Tuesday, March 12, 2013

செல் அமைப்பு: மைட்டோகாண்ட்ரியாவின் கட்டமைப்பு - MITOCHONDRIAL STRUCTURE - 7

மக்களே...!!!

இன்னைக்கு பதிவை சந்தோசமான செய்தியோட ஆரம்பிக்கிறேன். நான் இங்க எழுத ஆரம்பிச்சி 11 மாசம் ஆகுது. அதுக்குள்ளே நம்ம வலைப்பூ நம்ம ஊரு மற்றும் வெளிநாட்டு வாசகர்கள் மத்தியில ஓரளவு நல்லாவே போய் சேர்ந்திருக்கு. வெற்றிகரமா பதிமூணாயிரம் PAGE VIEWS தாண்டியிருக்கிறோம். உயிர்நுட்பம் வலைப்பூவிற்கு 50 பின்தொடர்பவர்கள் சேர்ந்திருக்காங்க. எந்த விதமான பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாத வெறும் உயிரியல் மட்டும் எழுதும் வலைப்பூவுக்கு இந்த அளவு வரவேற்பு நிஜமாவே என்னை பிரமிக்க வைக்கிது. நான் எழுதினாலும் இல்லைன்னாலும் தினமும் 60-70 வாசகர்கள் குறைந்தது ஒரு முறையாவது நம்ம வலைப்பூவுக்கு  வந்து போறாங்க. ரொம்ப சந்தோசமா இருக்கு. எல்லாம் நீங்க குடுக்கற வரவேற்பும், ஆதரவும் மட்டும் தான் காரணம். உங்க எல்லாருக்கும் என்னோட பணிவான வணக்கங்களையும், நன்றியையும் இந்த சந்தர்ப்பத்தில் சொல்லிக்கிறேன். நம்ம நான் வலைப்பூவுல எழுதறதை FACE BOOK கணக்குலயும் பகிர்ந்திட்டு வரேன். எல்லாரும் தவறாம படிச்சிட்டு உங்க கருத்துக்களை பின்னூட்டத்தில் சொல்லுங்க. முடிஞ்சா உங்களுக்கு தெரிஞ்ச சில பேருக்கு நம்ம வலைப்பூவை அறிமுகப்படுத்தி வைங்க.  அதன் மூலம் இன்னும் நெறைய பேருக்கு நம்ம வலைப்பூ போய் சேரும். 

ஓகே... விசயத்துக்கு வருவோம். செல் அமைப்பு தொடர்ல செல் சுவர் பத்தி நாம பார்த்திட்டு இருந்தது கொஞ்ச நாள் முன்னாடியே முடிஞ்சிடுச்சி. அடுத்ததா நாம பார்க்க இருக்கறது மைட்டோகாண்ட்ரியா பத்தி. அதுக்கு முனாடி தெரிஞ்சிக்க வேண்டிய சில விஷயங்கள் இருந்ததால அது பத்தி சொல்ல ஆரம்பிச்சேன். அதுவும் ஓரளவுக்கு முடிஞ்சது. இப்போ, இங்க மைட்டோகாண்ட்ரியாவை பத்தின முதல் அறிமுகம், அதன் அமைப்பு, வேலை, அதன் முக்கியத்துவம் அப்படின்னு அதனோட ஆதி முதல் அந்தம்  வரை ஒன்னு ஒண்ணா சொல்ல ஆரம்பிச்சா சரியா இருக்கும். இன்னைக்கு பதிவுக்கு போகலாம்.  

