ORGANELLE - அதாவது செல்லை சுற்றி இரட்டை கொழுப்பு படலம் செல் சவ்வு இருக்கிற மாதிரி இதுக்கும் இரட்டை படல செல் சவ்வு உண்டு. வெளிப்புறம் மைட்டோகாண்ட்ரியாவை முழுமையா சூழ்ந்த  வெளிப்புற சவ்வும், அதுக்கு கொஞ்சம் இடைவெளி விட்டு, அடுத்ததா உட்புறம் நீளமான மடிப்பு மடிப்பாக சுருண்ட நிலையில் உட்புற சவ்வும் கொண்டது. நடுவுல ஒரு நீர்மம் நிரம்பிய நிலையில் நடு இடம், அந்த இடத்துல மைட்டோகாண்ட்ரியாவுக்கு தேவையான அனைத்து புரோட்டீன்கள், DNA  எல்லாம் நெறைஞ்சிருக்கும். மைட்டோ காண்ட்ரியாவோட அனைத்து வேலைகளும் வெளிப்புற மற்றும் உட்புற செல் சவ்வுக்கு இடையில் இருக்கிற இடத்திலும், உட்புற சவ்வுக்கு உள்ளே இருக்கிற இடத்திலும் நடக்கும். மைட்டோகாண்ட்ரியாவோட ஒவ்வொரு பாகத்தையும் பத்தி ஒவ்வொன்னா தனித்தனியா பார்க்கலாம்.



வெளிப்புற சவ்வு - OUTER MEMBRANE

மைட்டோகாண்ட்ரியாவோட வெளிப்புறம் சூழ்ந்த சவ்வு. பேக்டீரியாதான் மைட்டோ காண்ட்ரியாவா மாறினது அப்படிங்கறதால இந்த சவ்வு ஒரு செல் சவ்வு தான். அதனோட அமைப்பு அப்படியே செல்சவ்வை ஒத்த இரட்டை கொழுப்பு படலம். செல் சவ்வை மாதிரியே கரிம வேதிப்பொருட்களை தேர்ந்தெடுத்து உள்ளே அனுப்பும். தேர்ந்தெடுத்து வெளிய அனுமதிக்கும். ATP, பைருவேட் - PYRUVATE (குளுக்கோஸ் ஜீரணம் ஆகும்போது கிடைக்கும் கரிம வேதிப்பொருள்), ஆக்சிஜன் இதெல்லாம் வெளிப்புற சவ்வு வழியா எந்த வித தடையும் இல்லாம போய் வரும்.

உட்புற சவ்வு - INNER MEMBRANE

வெளிப்புற சவ்வுக்கு அடுத்ததா மைட்டோகாண்ட்ரியாவுக்கு உட்புறமா கொஞ்சம் இடைவெளி விட்டு அமைஞ்சிருக்கும். இதுவும் கொழுப்பு இரட்டை படல அமைப்புல செல் சவ்வு மாதிரி அமைப்பு கொண்டது. ஆனா இது தட்டையா ஒரே தளத்துல அமையாம, மைட்டோகாண்ட்ரியாவோட உட்புறம்  மடிஞ்சி மடிஞ்சி அமைஞ்சிருக்கும். இந்த உட்புற சவ்வு மேல தான் மைட்டோகாண்ட்ரியாவோட எல்லா வேலையும் நடக்கும். இது சும்மா தட்டையா இருந்தா இதுக்கு மேல கொஞ்சம் தான் இடம் இருக்கும். அதுவே உட்புறமா மடிஞ்சிருக்கும் போது நெறைய இடம் கிடைக்கும். அதனால நெறைய வேலைகள் சிரமம் இல்லாம நடக்கும். அப்படி மடிஞ்சிருக்கும் அமைப்புக்கு CRISTAE - கிறிஸ்டே அப்படின்னு பேரு.  இந்த கிறிஸ்டேல தான் எல்லா வேலையும் முக்கியமா ADP-ல இருந்து ATP - தயாரிக்கும் வேலை நடக்கும். இந்த வேலையை செய்யும் புரோட்டீன் ATP சிந்தேஸ் மற்றும் ATPase - ஏடிபியேஸ் அப்படிங்கற என்சைம்கள். இந்த கிறிஸ்டே முழுக்க ஏடிபியேஸ்சும், ATP சிந்தேசும் நெறைஞ்சிருக்கும். உட்புற சவ்வு மடிஞ்சி மடிஞ்சி இருந்தாலும் இது ஒரு மூடின அமைப்பு. உட்புறம் முழுக்க மீதி இருக்கிற இடம் மேட்ரிக்ஸ் - MATRIX  அப்படிங்கற நீர்மம் நிறைஞ்சிருக்கும்.

ATPase - ஏடிபியேஸ்

ஏடிபியேஸ் அப்படிங்கறது ஒரு கூட்டு புரோட்டீன். ATP உருவாகும் இடம். அதாவது ATP உருவாக தேவையான ADP மற்றும் பாஸ்பேட் மூலக்கூறுகள் உருவாக்கி தரும் வேலையை செய்யும். மைட்டோகாண்ட்ரியாவோட உட்புற சவ்வு மேல, சவ்வை ஊடுருவி அமைஞ்சிருக்கும். இந்த மொத்த கட்டமைப்பு மூணு  பகுதியா பிரிக்கப்பட்டு இருக்கும். கீழ் பீடம், நடு  வால் மற்றும் மேல்புற தலை. பீடம் K - RING - கே - வளையம் அப்படின்னு பேரு. அதோட நடு வாலும், மேல்புற தலையும் F1 or V1 பகுதி அப்படின்னும், கீழ்புற பீடம் F0 or V0 பகுதி அப்படின்னும் சொல்வாங்க. இந்த பீடம் தான் மைட்டோகாண்ட்ரியாவோட சவ்வை ஊடுருவி அமைஞ்சிருக்கும். மொத்தமா இதை ATPase அப்படின்னு சொன்னாலும் இது ஒரு கூட்டு புரோட்டீன்.

