Thursday, June 28, 2012

செல் அமைப்பு: செல் சுவர் - CELL WALL - விரிவான பார்வை...!!!

மக்களே...!!!

நம்ம புது பகுதியான சில சுவாரஸ்யங்கள் பகுதிக்கு நல்ல வரவேற்பு. எழுதின ரெண்டு நாளுக்குள்ள கிட்டத்தட்ட 70 பேரு படிச்சிருக்காங்க. பதிவு போட்டதும் 400 -500 பேரு படிக்கிற ப்ளாக் எல்லாம் இருக்குன்னு தெரியும். இருந்தாலும் அறிவியல் பத்தி எழுதற ப்ளாக்ல இந்த எழுபதே ரொம்ப பெருசு. அடுத்த பதிவுக்கு தாமதமானதுக்கு மன்னிக்கணும். என்னோட நேரம் இங்க ரொம்பவே டைட்டா போயிட்டு இருக்கு.

நண்பர்கள் நம்ம வலைப்பூவை இன்னும் நெறைய பேருக்கு அறிமுகப்படுத்த உதவி செய்யிங்க. உங்க நண்பர்களுக்கு நம்ம வலைப்பூவை பத்தி சொல்லுங்க. அதோட உங்க எல்லாரையும் நம்மளோட முகநூல் பக்கத்துக்கு சீக்கிரமே எதிர் பார்க்கறேன். 


ஓகே... இன்னைக்கு பதிவு செல் சுவரை பத்தின விரிவான பார்வை. இது போன பதிவோட தொடர்ச்சி. பதிவுக்கு போகலாம்.

செல் அமைப்பு: செல் சுவர் - CELL WALL - விரிவான பார்வை 

செல் சுவர் அப்படிங்கறது தாவர செல்லுக்கு இருக்கிற தனித்துவம் கொண்ட செல் உறுப்பு. செல் சவ்வுக்கு வெளிய, உறுதியான, சில செல்களுக்கு கொஞ்சம் நெகிழ்வான, வளைய கூடிய தன்மையோட இருக்கிற அமைப்பு. உதாரணத்துக்கு ஒரு மரத்தை எடுத்துக்கிட்டா, அதனோட கடினமான அடிப்பகுதி செல்களுக்கும் செல் சுவர் இருக்கும். மரத்தோட வளரும் நுனி மொட்டு செல்களுக்கும் செல் சுவர் இருக்கும். ஆனா மரத்தோட இந்த இரண்டு பகுதிகளும் அதனோட தன்மையில வேறுபடுது இல்லையா...? அப்போ செல் சுவரும் அதற்கு ஏத்த மாதிரி வேறுபடனும்.


THANKS TO: micro.magnet.fsu.edu

ஓகே... இந்த செல் சுவர், நான் போன பதிவுலயே சொன்ன மாதிரி பேக்டீரியா, பூஞ்சைகள், ஆல்கே, அப்புறம் தாவரங்களுக்கு மட்டும் இருக்கிற அமைப்பு. மொத்தமா இதை செல் சுவர் அப்படின்னு பொதுவா சொன்னாலும், இந்த செல் சுவர் அதனோட வேதி கட்டமைப்புல  இனத்துக்கு இனம் மாறுபடும். பேக்டீரியாவோட  செல் சுவர் அதோட வேதி அமைப்பு, அதனோட கட்டமைப்பு  ஆல்கேவோட செல் சுவரை விட வேற மாதிரி இருக்கும். தாவரங்களோட செல் சுவர் வேற மாதிரி இருக்கும். சில பூச்சி அல்லது வண்டு இனங்களோட மேல்புற ஓடு போன்ற இறக்கைகள் கூட செல் சுவரை கொண்ட ஒருவகை செல்களால் ஆனதே. ஆச்சர்யம் தான் இல்லையா...!!!


THANKS TO: planet.uwc.ac.za, harunyahya.com  and itsnature.org

இப்போ வேதி அமைப்புன்னு எடுத்துக்கிட்டா, இது பெரும்பாலும் கார்போஹைட்ரேட்டை அடிப்படையா கொண்டதா இருக்கும். அதாவது முழுமையா கார்போஹைட்ரேட்டாகவோ அல்லது கார்போஹைட்ரேட்டை அடிப்படையா வெச்சி இன்னும் சில வேதி பொருள்களை (CARBOHYDRATE DERIVATIVES ) கூட கொண்டதாவோ இருக்கலாம்.


உதாரணத்துக்கு, தாவர செல்லோட செல் சுவர் முழுமையான கார்போஹைட்ரேட்டால்  ஆனது. அதுவும் பாலி சாக்ரைட் - POLY SACCHARIDE வகையை சேர்ந்த செல்லுலோசால் - CELLULOSE ஆனது. செல்லுலோஸ் பத்தி நமக்கு நல்லாவே தெரியும். கார்போஹைட்ரேட் பத்தின பதிவுல படிச்சிருக்கோம்.


இதேபோல பாலிசாக்ரைட்டால் ஆனா இன்னொரு செல் சுவர்  பூஞ்சைகளோட செல் சுவர். இது குளுகோஸ் அமைன் பாலி சாக்ரைடால - GLUCOSAMINE POLY SACCHARIDE (ஒரு அமினோ குரூப்பை அதிகமா கொண்ட குளுகோஸ் மூலக்கூறு ) ஆனது. இந்த பாலி சாக்ரைடுக்கு கைட்டின் - CHITIN அப்படின்னு பேரு. இது இந்த குளுகோஸ் மூலக்கூறுகளை செயின் மாதிரி கோர்த்து உருவான பாலி சாக்ரைடால் ஆனது.