மைட்டோகாண்ட்ரியா - MITOCHONDRIA

மைட்டோகாண்ட்ரியா - இந்த பேரை நாம கேள்விபட்டிருப்போம். நம்ம வலைப்பூ ஆரம்பத்தில் இருந்து படிக்கிற வாசகர்களுக்கு ஓரளவுக்கு இதை பத்தி தெரிஞ்சிருக்கும். நம்ம செல்லோட POWER CENTER - பவர் சென்டர் (பவர் ஸ்டார் அல்ல) - சக்தி உருவாகும் இடம். நாம சாப்பிடும் சாப்பாடு செரிக்கப்பட்டு குளுகோஸ் மூலக்கூறுகளாக மாத்தினதுக்கு அப்புறம், உருவான குளுக்கோஸ் முழுமையான, நம்ம அன்றாட தேவைக்கான, சக்தியா மாற்றப்படறது இங்க தான். இந்த மைட்டோகாண்ட்ரியாவோட முன் வரலாறுன்னு பார்த்தா, பல ஆச்சர்யமான, சுவாரஸ்யமான விஷயங்கள் கொட்டிக்கிடக்குது. அதுல ரொம்ப ரொம்ப ஆச்சர்யப்பட வைக்கிற ஒரு ரெண்டு விசயங்களை நான் இங்க சொல்றேன். ஒன்னு, முதன் முதல்ல செல்கள் உருவாகும்போது அதுல மைட்டோகாண்ட்ரியா அப்படிங்கற ஒன்னு இல்லவே இல்லை. ரெண்டாவது, இப்போ இருக்கிற மைட்டோகாண்ட்ரியா நம்ம செல்லை சேர்ந்த செல் நுண்ணுறுப்பு கிடையாது, அது  முன்னொரு காலத்தில ஒரு தனி பேக்டீரியா. விலங்கு செல்கள்ல மைட்டோகாண்ட்ரியா அப்படின்னா தாவர செல்கள்ல இதே சக்தி தயாரிக்கும் வேலையை செய்யிறது குளோரோபிளாஸ்ட். இதுக்கும் அதே முன் வரலாறு தான். இது கண்டிப்பா உங்களுக்கு ஆச்சர்யமா இருக்கும். வாங்க...!!! அதை இன்னும் விளக்கமாவே பார்க்கலாம்.


முதல்ல இந்த பூமி உருவானப்போ பல லட்சக்கணக்கான வருசங்களுக்கு இங்க எந்த விதமான உயிர்களும் கிடையாது. சூரியன்ல இருந்து பிரிஞ்சி வந்த மிகப்பெரிய விண்கல் தான் இந்த பூமி. அதுக்கப்புறமா பல விண்கற்கள், நட்சத்திரங்கள் மூலமா பல  தாக்குதல்களை சந்திச்சி, எப்படியோ கொஞ்சம் கொஞ்சமா புவிஈர்ப்பு விசை உருவானதும், தனக்கு பக்கத்தில வர எல்லாத்தையும் தனக்குள்ள ஈர்த்து மிகப்பெரிய கோளமா, கோளா உருவானது. இப்படி பல கோள்களும், நட்சத்திரங்களும், விண்கற்களும் ஒன்னு சேர்ந்ததுல நம்ம பூமியில கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன் (ஆக்சிஜன் இல்லை) இந்த மூணும் நம்ம பூமிக்கு வந்திடுச்சி, ஆனா தனி தனியா இருந்தது. நாளடைவில் (அதுக்காக சில நாள் எல்லாம் இல்லை - சில ஆயிரம் வருடங்கள்) இதுல்லாம் ஒன்னுக்கொன்னு வினை புரிஞ்சி சில கூட்டு மூலக்கூறுகள்  உதாரணத்துக்கு - மீத்தேன் உருவானது. அதுல இருந்து கொஞ்சம் கொஞ்சமா பரிணாம அடைஞ்சி முதல் உயிருள்ள செல்கள் உருவானதுக்கு அப்புறமும் ஆக்சிஜன் இந்த பூமியில் இல்லை. அப்போ இருந்த  உயிர்கள் எல்லாமே ஆக்சிஜன் இல்லாமயே, தண்ணியில கெடைச்ச சில கூட்டு கரிம வேதி மூலக்கூறுகளை சாப்பிட்டு உயிர் வாழ்ந்திட்டு இருந்தது. இன்னொரு முக்கியமான விஷயம் - ஆக்சிஜன் தனியா கிடையாதே தவிர, தண்ணியாவும், கார்பன் டை ஆக்சைடுளையும் சேர்ந்து இருந்தது. ஆனா, ஆக்சிஜன் தனியா இருக்கிற வரைதான் அதால நமக்கு உபயோகம். இல்லன்னா நமக்கு எந்த விதமான பிரயோஜனமும் இல்லை.