1. மேல்புற தலை (HEAD ) - மூன்று ஆல்ஃபா புரோட்டீன்கள், மூன்று பீட்டா
   புரோட்டீன்கள், ஒரு டெல்டா புரோட்டீன் சேர்ந்தது.
2. நடு வால் (STALK ) - ஒரு காம்மா புரோட்டீன், ஒரு எப்சிலான் புரோட்டீன்
3. கீழ்புற பீடம் (BASE )  - பத்து C புரோட்டீன்கள், ஒரு A புரோட்டீன் மற்றும் B
    புரோட்டீன்.

INTER MEMBRANE SPACE - இரு சவ்வுகளுக்கு இடையேயான இடைவெளி

மைட்டோகாண்ட்ரியாவோட வெளிப்புற மற்றும் உட்புற சவ்வுகளுக்கு இடையேயான இடைவெளி. இந்த இடைவெளியில பாசிடிவ் சார்ஜ் இருக்கிற ஹைட்ரஜன் மூலக்கூறுகள் நெறைய இருக்கும். இது எதுக்குன்னா ஒரு ADP பாஸ்பேட் மூலக்கூறோட சேர்ந்து ஒரு ATP வரணும் அப்படின்னா மூன்று ஹைட்ரஜன் மூலக்கூறுகள் ATPase வழியா உட்புற சவ்வை கடந்து போகணும். அதுக்காக நெறைய ஹைட்ரஜன் மூலக்கூறுகள் இந்த இடத்தில் சேர்த்து வெச்சிருக்கு.

கிறிஸ்டே - CRISTAE

கிறிஸ்டே அப்படிங்கறது மைட்டோகாண்ட்ரியாவோட உட்புற சவ்வு மைட்டோகாண்ட்ரியாவோட நடுப்பகுதி நோக்கி மடிப்பு மடிப்பாக நீண்டு உருவான பகுதி. இது எதுக்காக உருவானதுன்னா உட்புற சவ்வோட நீளத்தை அதிகரிக்க இது மாதிரி ஆகியிருக்கு. இந்த உட்புற சவ்வுமேல இருக்கிற எல்லா புரோட்டீன்களும், உட்புற சவ்வு மேல நடக்கிற எலா வேலையும் கிரிஸ்டேவுலயும் நடக்கும். இதுமாதிரி உட்புறம் மடிந்த விதம் எல்லாம் மைட்டோகாண்ட்ரியாவுக்கு மைட்டோகாண்ட்ரியா மாறுபடும்.

மேட்ரிக்ஸ் - MATRIX 

இந்த மேட்ரிக்ஸ் மைட்டோகாண்ட்ரியாவோட நடுப்பகுதி. மேட்ரிக்ஸ் அப்படிங்கற நீர்மம் நிறைந்தது. மைட்டோகாண்ட்ரியாவோட எல்லா புரோட்டீன்கள், என்சைம்கள், மைட்டோகாண்ட்ரியாவோட DNA எல்லாமே இங்க தான் இருக்கும்.


1. என்சைம்கள் -

மேட்ரிக்ஸ்ல மட்டும் சுமாரா 100 என்சைகள் இருக்கும். ATP உருவாக தேவையான அனைத்து என்சைகள் இங்க தான் இருக்கும். 

2. ரைபோசோம்-  மைட்டோகாண்ட்ரியா ஆரம்பத்தில் ஒரு செல்லா இருந்தது இல்லையா ?? அதனால ஒரு தனி செல்லுல இருக்கும் எல்லா செல் நுண்ணுறுப்புகளும், ரொம்பநாள் அது மைட்டோகாண்ட்ரியாவா மாறின அப்புறமும் இருந்தது. அப்புறமா முக்கால்வாசி (முக்கியமா புரோட்டீன் தயாரிக்க தேவையான சிஸ்டம் தவிர மீதி மறைஞ்சிடுச்சி. புரோட்டீன் தயாரிக்க தேவையான முக்கியமான புரோட்டீன் ரைபோசோம். இதுல வேற வேற வகை இருக்கு. மைட்டோகாண்ட்ரியாவுல இருக்கும் ரைபோசோம் வகை 70S வகை. இது வழக்கமா பேக்டீரியாவுல இருக்கும் ரைபோசோம் வகை.  ஒரு பேக்டீரியாதான் மைட்டோகாண்ட்ரியாவா மாறினது அப்படிங்கறதுக்கு  இது ஒரு முக்கியமான தடயம்.

3. மைட்டோகாண்ட்ரியா DNA  மத்த எந்த ஒரு செல் நுண்ணுருப்புக்கும் இல்லாத ஒரு பண்பு, இதுக்குன்னு தனியா மரபு அணுக்கள் அதாவது DNA இருக்கு. வழக்கமா ஒரு செல்லுல DNA அப்படின்னா அது நியூக்ளியஸ்ல மட்டும் தான் இருக்கும். அதுல இருந்து தான் மொத்த செல்லுக்கே தேவையான புரோட்டீன்கள் தயாராகும். ஆனா மைட்டோகாண்ட்ரியா மட்டும் அதுக்குன்னு தனியா DNA வெச்சிக்கிட்டு அதுக்கு தேவையான புரோட்டீன்களில் ஒரு சில தவிர மீதி எல்லாத்தையும் தானே தயார் பண்ணிக்கும்.