இது மாதிரி, பல வகையான வேறு வேறு வேதி பொருட்களால் ஆன செல் சுவர்கள் இங்க இருக்கு.

1. பெப்டிடோ கிளைக்கன் - PEPTIDOGLYCAN - நீளமான கார்போஹைட்ரேட் செயின்ல சிறு சிறு புரோட்டீன்கள் இணைந்து உருவானது - பேக்டீரியாவோட செல் சுவர்

2. கிளைக்கோ புரோட்டீன்கள் - GLYCOPROTEINS - நீளமான புரோட்டீன் செயின்ல சிறு சிறு கார்போஹைட்ரேட் செயின்கள் இணைந்து உருவானது - ஆர்க்கியே பேக்டீரியாவோட செல் சுவர்

ஸோ, இந்த செல் சுவர் அப்படிங்கறது நீளமான கார்போஹைட்ரேட்கள் அல்லது கார்போஹைட்ரேட்களை அடிப்படையா கொண்ட கலவையான வேதி பொருட்கள் சிறு புரோட்டீன் செயின்கள் மூலம் இணைக்கப்பட்டு ஒரு சிக்கலான சல்லடை மாதிரி உருவானது. அதே சமயம் கடினமானது. உறுதியானது. சிம்பிளா சொல்லனும்ன்னா, தறியில நெய்யப்பட்ட துணி மாதிரி. படத்தை பார்த்திங்கன்னா உங்களுக்கு புரியும்.

இந்த செல் சுவருக்கு என்ன வேலை...? கடினமா இருக்கு... உறுதியா இருக்கு அப்படிங்கறதை தவிர...? ஏன்னா விலங்கு செல்கள் செல் சுவர் இல்லாமையும் நல்லா தானே இருக்கு.

செல் சுவர் வெச்சிருக்கிற செல்களுக்கு செல் சுவர் தான் ஒரு முக்கியமான பாதுகாப்பு எல்லை. எதுவா இருந்தாலும் இதை தாண்டி தான் வரணும். செல் சுவரோட முக்கியமான வேலை செல்லுக்குள்ள வர எந்த ஒன்னையும் நல்லா வடிக்கட்டி அனுப்பறது. செல்லுக்கு மிக அத்தியாவசியமான உணவு குளுகோஸ், சில மினரல்கள், அப்புறம் கார்பன் டை ஆக்சைடு இந்த சில பொருட்களை தவிர மீதி எல்லாமே செல் சுவரால வடிக்கட்டி தான் அனுப்பப்படும்.

இன்னொரு முக்கியமான வேலை - ஆஸ்மாடிக் உயர் அழுத்தம் - OSMATIC PRESSURE - அதாவது செல்லுக்கு உள்ளேயும் வெளியவும் அதாவது செல் சுவருக்கு உள்ளே மற்றும் செல் சுவருக்கு வெளியவும் ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு, மினரல்கள், உப்புகள் அப்படின்னு எல்லாமே  சம அளவுல இருக்கணும். இப்போ உப்புகளோட அளவு செல்லுக்கு உள்ளேயும் வெளியவும் சமமா இல்லன்னா, இந்த அளவை சரி செய்ய எந்த பக்கம் உப்புகளோட அளவு அதிகமா இருக்கோ அந்த பக்கத்துக்கு தண்ணீர் வர ஆரம்பிக்கும். ஸோ, இப்போ செல்லுக்கு உள்ள தண்ணீர் வரதா இருந்தா செல் வீங்கும். அதுவே செல்லுல இருந்து வெளிய போறதா இருந்தா செல் சுருங்கும். இதை செல் சுவர் தடையா இருந்து கட்டுபடுத்தி செல்லை ஆபத்துல இருந்து காக்குற வேலையை செய்யிது.

இன்னொரு முக்கியமான வேலை, ஒவ்வொரு செல்லும் தனக்கு பக்கத்துல இருக்கிற செல்லோட ஒட்டிக்கிட்டு இருக்கணும். சுவத்துல ஒவ்வொரு செங்கல்லும் பக்கத்துல இருக்கிற செங்கல்லோட ஒட்டி இருக்கிற மாதிரி. இல்லைன்னா, அது தாவரமா இருந்தாலும், விலங்கா இருந்தாலும் முழு உருவம் கிடையாது. கிடைக்காது. இந்த வேலையை தாவரங்களில் செய்யிறது செல் சுவர் தான். 

பல்வேறு வகையான செல்சுவர்களோட வேதி கட்டமைப்பை விளக்க படங்களோட இங்க எழுத நெனச்சிருந்தேன். ஆனா பதிவோட நீளம் கருதி அடுத்த பதிவுக்கு தள்ளி வெச்சிட்டேன். ஓகே மக்களே...!!! எனக்கு இப்போவெல்லாம் டைம் கெடைக்கறது தான் கஷ்டமா இருக்கு. இருந்தாலும் நேரம் ஒதுக்கி எழுத முயற்சி பண்றேன். அடுத்த ஒரு நல்ல சுவாரஸ்யமான பதிவோட மீண்டும் சிந்திக்கலாம்.