அப்போ ஹைட்ரஜன், நைட்ரஜன் மற்றும் கார்பன் தனக்கு தானே தன்னிச்சையா வினைபுரிஞ்சி உருவான கூட்டு மூலக்கூறுகள்ள பல அமினோ அமிலங்கள், சர்க்கரை மூலக்கூறுகள் இப்படி எல்லாமே அடக்கம். தானா உருவான இது எல்லாமே அப்போ பூமி முழுக்க தண்ணி தானே இருந்தது, ஸோ,  அப்போ இருந்த தண்ணியில கரைஞ்சி இருந்தது. சரியா சொல்லணும் அப்படின்னா அப்போ இருந்தது வெறும் தண்ணி இல்லை, இது எல்லாம் வேதி மூலக்கூறுகளும் கரைஞ்சி உருவான லிக்விட் (LIQUID) கெமிக்கல் அப்படின்னு சொன்னா அதுதான் சரியா இருக்கும். இததான் அப்போ இருந்த ஒரு செல் உயிர்கள் சாப்பிட்டு, ஆக்சிஜன் இல்லாமையே ஜீரணம் பண்ணி உயிர் வாழ்ந்திட்டு இருந்தது. அதுவரைக்கும் எல்லா செல்களும் சாப்பாட்டுக்காக தன்னை சுத்தி இருந்த வாழிடத்தை நம்பி இருந்தது. அதன்மூலம் சாப்பிட்டு தன்னோட எண்ணிக்கையை பெருக்கிட்டு இருந்தது. இப்படி செல்கள் எண்ணிக்கை பெருக பெருக, புது விதமான பிரச்சனை வர ஆரம்பிச்சது. அது உணவுக்கான போட்டி. செல்களோட எண்ணிக்கை கம்மியா, கட்டுக்குள்ள இருந்த வரை எதுவும் ஒன்னும் பிரச்சனை இல்லை. பிறகு எண்ணிக்கை பெருக பெருக உணவுக்கான போட்டி அதிகமாக ஆரம்பிச்சது. இப்படி செல்கள் எண்ணிக்கை அதிகமாகி போட்டி அதிகமாக அதிகமாக செல்கள் தன்னோட பங்கு உணவை தக்க வைத்துக்கொள்ள ஏதாவது செய்தாக வேண்டிய நிலைமை. அதனால ஒவ்வொரு செல்லும் தான் இருந்த இடம், அந்த இடத்தில் கிடைத்த உணவு, இதை பொறுத்து, என்ன செஞ்சா தனக்கான உணவை கஷ்டப்படாம பெற முடியும்ன்னு பார்த்து அதுக்கேத்த மாதிரி தன்னோட பண்புகள், குணநலன்கள் எல்லாத்தையும் மாத்திக்க ஆரம்பிச்சது. இதை தான் நாம பரிணாமம் அப்படின்னு சொல்றோம். ஆனா, இந்த மாறுபாடு எல்லா செல்லுக்கும் ஒரே மாதிரி இருக்காது. இருக்கல. அது இடத்துக்கு இடம், கெடச்ச உணவு இதுக்கெல்லாம் ஏத்த மாதிரி மாறி மாறி தான் இருந்தது. அதனால தான் இந்த உலகத்துல நெறைய வகையான செல்கள், உயிரினங்கள் நமக்கு இடையே இருக்கு.

ஸோ, ஏற்கனவே  இருந்த ஒரு செல் தன்னை தானே மாத்திக்கிட்டு செய்த ரெண்டு செயல் இன்னும் தெளிவா சொல்லனும்ன்னா செல்கள் தனக்குள்ள வளர்த்துக்கிட்ட தனக்கு தானே செய்துக்கிட்ட ரெண்டு மாற்றம் தான் இந்த பூமியை இன்னும் உயிர்ப்பா வெச்சிருக்கு. இந்த ரெண்டு மாற்றம் மட்டும் இல்லான்னா இன்னும் இந்த பூமி முழுக்க வெறும் ஒரு செல் உயிர்கள் மட்டும் தான் இருந்திருக்கும்.  எப்படின்னா, இதுவரைக்கும் இருந்த செல் எல்லாமே வெளியில கெடைச்ச உணவை தான் தேடி தேடி சாப்பிட்டு இருந்தது. இப்படியே இருந்திருந்தா, செல் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க கண்டிப்பா உணவோட அளவு குறைஞ்சிட்டு தான் இருந்திருக்கும். ஒரு அளவுக்கு அப்புறம் உணவோட அளவுக்கு ஏத்த மாதிரி செல்கள் எண்ணிக்கை குறைஞ்சி அப்புறம் அதிகமாகி இப்படி தான் இருந்திருக்கும்.

ஆனா, செல்கள் தனக்குள்ள ஏற்படுத்திக்கிட்ட ரெண்டு முக்கியமான மாற்றம் -

1. AUTO SYNTHESIS - தனக்கு தானே உணவை தயாரிக்க கத்துக்கிட்டது
2. MULTI CELLULARITY - கூட்டு வாழ்க்கை - அதாவது பல்வேறு வகையான
திறமைகளை கொண்ட ஒற்றை செல்கள் சேர்ந்து வேலைகளை பங்கு போட்டுகிட்டு ஒரு உயிரா வாழ ஆரம்பிச்சது.