தாவர செல்களில் சக்தி தயாரிக்கும் வேலையை குளோரோபிளாஸ்ட் தான் அதிகமா செய்யிதுன்னாலும், இதுலயும் மைட்டோகாண்ட்ரியா இருக்கு. அது எதுக்குன்னா குளோரோபிளாஸ்ட் சக்தி தயாரிக்கணும் அப்படின்னா சூரிய ஒளியினோட உதவி வேணும். அதனால இராத்திரியில சக்தி தயாரிக்க வேண்டியிருக்கிற காரணத்தால மைட்டோகாண்ட்ரியாவையும் தாவர செல்கள் தனக்குள்ள வெச்சிருக்கு. மைட்டோகாண்ட்ரியாவை பத்தி சொல்ல இவ்ளோதான் இங்க. அடுத்த பதிவுல சிந்திப்போம்.

Sunday, March 3, 2013

குழந்தைக்கு ஐந்து வயசு

இது என்னோட மற்றொரு வலைப்பூவான கோவம் நல்லதுக்காக எழுதினது. ரொம்ப நல்ல கருத்தை வலியுறுத்தி சமீபத்துல நான் பார்த்த வீடியோ. படிச்சிட்டு பிடிச்சிருந்தா உங்க கருத்துகளை பின்னூட்டத்துல சொல்லுங்க. குழந்தைக்கு ஐந்து வயசு.

 
 மறுபடியும் சிந்திப்போம்.

DIGESTION - செரிமானமாதல் - விரிவான அறிமுகம்...!!!

மக்களே...!!! 

நம்மளோட போன பதிவு எப்படி இருந்தது? மைட்டோகாண்ட்ரியா பத்தி சொல்ல ஆரம்பிச்சேன். ஆனா, அதுக்கு முன்னாடி சொல்ல வேண்டிய சில  விஷயங்கள் இருந்தது. அதுதான் இப்போ சொல்லிட்டு இருக்கேன். இதுவரைக்கும் ATP, ADP, NAD, FAD மற்றும் FMN எல்லாம் பார்த்திருக்கோம்.  எப்படி இருந்தது? படிச்சிட்டு கமெண்ட் போட்டிங்கன்னா இன்னும் என்னோட வேலையை இன்னும் செம்மைப்படுத்திக்க அது உதவும். அதனால பதிவுகளை படிக்கிற நண்பர்கள் தவறாம பின்னூட்டம் போடுங்க. 

நம்ம உடலுக்கு சக்தி தேவைப்படும்போது நாம சாப்பிடறோம். நாம சாப்பிடும் சாப்பாட்டுல ஸ்டார்ச், கொழுப்பு அமிலங்கள், மற்ற லிப்பிடுகள், நியூக்ளிக் அமிலங்கள், விட்டமின்கள், மினரல்கள் இது எல்லாமே இருக்கு. அதுல இருந்து நமக்கு சக்தி கெடைக்குது. இவ்ளோதான் நமக்கு (உயிர்வேதியியல் தெரிஞ்சவங்களை தவிர) தெரியும். ஆனா, இவ்வளவும் நாம சாப்பிட்டதுக்கு அப்புறம் என்ன ஆகுதுன்னு தெரியுமா ? இந்த ஸ்டார்ச்ல இருந்து நமக்கு எப்படி சக்தி கிடைக்குது? எத்தனை விதமான செயல்கள், வேதிவினைகள் நடந்து, கடந்து நமக்கு சக்தி தயாரிக்கப்படுது? இதுதான் நாம இன்னைக்கு பார்க்க போறோம். இன்றைய பதிவுல இருந்து இது சம்பந்தமான அடுத்து வரும் பத்திகள் மிக முக்கியமானதா இருக்கும். கவனமா படிங்க. இப்போ இன்னைக்கு பதிவுக்கு போகலாம்.


நாம சாப்பிடும் சாப்பாடு - கார்போஹைட்ரேட், லிப்பிட்ஸ், நியூக்ளிக் ஆசிட், புரோட்டீன் எல்லாம் கலந்த கலவை. இது எல்லாமே கரிம வேதிப்பொருட்கள் வகையை சேர்ந்த சிக்கலான, அளவுல பெரிய, கடினமான வேதிக்கட்டமைப்பு கொண்ட வேதிப்பொருட்கள். இதை கொஞ்சம் விளக்கமா பார்க்கலாம் .

1. கார்போஹைட்ரேட் - கார்போஹைட்ரேட்ல பல வகை இருந்தாலும் நாம சாப்பிடற சாப்பாட்டுல இருக்கிறது ஸ்டார்ச். ஸ்டார்ச் பத்தி நாம ஏற்கனவே படிச்சிருக்கோம். பல நூறு குளுக்கோஸ் மூலக்கூறுகள் செயின் மாதிரி சேர்ந்த அமைப்பு.

2. லிப்பிடுகள் - நாம சாப்பிடற சாப்பாட்டுல இருக்கும் லிப்பிட் வகை உணவுப்பொருட்கள் பல வகை இருக்கும். சமைக்கும் எண்ணெய், மாமிச கொழுப்பு இப்படி ஒன்னொன்னும் ஒவ்வொரு வகை, அளவில் பெரிய கூட்டு கொழுப்புகள்.

3.  புரோட்டீன் - கார்போஹைட்ரேட் போலவே புரோட்டீன்களும் அமினோ அமிலம் செயின் மாதிரி கோர்த்த அமைப்பு. தனக்கு தானே மடிந்து, சுற்றி ஒரு கோளம் மாதிரி நல்ல பெருசா உருவானது.

4. நியூக்ளிக் அமிலங்கள் - நம்ம புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட் மாதிரித்தான் இதுவும். நியூக்ளியோடைடுகள் செயின் மாதிரி அமைந்த அமைப்பு.

இது எல்லாத்தையும் உள்ளடக்கின சாப்பாடு பயன்படுத்தி அப்படியே நம்ம செல்களால சக்தி தயாரிக்க முடியாது. சக்தி தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் நாம சாப்பிடற சாப்பாட்டுல இருந்து கெடைக்கும். அந்த மூலப்பொருட்களை புராசஸ் பண்ணி தனியே பிரிச்செடுத்து அதை உபயோகப்படுத்தி நம்ம செல்கள் நம்ம தினப்படி வேலைகளுக்கான சக்தியை தயாரிக்கும். இந்த உணவை புராசஸ் பண்ணி மூலப்பொருட்களை தனியே பிரிச்செடுக்கிற வேலை தான் நாம ஜீரணமாதல் அப்படின்னு சொல்றோம். உதாரணத்துக்கு, கார்போஹைட்ரேட் வகை உணவுல ஸ்டார்ச் நிறைய இருக்கும். நம்ம செல் ஸ்டார்ச்சை அப்படியே உபயோகப்படுத்த முடியாது. அதே சமயம் கார்போஹைட்ரேட்டுல குளுக்கோஸ் தான் நம்ம செல் உபயோகப்படுத்தற மூலப்பொருள்.  அதனால நம்ம செல் ஸ்டார்ச்சை ஜீரணம் பண்ணி அதுல இருந்து கெடைக்கிற குளுக்கோஸை உபயோகப்படுத்தி சக்தி தயாரிக்கும்.

சரி... ஆனால் மேல போறதுக்கு முன்னாடி நான் சில கேள்விகளை கேக்க விரும்பறேன். ஏன் நம்ம செல் சாப்பாட்டை அப்படியே பயன்படுத்த முடியாது? சாப்பாட்டை ஜீரணம் பண்ணி, சக்தி தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை தனியே பிரிச்செடுக்க வேண்டிய அவசியம் என்ன?

நாம சாப்பிடும் சாப்பாடு இரைப்பைக்குள்ள ஜீரணம் ஆகி, சிறுகுடலுக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்க இருந்து நேரடியா நம்ம இரத்தத்துக்குள்ள போய் கலக்கும். இரத்தத்துக்குள்ள இருந்து செல்கள் இருக்கிற இடத்துக்கு எடுத்து போகப்பட்டு, அங்க செல்லுக்குள்ள எடுத்திட்டு போய் சைட்டோபிளாசத்தில் தான் சக்தி தயாரிக்கும் வேலை ஆரம்பமாகும். சிறுகுடல்ல இருந்து இரத்த ஓட்டத்துல கலக்கணும் அப்படின்னா என்ன ? சிறுகுடல் எங்க இருக்கும்ன்னு நமக்கு தெரியும். ஆனா, குளுக்கோஸ் கலக்க வேண்டிய இரத்த ஓட்டம் எங்க இருக்கு? சிறு குடல்ல இருந்து இரத்த ஓட்டத்துல கலக்க இரத்தம் ஓட்டம் வரை குளுக்கோஸ் எப்படி, எங்க கொண்டு போகப்படும்?

இங்க தான் நமக்கு பல சுவாரஸ்யமான தகவல்கள் இருக்கு. சிறுகுடல் அப்படிங்கறது சதையால் ஆன குழாய் மாதிரின்னு நமக்கு தெரியும். வெளிப்பக்கம் பார்க்க சின்ன டியூப் மாதிரி ஸ்மூத்தா இருந்தாலும் அதனுடைய உள்பக்கம் நிறைய மடிப்பு மடிப்பா நிறைய மேடு பள்ளம் இப்படித்தான் இருக்கும். சிறுகுடலோட சுவர்களுக்குள்ள நெறைய இரத்தக்குழாய் நிறைஞ்சிருக்கும். அதாவது நம்ம உடலோட வேற எந்த பகுதியை விடவும்  சிறுகுடல் பகுதி ஏகப்பட்ட இரத்தக்குழாய்கள் கொண்டது. அதுக்கு காரணம் இருக்கு. இன்னும் விளக்கமா சொல்லணும் அப்படின்னா சிறுக்குடல் சதை, அதுக்குள்ளே புதைஞ்சிருக்கிற நிறைய இரத்தக்குழாய்கள். ஸோ, சிறுக்குடல் வழியா வரும் ஜீரணமான உணவு இந்த சதையை தாண்டி ஊடுருவி அதுக்குள்ளே புதைஞ்சிருக்கிற இரத்தக்குழாயை அடைஞ்சி அதையும் தாண்டி அதுக்குள்ளே ஓடும் இரத்தத்துல கலக்கணும். இதுதான் நமக்குள்ள தினமும் நடக்கறது.