இந்த ரெண்டும் தான் இன்னைக்கு இந்த பூமியில இவ்வளவு உயிர்கள் தோன்ற காரணமா அமைஞ்சது.

முதன் முதல்ல உணவை தயாரிக்க ஆரம்பிச்ச ரெண்டு பேக்டீரியா சையனோபேக்டீரியா - CYANOBACTERIA மற்றும் ஆல்ஃபா - புரோட்டியோ பேக்டீரியா - α-PROTEO BACTERIA. இது ரெண்டும் தான்முதன் முதல்ல ஆக்சிஜனை உபயோகப்படுத்தினது மற்றும் ஆக்சிஜனை உபயோகப்படுத்தி உணவை ஜீரணம் செய்து தனக்கு தேவையான சக்தியை தயார் பண்ணிக்கிட்டது, தன்னோட உணவை தானே தயார் பண்ணிக்கிட்டது, சூரிய ஒளியையும், கார்பன் டை ஆக்சைடையும் உபயோகப்படுத்தி சக்தி தயாரிச்சது - இந்த ரெண்டும் தாவரங்கள்ள நடக்கிற ஒரு செயல், இப்படின்னு பல புரட்சிகளை பண்ணினது. (இங்க எனக்கு ஒரு கேள்வியும் உண்டு. அதை சந்தேகம் அப்படின்னு கூட சொல்லலாம். அந்த காலக்கட்டத்தில், ஆக்சிஜன் அப்படின்னு ஒன்னு தனியா இல்லாத பட்சத்தில், அப்போ தண்ணீரும், கார்பன் டை ஆக்சைடும் எப்படி உருவாகி இருக்கும்? தெரிஞ்சவங்க சொல்லலாம்) அது எப்படின்னு நாம இப்போ பார்க்க போறது இல்லை ஆனா, அதனால விளைந்த விளைவுகள் தான் இப்போ நாம முக்கியமா தெரிஞ்சிக்க போறோம். இந்த செல்கள் ரெண்டும் இப்படி இந்த வகையில மேம்பாடு அடைஞ்ச மாதிரி வேற இடத்துல செல்கள் வேற மாதிரி மேம்பாடு  அடைஞ்சிருந்தது. இப்படி செல்கள் சில விசயத்துல நல்ல முன்னேற்றமும், சில விசயங்கள்ல பெரிய வளர்ச்சி அடையாம இப்படி ரெண்டுங்கெட்டானா தான் இருந்துச்சி. அப்புறம் ஒன்னுக்கொன்னு அதனோட தனி தன்மையை உணர்ந்து, அதுக்கு மேல தனக்கு என்ன வேணும்ன்னு யோசிச்சி, அந்த வேலையை செய்யக்கூடிய செல்களோட கூட்டணி போட்டு கடைசியா நமக்கு கெடைச்சது தான் இன்னைக்கு நாம பார்க்கற முழுமையா மேம்பாடு அடைஞ்ச செல்கள். சாதாரண செல் சையனோபேக்டீரியாவோட (CHLOROPLAST - குளோரோபிளாஸ்ட்) கூட்டணி போட்டது தாவர செல்லாவும், சாதாரண செல் புரோட்டியோபேக்டீரியாவோட (MITOCHONDRIA - மைட்டோகாண்ட்ரியா) கூட்டணி போட்டது விலங்கு செல்லாவும் உருவெடுக்க நமக்கு கடைசியா தாவரம் விலங்கு அப்படின்னு இரு வேறு உலகம் கெடைச்சது. இதுதான் நமக்கு மைட்டோகாண்ட்ரியாவும், குளோரோபிளாஸ்ட்டும் கெடைச்ச கதை.


இருந்தாலும் இன்னமும் புரோகேரியோட் செல்கள்ல இன்னமும் மைட்டோகாண்ட்ரியா  கிடையாது. அதுக்கு பதிலா செல் சவ்வே சக்தி தயாரிக்கும் வேலையை பார்த்திடும். இப்படி மேம்பாடு அடைஞ்ச செல் இந்த பேக்டேரியாவுக்கு உணவும் பாதுகாப்பும் கொடுக்க, ஆக்சிஜனை உபயோகப்படுத்த தெரிஞ்ச பேக்டீரியா சக்தி தயாரிக்க உதவி செய்து தன நன்றியை தெரிவிச்சது. இப்படி ஒன்னுக்கொன்னு உதவி செய்துக்கற முறையை SYMBIOSIS அப்படின்னு ஆங்கிலத்துல சொல்வாங்க. இதை தமிழ்ப்படுத்த தெரியல. அதோட செல்லுக்குள்ளயே போய் தங்கியிருந்து உதவி செய்து, உதவி வாங்கிக்கறதுக்கு ENDOSYMBIOSIS அப்படின்னு பேரு. இதையும் தமிழாக்கம் செய்யணும். தெரிஞ்சவங்க சொல்லுங்க ப்ளீஸ்...!!!!!!! ஸோ மக்களே, முன்வரலாறு போதும். விளக்கமா நாம பரிணாமம் தொடர்ல பின்னாடி பார்க்கலாம். இப்போ நம்ம பதிவோட முக்கியமான செய்தி - மைட்டோகாண்ட்ரியா வேதி கட்டமைப்புக்கு  வருவோம்.