ஸோ, உணவுப்பொருள் இரத்தத்துல கலக்கறதுக்கு முன்னாடி சிறுக்குடல் சுவர் (மடிப்பு மடிப்பா இருக்கும் குடலோட உட்பக்க சதை அல்லது சுவர் ), அதுக்கு அப்புறம் இரத்தக்குழாய் இந்த ரெண்டையும் தாண்டினாத்தான் இரத்தத்துக்குள்ள போக முடியும். நாம இங்க சதை, இரத்தக்குழாய் அப்படின்னு சிம்பிளா சொன்னாலும் அது செல்களால் ஆனது, அந்த செல்கள் செல் சவ்வு வெச்சிருக்கும். அதைதான் ஜீரணமான உணவு தாண்ட போகுது இல்லையா ? ஸோ, சிறுக்குடல் சதையோ அல்லது அதுக்குள்ள இருக்கிற இரத்தக்குழாயோ, இப்படி தாண்டனும் அப்படின்னா ஒரு பக்கம் செல்சவ்வு வழியா ஊடுருவி மறுபக்க செல் சவ்வு வழியா வெளிய வரணும். இதுதான் அங்க நடக்க போறது. நடக்கறது. அப்படி ஊடுருவனும் அப்படினா அதுக்கு ஏத்த மாதிரி அதனோட சைஸ் அதாவது அளவு இருக்கணும். இந்த ஒரு காரணத்துக்காகத்தான் நாம சாப்பிடும் உணவு வாயிலயும், இரைப்பையிலயும், குடலுக்குள்ளயுமே ஜீரணம் பண்ணப்படுது. இல்லன்னா அதால குடலை விட்டு தாண்ட முடியாது. அப்படியே கழிவாக வெளியேற்றப்பட வேண்டியது தான். ஸோ, ஜீரணமாதல் அப்படிங்கறது நாம சாப்பிடும் அளவில் பெரிய கூட்டு கரிம வேதிப்பொருட்களை நமது செல்கள் ENERGY தயாரிக்க பயன்படுத்தக்கூடிய அளவுக்கு சின்ன சின்னதா, எளிமையா உடைக்கறது அல்லது எளிமையான வடிவத்துக்கு மாற்றுதல் அப்படின்னு அர்த்தம் சொல்லலாம். அம்மாடி எவ்ளோ பெரிய கதை.......!!!!!!!!

உதாரணம் - ஸ்டார்ச் - STARCH - இது குளுக்கோஸ் மூலக்கூறுகள் ஒண்ணா சேர்ந்த சிக்கலான கரிம வேதிப்பொருள். தானிய வகைகள், கிழங்கு வகைகள் இது எல்லாம் ஸ்டார்ச் நிறைய இருக்கிற உணவுப்பொருட்கள். நாம சாப்பிடற உணவுல இது இருந்தாலும் நம்ம செல் இதை அப்படியே பயன்படுத்த முடியாது. ஏன்னா, நம்ம செல்லுக்குள்ள ஒரே ஒரு தனி குளுக்கோஸ் மட்டும்தான் ஈசியா தாண்டி போகமுடியும். ரெண்டு குளுக்கோஸ் சேர்ந்தமாதிரி இருந்தாக்கூட செல் சவ்வை தாண்டி போக முடியாது. ஆனா, ஸ்டார்ச் பல நூறு குளுக்கோஸ் ஒண்ணா சேர்ந்தது. இது அப்படியே இருக்கிற வரைக்கும் இதனால நமக்கு எந்த உபயோகமும் இல்லை. அதனால, இந்த மிகப்பெரிய ஸ்டார்ச் தனித்தனி குளுகோஸ் மூலக்கூறுகளாக மாற்றப்படனும்.

இந்த ஜீரணமாதல் செயல் உணவு நம்ம வயித்துக்குள்ள போனதுக்கு அப்புறம் தான் ஆரம்பமாகுதுன்னு நீங்க நெனச்சிங்கன்னா அது தப்பு. சாப்பாட்டை நம்ம வாயில போட்டதுமே நம்ம வாய்ல இருந்தே இந்த செயல் ஆரம்பமாகுது. நாம சாப்பாட்டை பற்களால நல்லா மென்னு சாப்பிடறமே அதுவே ஜீரணம் ஆகறதுக்கான முதல் ஆரம்பம். நாம சாப்பாட்டை மெல்லும்போது சாப்பிடும் உணவு உமிழ் நீரோட கலந்து நல்லா அரைக்கப்படும். அந்த உமிழ்நீர்ல  இருக்கு மேட்டர். நம்ம உமிழ்நீர்ல கலந்து இருக்கிற பொருட்கள் என்னென்னன்னு தெரியுமா?
  • தண்ணீர் - WATER 
  • மின் அயனிகள் - ELECTROLYTES - இதில் உள்ள மின் அயனிகள் பட்டியல் கீழே,
    • சோடியம்
    • பொட்டாசியம்
    • கால்சியம் 
    • மெக்னீசியம்
    • குளோரைடு 
    • பை-கார்பனேட் 
    • பாஸ்பேட்
    • அயோடின்
  • மியூக்கோ பாலி-சாக்ரைடு மற்றும் கிலைக்கோ புரோட்டீன் 
  • பேக்டீரியா நுண் எதிர்ப்பு பொருட்கள் - தயோ-சயனேட், ஹைட்ரஜன் பெராக்ஸைடு, இம்யூனோ குலோபுலின் A.
  • மேற்தோலுக்குரிய வளர்ச்சி காரணி (தமிழாக்கம் சரியா என தெரியல... தெரிஞ்சவங்க சொல்லுங்க) - EPIDERMAL GROWTH FACTOR
  • பல்வேறு என்சைம்கள் -
    • ஆல்ஃபா - அமைலேஸ் அல்லது தயாலின்  - α-AMYLASE or PTYALIN - வாயில் உள்ள பரோடிட் - PAROTID மற்றும் சப்மேன்டிபுலார்-SUBMANDIBULAR  உமிழ்நீர் சுரப்பிகள் அசினர் - ACINAR செல்களால் ஆனது. இந்த அசினர் செல்கள் சுரக்கும் என்சைம்கள் தான் மேல சொன்னது. உமிழ்நீர் கலந்து வாயில் அரைக்கப்படும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட் அல்லது சர்க்கரை அதாவது ஸ்டார்ச் இந்த என்சைம்களால் உடைக்கப்பட்டு சிறு சிறு குளுக்கோஸ் செயின்களாக மாற்றப்படும். இதனால வயிற்றுக்குள்ள மேற்படி அடுத்த சுற்று ஜீரணம் ஆக வசதியா இருக்கும். ஸோ, கார்போஹைட்ரேட் உணவு முதன் முதலில் வாயிலேயே ஜீரணம் செய்யப்பட அதுவும் உணவு விழுங்கப்படுவதற்கு முன்னரே ஆரம்பிக்கப்படும்.  