மைட்டோ காண்ட்ரியா - MITOCHONDRIA - வேதிக்கட்டமைப்பு

மைட்டோகாண்ட்ரியா இது ஒரு MEMBRANE BOUND ORGANELLE - அதாவது செல்லை சுற்றி இரட்டை கொழுப்பு படலம் செல் சவ்வு இருக்கிற மாதிரி இதுக்கும் இரட்டை படல செல் சவ்வு உண்டு. வெளிப்புறம் மைட்டோகாண்ட்ரியாவை முழுமையா சூழ்ந்த  வெளிப்புற சவ்வும், அதுக்கு கொஞ்சம் இடைவெளி விட்டு, அடுத்ததா உட்புறம் நீளமான மடிப்பு மடிப்பாக சுருண்ட நிலையில் உட்புற சவ்வும் கொண்டது. நடுவுல ஒரு நீர்மம் நிரம்பிய நிலையில் நடு இடம், அந்த இடத்துல மைட்டோகாண்ட்ரியாவுக்கு தேவையான அனைத்து புரோட்டீன்கள், DNA  எல்லாம் நெறைஞ்சிருக்கும். மைட்டோ காண்ட்ரியாவோட அனைத்து வேலைகளும் வெளிப்புற மற்றும் உட்புற செல் சவ்வுக்கு இடையில் இருக்கிற இடத்திலும், உட்புற சவ்வுக்கு உள்ளே இருக்கிற இடத்திலும் நடக்கும். மைட்டோகாண்ட்ரியாவோட ஒவ்வொரு பாகத்தையும் பத்தி ஒவ்வொன்னா தனித்தனியா பார்க்கலாம்.



வெளிப்புற சவ்வு - OUTER MEMBRANE

மைட்டோகாண்ட்ரியாவோட வெளிப்புறம் சூழ்ந்த சவ்வு. பேக்டீரியாதான் மைட்டோ காண்ட்ரியாவா மாறினது அப்படிங்கறதால இந்த சவ்வு ஒரு செல் சவ்வு தான். அதனோட அமைப்பு அப்படியே செல்சவ்வை ஒத்த இரட்டை கொழுப்பு படலம். செல் சவ்வை மாதிரியே கரிம வேதிப்பொருட்களை தேர்ந்தெடுத்து உள்ளே அனுப்பும். தேர்ந்தெடுத்து வெளிய அனுமதிக்கும். ATP, பைருவேட் - PYRUVATE (குளுக்கோஸ் ஜீரணம் ஆகும்போது கிடைக்கும் கரிம வேதிப்பொருள்), ஆக்சிஜன் இதெல்லாம் வெளிப்புற சவ்வு வழியா எந்த வித தடையும் இல்லாம போய் வரும்.

உட்புற சவ்வு - INNER MEMBRANE

வெளிப்புற சவ்வுக்கு அடுத்ததா மைட்டோகாண்ட்ரியாவுக்கு உட்புறமா கொஞ்சம் இடைவெளி விட்டு அமைஞ்சிருக்கும். இதுவும் கொழுப்பு இரட்டை படல அமைப்புல செல் சவ்வு மாதிரி அமைப்பு கொண்டது. ஆனா இது தட்டையா ஒரே தளத்துல அமையாம, மைட்டோகாண்ட்ரியாவோட உட்புறம்  மடிஞ்சி மடிஞ்சி அமைஞ்சிருக்கும். இந்த உட்புற சவ்வு மேல தான் மைட்டோகாண்ட்ரியாவோட எல்லா வேலையும் நடக்கும். இது சும்மா தட்டையா இருந்தா இதுக்கு மேல கொஞ்சம் தான் இடம் இருக்கும். அதுவே உட்புறமா மடிஞ்சிருக்கும் போது நெறைய இடம் கிடைக்கும். அதனால நெறைய வேலைகள் சிரமம் இல்லாம நடக்கும். அப்படி மடிஞ்சிருக்கும் அமைப்புக்கு CRISTAE - கிறிஸ்டே அப்படின்னு பேரு.  இந்த கிறிஸ்டேல தான் எல்லா வேலையும் முக்கியமா ADP-ல இருந்து ATP - தயாரிக்கும் வேலை நடக்கும். இந்த வேலையை செய்யும் புரோட்டீன் ATP சிந்தேஸ் மற்றும் ATPase - ஏடிபியேஸ் அப்படிங்கற என்சைம்கள். இந்த கிறிஸ்டே முழுக்க ஏடிபியேஸ்சும், ATP சிந்தேசும் நெறைஞ்சிருக்கும். உட்புற சவ்வு மடிஞ்சி மடிஞ்சி இருந்தாலும் இது ஒரு மூடின அமைப்பு. உட்புறம் முழுக்க மீதி இருக்கிற இடம் மேட்ரிக்ஸ் - MATRIX  அப்படிங்கற நீர்மம் நிறைஞ்சிருக்கும்.

ATPase - ஏடிபியேஸ்

ஏடிபியேஸ் அப்படிங்கறது ஒரு கூட்டு புரோட்டீன். ATP உருவாகும் இடம். அதாவது ATP உருவாக தேவையான ADP மற்றும் பாஸ்பேட் மூலக்கூறுகள் உருவாக்கி தரும் வேலையை செய்யும். மைட்டோகாண்ட்ரியாவோட உட்புற சவ்வு மேல, சவ்வை ஊடுருவி அமைஞ்சிருக்கும். இந்த மொத்த கட்டமைப்பு மூணு  பகுதியா பிரிக்கப்பட்டு இருக்கும். கீழ் பீடம், நடு  வால் மற்றும் மேல்புற தலை. பீடம் K - RING - கே - வளையம் அப்படின்னு பேரு. அதோட நடு வாலும், மேல்புற தலையும் F1 or V1 பகுதி அப்படின்னும், கீழ்புற பீடம் F0 or V0 பகுதி அப்படின்னும் சொல்வாங்க. இந்த பீடம் தான் மைட்டோகாண்ட்ரியாவோட சவ்வை ஊடுருவி அமைஞ்சிருக்கும். மொத்தமா இதை ATPase அப்படின்னு சொன்னாலும் இது ஒரு கூட்டு புரோட்டீன்.

1. மேல்புற தலை (HEAD ) - மூன்று ஆல்ஃபா புரோட்டீன்கள், மூன்று பீட்டா
   புரோட்டீன்கள், ஒரு டெல்டா புரோட்டீன் சேர்ந்தது.
2. நடு வால் (STALK ) - ஒரு காம்மா புரோட்டீன், ஒரு எப்சிலான் புரோட்டீன்
3. கீழ்புற பீடம் (BASE )  - பத்து C புரோட்டீன்கள், ஒரு A புரோட்டீன் மற்றும் B
    புரோட்டீன்.

INTER MEMBRANE SPACE - இரு சவ்வுகளுக்கு இடையேயான இடைவெளி

மைட்டோகாண்ட்ரியாவோட வெளிப்புற மற்றும் உட்புற சவ்வுகளுக்கு இடையேயான இடைவெளி. இந்த இடைவெளியில பாசிடிவ் சார்ஜ் இருக்கிற ஹைட்ரஜன் மூலக்கூறுகள் நெறைய இருக்கும். இது எதுக்குன்னா ஒரு ADP பாஸ்பேட் மூலக்கூறோட சேர்ந்து ஒரு ATP வரணும் அப்படின்னா மூன்று ஹைட்ரஜன் மூலக்கூறுகள் ATPase வழியா உட்புற சவ்வை கடந்து போகணும். அதுக்காக நெறைய ஹைட்ரஜன் மூலக்கூறுகள் இந்த இடத்தில் சேர்த்து வெச்சிருக்கு.

கிறிஸ்டே - CRISTAE

கிறிஸ்டே அப்படிங்கறது மைட்டோகாண்ட்ரியாவோட உட்புற சவ்வு மைட்டோகாண்ட்ரியாவோட நடுப்பகுதி நோக்கி மடிப்பு மடிப்பாக நீண்டு உருவான பகுதி. இது எதுக்காக உருவானதுன்னா உட்புற சவ்வோட நீளத்தை அதிகரிக்க இது மாதிரி ஆகியிருக்கு. இந்த உட்புற சவ்வுமேல இருக்கிற எல்லா புரோட்டீன்களும், உட்புற சவ்வு மேல நடக்கிற எலா வேலையும் கிரிஸ்டேவுலயும் நடக்கும். இதுமாதிரி உட்புறம் மடிந்த விதம் எல்லாம் மைட்டோகாண்ட்ரியாவுக்கு மைட்டோகாண்ட்ரியா மாறுபடும்.