    • லிங்குவல் லைப்பேஸ் - LINGUAL LIPASE - வாயில் உள்ள மற்றொரு உமிழ்நீர் சுரப்பியான சப்லிங்குவல் சுரப்பியினுடைய அசினர் செல்கள் சுரக்கும் என்சைம் இது. இதனுடைய வேலை கொழுப்பு சம்பந்தப்பட்ட உணவுகளை ஜீரணம் பண்ணுவது.ஆனா, இது நமது உணவில் சேர்த்து அரைக்கப்பட்டாலும், கொழுப்பு சம்பந்தப்பட்ட உணவுகள் ஜீரணம் ஆகாது. இதுக்கு காரணம் இதனுடைய pH. pH அப்படிங்கறதை எப்படி தமிழாக்கம் செய்யிறதுன்னு தெரியல மக்களே...!!!!!!!! ஸோ எனக்கு தெரிஞ்ச மாதிரி விளக்கமா சொல்றேன். pH அப்படிங்கறது எந்த ஒரு நீர்மத்தின் அமில அல்லது காரத்தன்மையின் அளவை குறிக்கும் அலகு அல்லது அளவுகோல். இதனோட ஆரம்ப அளவு 1.0, அதிகப்பட்சம் 14. நடுநிலை புள்ளி 7.0. 7.0 க்கு கீழே போனால் அமிலம் எனவும், 7.0 க்கு அதிக pH  கொண்டவை காரம் எனவும் சொல்லுவாங்க. வேணும்ன்னா சில உதாரணங்களை சொல்றேன். சுத்தமான தண்ணியோட pH 7.0. இது ஒரு NEUTRAL அதாவது சமநிலைப்படுத்தப்பட்டது அமிலமும் இல்லை காரமும் இல்லை. சுத்தமான செறிவூட்டப்பட்ட அமிலத்தோட pH 1.0. சுத்தமான செறிவூட்டப்பட்ட காரம் 14.0.  
    • இது எதுக்கு சொல்ல ஆரம்பிச்சேன்னா, ஒவ்வொரு என்சைம்க்கும் ஒரு பண்பு உண்டு.அதுக்குன்னே சில குறிப்பிட்ட pH அளவு இருக்கும்போது மட்டும்தான் அது செயல் தன்மையோடு இருக்கும். இல்லைன்னா அது வெறும் ஒரு துண்டு புரோட்டீன் அவ்ளோதான். நம்ம லிங்குவல் லைப்பேஸும் அதுபோலதான். உருவாகற இடம் நம்ம வாய்க்குள்ள இருந்தாலும், தோராயமா 4.0 pH  இருக்கும் இடத்தில் மட்டும் தான் இதனால வேலை செய்யும் திறனுடையதாக மாற முடியும். அதனால நம்ம சாப்பாடு வாயில் அறைப்படும்போது உணவோட சேர்ந்து கலந்து நாம உணவை விழுங்கும் போது  உணவோட இரைப்பைக்குள்ள போயிடும். இரைப்பையில் pH அளவு தோராயமாக 4.0 வந்ததும் இங்க லிங்குவல்  லைப்பேஸ் வேலை செய்யும் திறனுடையதாக மாறி லிப்பிட் உணவுகளை ஜீரணம் செய்ய ஆரம்பிக்கும். 
    • ஸோ, கார்போஹைட்ரேட் உணவு நமது வாயில் இருந்தும், லிப்பிட் உணவுகள் இரைப்பைக்குள் இருந்தும் ஜீரணம் ஆக ஆரம்பிக்கும்.
    •  நுண்ணுயிர் எதிர்ப்பு என்சைம்கள் அல்லது புரோட்டீன்கள் - ANTIMICROBIAL ENZYMES.
      • லைசோசைம் - LYSOZYME - உமிழ்நீர், கண்ணீர், வியர்வை சளி இப்படி நமது உடலில் சுரக்கும் எல்லாத்துலயும் இந்த என்சைம் இருக்கும். இதனுடைய முக்கியமான வேலை பேக்டீரியா தோற்று நடக்காம நம்மை காக்கறது. 
      • உமிழ்நீர் லேக்டோ பெராக்ஸிடேஸ் - SALIVARY LACTOPEROXIDASE 
      • லேக்டோபெஃரின் - LACTOFERRIN
      • இம்யுனோகுலோபுலின் - IMMUNOGLOBULIN 
    • புரோலின் அமினோ அமிலம் அதிகமாக கொண்ட புரோட்டீன்கள் - PROLIN RICH PROTEINS - இதனோட வேலை என்னன்னா நம்ம பல் இருக்கில்லையா, அந்த பல்லுல இருக்கிற எனாமல் - ENAMEL உருவாக்கம், பல் உருவாகும் செயல்ல துணை புரிதல், நுண்ணுயிர் எதிர்ப்பு இப்படி பல வேலைகளை செய்யிது. இதோட இன்னும் பல சின்ன சின்ன வேலைகளை செய்யும் என்சைம்களை கொண்டது.
  • செல்கள் - இப்போ நம்ம வாயில் இருந்து எடுக்கப்படும் ஒரு மில்லி லிட்டர் உமிழ்நீர்ல தோராயமா 80 லட்சம் மனித செல்கள், 5000  லட்சம் பேக்டீரியா செல்களும் இருக்கும். நம்ம உமிழ்நீர் சில சமயம் துர்நாற்றம் வீச இந்த பேக்டீரியா செல்கள் தான் காரணம். 
  • ஓபியார்பிஃன் - OPIORPHIN - இப்போ சமீபத்துல கண்டுபிடிக்கப்பட்ட வலிக்குறைக்கும் நிவாரணி. 
இப்போ ஒவ்வொரு உணவும் எப்படி என்ன மாதிரி ஜீரணம் ஆகுதுன்னு பார்க்கலாம்.