மேட்ரிக்ஸ் - MATRIX 

இந்த மேட்ரிக்ஸ் மைட்டோகாண்ட்ரியாவோட நடுப்பகுதி. மேட்ரிக்ஸ் அப்படிங்கற நீர்மம் நிறைந்தது. மைட்டோகாண்ட்ரியாவோட எல்லா புரோட்டீன்கள், என்சைம்கள், மைட்டோகாண்ட்ரியாவோட DNA எல்லாமே இங்க தான் இருக்கும்.


1. என்சைம்கள் -

மேட்ரிக்ஸ்ல மட்டும் சுமாரா 100 என்சைகள் இருக்கும். ATP உருவாக தேவையான அனைத்து என்சைகள் இங்க தான் இருக்கும். 

2. ரைபோசோம்-  மைட்டோகாண்ட்ரியா ஆரம்பத்தில் ஒரு செல்லா இருந்தது இல்லையா ?? அதனால ஒரு தனி செல்லுல இருக்கும் எல்லா செல் நுண்ணுறுப்புகளும், ரொம்பநாள் அது மைட்டோகாண்ட்ரியாவா மாறின அப்புறமும் இருந்தது. அப்புறமா முக்கால்வாசி (முக்கியமா புரோட்டீன் தயாரிக்க தேவையான சிஸ்டம் தவிர மீதி மறைஞ்சிடுச்சி. புரோட்டீன் தயாரிக்க தேவையான முக்கியமான புரோட்டீன் ரைபோசோம். இதுல வேற வேற வகை இருக்கு. மைட்டோகாண்ட்ரியாவுல இருக்கும் ரைபோசோம் வகை 70S வகை. இது வழக்கமா பேக்டீரியாவுல இருக்கும் ரைபோசோம் வகை.  ஒரு பேக்டீரியாதான் மைட்டோகாண்ட்ரியாவா மாறினது அப்படிங்கறதுக்கு  இது ஒரு முக்கியமான தடயம்.

3. மைட்டோகாண்ட்ரியா DNA  மத்த எந்த ஒரு செல் நுண்ணுருப்புக்கும் இல்லாத ஒரு பண்பு, இதுக்குன்னு தனியா மரபு அணுக்கள் அதாவது DNA இருக்கு. வழக்கமா ஒரு செல்லுல DNA அப்படின்னா அது நியூக்ளியஸ்ல மட்டும் தான் இருக்கும். அதுல இருந்து தான் மொத்த செல்லுக்கே தேவையான புரோட்டீன்கள் தயாராகும். ஆனா மைட்டோகாண்ட்ரியா மட்டும் அதுக்குன்னு தனியா DNA வெச்சிக்கிட்டு அதுக்கு தேவையான புரோட்டீன்களில் ஒரு சில தவிர மீதி எல்லாத்தையும் தானே தயார் பண்ணிக்கும்.

தாவர செல்களில் சக்தி தயாரிக்கும் வேலையை குளோரோபிளாஸ்ட் தான் அதிகமா செய்யிதுன்னாலும், இதுலயும் மைட்டோகாண்ட்ரியா இருக்கு. அது எதுக்குன்னா குளோரோபிளாஸ்ட் சக்தி தயாரிக்கணும் அப்படின்னா சூரிய ஒளியினோட உதவி வேணும். அதனால இராத்திரியில சக்தி தயாரிக்க வேண்டியிருக்கிற காரணத்தால மைட்டோகாண்ட்ரியாவையும் தாவர செல்கள் தனக்குள்ள வெச்சிருக்கு. மைட்டோகாண்ட்ரியாவை பத்தி சொல்ல இவ்ளோதான் இங்க. அடுத்த பதிவுல சிந்திப்போம்.

7 comments:

  1. விளக்கங்களுக்கு நன்றி... முந்தைய பகிர்வுகளை வாசிக்கணும்...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா படிங்க தனபாலன் சார். மறக்காம கமெண்ட்டும் எழுதுங்க.
      அப்புறம் உங்க நண்பர்களுக்கு இந்த வலைப்பூவை பரிந்துரை செய்யிங்க.
      நன்றி.