1. கார்போஹைட்ரேட் - ஸ்டார்ச்
நாம சாப்பிடற உணவுல மெயின் ஸ்டார்ச் தான். வேற சில கொஞ்சம் கொஞ்சம் இருக்கலாம். அது சாப்பிடற உணவை பொறுத்தது. ஆனா அதைபத்தி நாம பெரிய அளவுல கண்டுக்க வேணாம். நாம ஸ்டார்ச் மேல கவனம் செலுத்துவோம். ஸ்டார்ச் ஒரு மிகப்பெரிய அளவு இருக்கிற, பல நூத்துக்கணக்கான குளுக்கோஸ் சேர்ந்த வேதிப்பொருள். இது வாயில இருக்கும்போதே மொதல்ல சில குட்டு குட்டி செயின்களா ஒரு 2-10 குளுக்கோஸ் இருக்கிற மாதிரி உடைக்கப்படும். அப்புறம் வயித்துக்குள்ள போனதும் மீதி இருக்கிற எல்லாம் தத்தனி குளுக்கோஸா ஜீரணம் ஆயிடும்.

அப்புறம் நாம சாப்பிடும் இன்னொரு கார்போஹைட்ரேட் உணவுன்னு சொன்னா நம்ம காபி, டீயில கலக்கும் சர்க்கரை. இதனோட அறிவியல் பேரு சுக்ரோஸ் - SUCROSE. ரெட்டை சர்க்கரை. ஒரு குளுக்கோஸ் மூலக்கூறும், ஒரு ப்ஃரக்டோஸ் - FRUCTOSE மூலக்கூறும் சேர்ந்த அமைப்பு. ஒரு இதை ஜீரணம் பண்ணும் என்சைம் SUCRASE - சுக்ரேஸ். இது உருவாகும் இடம் இரைப்பை.


2. புரோட்டீன் -
புரோட்டீன்ல ஸ்டார்ச் மாதிரி இதுதான் அப்படின்னு குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஏன்னா நாம சாப்பிடற எல்லாமே புரோட்டீன் தான். அதே கதைதான் இங்கயும். மாமிசம், முட்டை, பருப்பு வகைகள், தானிய வகைகள் எல்லாம் புரோட்டீன்கள். இதை ஜீரணம் செய்யும் என்சைம் - பெப்சின் - PEPSIN. இது இரைப்பை சுவர் செல்களால சுரக்கப்படும். அதோட எல்லா உணவும் பொதுவா நம்ம வயித்துக்குள் தயாரிக்கப்படர ஹைட்ரோகுளோரிக் அமிலம் உதவியோட முழுமையா ஜீரணம் செய்யப்படும். நீளமான அமினோ அமில செயின்கள் முதல்ல சின்ன சின்னதா உடைஞ்சி அப்புறம் தனித்தனி அமினோ அமிலங்களா ஆகும். புரோட்டீன் ஜீரணம் இரைப்பையில் ஆரம்பமாகி கல்லீரல் சுரப்புகள், கணைய சுரப்புகள் உதவியோட சிறுகுடல்ல முடியும்.


3. லிப்பிட் - தாவர மற்றும் விலங்கு கொழுப்புகள்
இது எல்லாமே கூட்டு கொழுப்புகள்.  நிறைய கொழுப்பு அமிலங்கள், கிளிசரைடுகள் சேர்ந்தது. ஜீரணமான பின்னாடி கொழுப்பு அமிலங்கள் தனியாவும், கிளிசரைடுகள் தனியாவும் ஆயிடும்.  இதுல முக்கியமானது கல்லீரல் - LIVER சுரக்கும் பித்த நீர் (BILE) அதுல உள்ள பித்த நீர் உப்புகள் (BILE SALTS) மற்றும் கணைய லைப்பேஸ் - PANCREATIC LIPASE. லிப்பிடுகள் ஜீரணம் ஆகறதுல இதனோட பங்குதான் மிக மிக அதிகம்.


4. நியூக்ளிக் அமிலங்கள் - தாவர உணவா இருந்தாலும், விலங்கு உணவா இருந்தாலும் எல்லாமே செல்களால் ஆனது அப்படிங்கறதால மொத்த உணவும் நமக்கு நியூக்ளிக் அமிலங்களை குடுக்கும். இவை எல்லாம் ஜீரணம் பண்ணப்படனும். நியூக்ளிக் அமிலங்கள் வாயிலோ அல்லது இரைப்பையிலோ ஜீரணம் ஆகாது. அதுக்கான என்சைம்கள் இங்க இல்லை. நியூக்ளிக் அமிலங்களை ஜீரணம் பண்ணக்கூடிய என்சைம்களை உற்பத்தி பண்றது கணையம் - PANCREAS. கனையத்துல இருந்து உற்பத்தி ஆகிற NUCLEASES - நியூக்ளியேசஸ் அப்படிங்கற என்சைம்கள் DNA மற்றும் RNA - க்களை  எல்லாம் தனித்தனி நியூக்ளியோடைடுகள், நியூக்ளியோசைடுகளா ஜீரணம் பண்ணும். இது நடக்கிற இடம் சிறுகுடல்.