      Delete
  2. சில சந்தேகங்கள்
    1.மைட்டோகாண்ட்ரியா gram positive உயிரியா இல்லை கிராம் negative உயிரியா?
    2.நமது இரத்த அணுவுக்குள் மைட்டோகாண்ட்ரியா இல்லை . அங்கே எப்படி atp பெறப்படுகிறது ?
    3.// சாதாரண செல் சையனோபேக்டீரியாவோட (CHLOROPLAST - குளோரோபிளாஸ்ட்) கூட்டணி போட்டது தாவர செல்லாவும், சாதாரண செல் புரோட்டியோபேக்டீரியாவோட (MITOCHONDRIA - மைட்டோகாண்ட்ரியா) கூட்டணி போட்டது விலங்கு செல்லாவும் உருவெடுக்க//
    தாவர செல்லிலும் மைட்டோகாண்ட்ரியா உள்ளது ,எனவே விலங்கு செல்லில் இருந்து வந்தது தான் தாவர செல் , எனும் கூற்று சரியா?

    இந்த கேள்விகள் தங்களை குழப்ப அல்ல , பதிவினை மேம்படுத்த மட்டுமே :-)

    ReplyDelete
    Replies
    1. டாக்டர் சார்,



      கேள்விகளும், சந்தேகங்களும் உயிர்நுட்பத்தில் சந்தோசமாக வரவேற்கப்படும். நாம் பேசப்போவது அரசியலோ அல்லது சினிமாவோ அல்ல, அறிவியலே. இங்கே கேள்விகளும் சந்தேகங்களுமே புதிய சிந்தனைகளை மேம்படுத்தும். எனவே நான் தவறாக எண்ணுவேனோ என்ற தயக்கம் வேண்டாம்.

      புரோட்டியோ பேக்டீரியாவும், சயனோ பேக்டீரியாவும் கிராம் நெகடிவ் வகை செல் சுவர் அமைப்பை கொண்டவை. தாவர செல்லில் குளோரோபிளாஸ்ட்டோடு மைட்டோகாண்ட்ரியா இருந்தாலும், விலங்கு செல்லில் இருந்து தாவர செல் வந்தது எனவோ, விலங்கு செல் குளோரோபிளாஸ்ட்டை இழந்து விலங்கு செல் வந்ததாகவோ எங்கும் நிரூபிக்கப்படவில்லை. இதுவரை உள்ள தடயங்கள் படி இரண்டும் தனித்தனியாக பரிணாமம் அடைந்தவையாகவே அறியப்பட்டுள்ளது.



      என் வரை நான் படித்தத்தில் இருந்து புரிந்து கொண்டவை - செல்கள் பரிணாமம் அடைந்தபோது, சில செல்கள் உணவுக்காக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகர்ந்து சுறுசுறுப்பாக உணவு தேடிய செல்கள் அல்லது அப்படி தானே உணவை தேடிக்கொள்ள வாய்ப்பு கிடைத்தவை விலங்கு செல்களாகவும் (இவைகள் தானே தேடி கொள்ள வல்லவையாக இருந்த காரணத்தால் சூரிய ஒளியை பயன்படுத்தவேண்டிய அவசியமில்லாமல் போய், குளோரோபிளாஸ்ட் தேவையில்லாமல் போய்விட்டதாக எண்ணுகிறேன்), இருந்த இடத்தில் உணவு தேடி வாழ்ந்தவை அல்லது அப்படி தானே தேடிக்கொள்ள வாய்ப்பு கிடைக்காதவை, பின்னாளில் உணவு பற்றாக்குறையால் தானே உணவு தயாரிக்க வேண்டிய அவசியத்திற்கு உள்ளாகி அதற்காக குளோரோபிளாஸ்ட்டும், இரவில் சக்தியை தயாரிக்க மைட்டோகாண்ட்ரியாவும் கொண்டு தாவர செல்லாக பரிணாமம் அடைந்திருக்கலாம். இரண்டுக்கும் ஆரம்ப புள்ளி ஒன்றாக இருந்திருக்கலாம். ஆனால், ஒன்றில் இருந்து இன்னொன்று வந்திருக்க வாய்ப்புகள் மிக மிக குறைவே.

      Delete
  3. bro, just watch this, amazing

    http://www.youtube.com/watch?v=i8c5JcnFaJ0

    ReplyDelete
    Replies
    1. Good one. I will try to use in my future post.
      Thank you doctor sir...!!!!!!!!!!!

      Delete
  4. Thanks bro. RBC s get Atp by anaerobic glycolysis.

    ReplyDelete