நம்ம வயித்துக்குள் உருவாகும் ஆசிட் - மிக செறிவூட்டப்பப்பட்ட ஹைட்ரோகுளோரிக் அமிலம் - HYDROCHLORIC ACID. இதனோட pH 1.6. இது நம்ம கையில பட்டா நம்ம கை அப்படியே வெந்துடும். அப்படி ஒரு ஆபத்தான ஆசிட் தான் நம்ம வயித்துக்குள்ள உருவாகுது. அப்போ எப்படி நம்ம வயித்துக்குள்ள ஒன்னும் ஆகலன்னு கேக்குறிங்களா...? அங்கதான் இயற்கை நமக்கு ஒரு பாதுகாப்பு சிஸ்டம் ஒன்னு வெச்சிருக்கு. நம்ம வயித்துக்குள்ள சுவர்களை ஒட்டின மாதிரி ஜவ்வு மாதிரி இயற்கையான ஒரு பாதுகாப்பு படலம் இருக்கு. இது ஆசிட் படறதால ஏற்படும் பாதிப்புகளிலிருந்து நம்மை காப்பாத்துது. இதுதான் இயற்கையோட மகிமை. சாப்பிடற சாப்பாட்டை ஜீரணம் பண்ண மிக ஆபத்தான ஆசிட்டை வயித்துக்குள்ள, வெச்சி அதுல இருந்து நம்மை காப்பாத்த ஒரு ஜவ்வு படலத்தையும் வெச்ச இயற்கையை என்ன சொல்ல ?????

இங்க ஒரு சின்ன தகவல் - சரியா சாப்பிடலன்னா அல்சர் அப்படிங்கற வயித்துப்புண் அப்படின்னு நாம கேள்விபட்டிருப்போம். அது எப்படி வருது ? நாம சாப்பிட்டதும் சாப்பிட்ட சாப்பாட்டை ஜீரணம் பண்ண ஆசிட் உருவாகும் இது நமக்கு தெரியும். தினமும் எட்டு மனைக்கு ரெகுலரா நாம சாப்பிட்டு இருக்கோம். இப்படியே கொஞ்ச நாள் போனா எட்டு மணி ஆனதும் செல்கள் தானா ஆசிட்டை உருவாக்க தொடங்கிடும். நாம சாப்பிட்டதும் அந்த ஆசிட் உணவோட கலந்து நீர்த்து போயிடும். இப்போ திடீர்னு கொஞ்ச நாள் நாம ரெகுலரா சாப்பிடறதை விட்டுட்டோம்ன்னு வைங்க, ஆனா ஆசிட் என்னவோ அதே எட்டு மணிக்கு உருவாகிட்டு தான் இருக்கும். உணவு இல்லாததால அதனுடைய முழு ஆசிட் தாக்கம் நம்ம இரைப்பை சுவர்கள் மேல காட்டும். நம்ம பாதுகாப்பு ஜவ்வு கொஞ்ச நாள் தாக்கு பிடிக்கும், ஆனா, கொஞ்ச நாள் கழிச்சி அது செயல் இழந்து, படிப்படியா சேதமடைஞ்சிடும். இப்போ ஆசிட் பட்டு நம்ம வயித்துக்குள் வெந்து போய் புண்ணாயிடும். அதுதான் அல்சர்.

ஸோ, வயித்துக்குள்ள நம்ம உணவை முழுமையா ஜீரணம் பண்ணி நம்ம செல்களோட உபயோகத்துக்காக மாற்றும் ஆசிட் கலந்த நீர்மத்தில் ஆசிட் தவிர என்னவெல்லாம் இருக்கும்...? சோடியம் குளோரைடு மற்றும் பொட்டாசியம் குளோரைடு. இது நாம சாப்பிடும் உணவு வகைக்கு ஏற்ப ஆசிட்டோட அமிலத்தன்மையை   நிலையா வெச்சிக்கிரதுக்காக. ஏன்னா, நம்ம இரைப்பைக்குள்ள pH 2-3 க்குள்ள இருக்கணும். இரைப்பையில் சுரக்கும் ஆசிட் pH 1-2 இருக்கும். 

இப்போ கார்போஹைட்ரேட், லிப்பிட் மற்றும் புரோட்டீன் உணவுகள் நல்ல முறையில் ஜீரணம் ஆகி நல்ல கூழ் மாதிரி ஆகி சிறு குடலுக்குள்ள அனுப்பப்பட்டு, அங்க மிச்சம் மீதி இருக்கிற எல்லா உணவும் கல்லீரல், கணையத்தில் இருந்து வர சுரப்பிகள் மூலமா முழுமையா ஜீரணம் பண்ணி, அங்க உறுஞ்சு செல்கள் மூலமா இரத்தத்துக்குள்ள உறுஞ்சப்பட்டு விடும். முழுமையா ஜீரணம் ஆன உணவு எப்படி சிறுக்குடல் உறுஞ்சு செல்கள் மூலம் நம்ம உடலுக்குள்ள உறுஞ்சப்படுது அப்படிங்கறதும் ஒரு தனி வேலை. தனியா தெரிஞ்சிக்க வேண்டிய அளவு முக்கியமானதும் கூட. ஏற்கனவே இந்த பதிவு பெருசா ஆகிட்டதால அதை,  அடுத்த பதிவுல பார்க்கலாம். ஸோ, அடுத்த பதிவுல சிந்திப்போம்.