Monday, July 30, 2012

செல் அமைப்பு : செல் சுவர் அமைப்பு - CELL WALL STRUCTURE (ஆர்க்கியே பேக்டீரியா - ARCHAEA BACTERIA) - 4

மக்களே...!!!

போன வாரம் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசமான வாரம். நம்ம வலைப்பூ வெற்றிகரமா முதல் படி தாண்டி ஓரளவுக்கு நெறைய பேரை போய் சேர்ந்திருக்கு. அதை நண்பர்களுக்கு இனிப்பு குடுத்து கொண்டாடினேன். அதுக்கு நீங்க உங்க ஆதரவு தான் முக்கியமான காரணம். அப்புறம் இது இன்னமும் நெறைய பேரை போய் சேரனும் அப்படின்னா அதுக்கும் நீங்க தான் உதவி செய்யணும். உங்களுக்கு தெரிஞ்ச, உயிரியல்ல ஆர்வம் இருக்கறவங்களுக்கு நம்ம வலைப்பூவை அறிமுகப்படுத்தி வைங்க. நம்ம FACE BOOK கணக்குல சேருங்க. உங்க நண்பர்கள் கூட பகிர்ந்துக்கோங்க. நிறைய புது நண்பர்கள் வந்திருக்கறதால நானும் போன பதிவுகளோட லிங்க் அங்கங்க குடுத்தே எழுதறேன். 

ஸோ, கொண்டாட்டம் எல்லாம் முடிஞ்சி இப்போ மறுபடியும் நம்ம வேலைக்கு திரும்ப வேண்டிய நேரம் இது. செல் அமைப்பு பத்தின விரிவான பார்வையில செல் சுவர் பத்தி பார்த்திட்டு இருக்கோம். செல் சுவர் பத்தின விவரங்கள்ல ஆர்க்கியே பேக்டீரியாவோட செல் சுவர் மட்டும் தான் இன்னும் பாக்கி. போன பதிவுலயே முடிஞ்சிருக்க வேண்டியது. ஆனா, செல் சுவர் பத்தி பேசறதுக்கு முன்னாடி ஆர்க்கியே பேக்டீரியா பத்தி ஒரு அறிமுகம் இருந்தா நல்லா இருக்கும்ன்னு தோணினதால அதை பத்தி முதல்ல எழுதினேன்.

ஸோ, இது வரைக்கும் பார்த்ததை கூட்டி கழிச்சி பார்த்தா, செல் சுவர் அப்படிங்கறது பொதுவா இருந்தாலும், அதனோட வேதி கட்டமைப்பு இனத்துக்கு இனம் மாறுபடுது. பேக்டீரியாவோட செல் சுவர் அமைப்பு பூஞ்சைகள் செல் சுவர் அமைப்பு போல இருக்காது. தாவர செல்லோட செல் சுவர் வேற மாதிரி இருக்கும். அதை தான் முந்தைய பதிவுகள்ல பார்த்தோம். ஆர்க்கியே பேக்டீரியாவுலயும் செல் சுவர் இருக்கு. ஆனா, இந்த செல் சுவரோட வேதி அமைப்பு எப்படி இருக்கும் அப்படிங்கறது தான் நம்மளோட இன்னைக்கி கேள்வி.

எல்லாரும் எதிர்பார்த்த மாதிரியே, ஆர்க்கியே பேக்டீரியாவோட செல் சுவர் மத்த செல் சுவரை விட வேற மாதிரி தான் இருந்தது. வேதி அமைப்பு பத்தி நுணுக்கமா பார்க்கறதுக்கு முன்னாடி சொல்ல வேண்டிய ஒரு முக்கியமான விஷயம், ஆர்க்கியே பேக்டீரியாவோட செல் சுவருக்குன்னு ஒரு குறிப்பிட்ட தெளிவான கட்டமைப்பு இல்லை. ஆர்க்கியே பேக்டீரியாவுக்குள்ளயே வேற வேற மாதிரி செல் சுவர் அமைப்பு இருக்கு. ஆனா, செல் சுவர் இருக்கிற மத்த இனங்கள் பேக்டீரியா, தாவரம், பூஞ்சைகள் இதை பார்த்திங்கன்னா, இதுக்குள்ளயும் நெறைய உட்பிரிவுகள் இருந்தாலும் அந்த இனத்துக்குள்ள செல் சுவர் கட்டமைப்பு ஒரே மாதிரி தான் இருக்கும்.

இதெல்லாம் ஏன்னு யோசிச்சி பார்த்தப்போ எனக்கு தோணினது ஒன்னே ஒன்னு தான். பூமியில அப்போதைக்கு இருந்த வேதி பொருட்களை வெச்சி முதன்முதல்ல உருவான உயிர் ஆர்க்கியே பேக்டீரியா தான். அப்போ ஒரு முறையான செல், அதுக்கு என்ன எல்லாம் வேணும்ன்னு தெரியாது. இருக்கிற இடத்துக்கு ஏத்த மாதிரி, தேவைக்கு ஏத்த மாதிரி தன்னோட கட்டமைப்பை உருவாக்கிச்சி. அப்புறமா தான் பரிணாம வளர்ச்சி அடைஞ்சி ஒவ்வொரு செல்லும் முறையான கட்டமைப்போட உருவாச்சி.  அதனால தான் இந்த வகை செல்கள் மட்டும் எதுகூடவும் சேராம ஒவ்வொன்னும் ஒரு மாதிரி இருக்கு. 

ஓகே... மக்களே இப்போ நம்ம மேட்டருக்கு வருவோம். ஆர்க்கியே பேக்டீரியாவோட செல் சுவருக்குன்னு தனியா குறிப்பிட்ட கட்டமைப்பு இல்லை அப்படிங்கறதால அதுக்குள்ளே இருக்கிற பொதுவான அம்சங்கள், மத்த செல் சுவருக்கும், இதுக்கும் இருக்கிற வேறுபாடுகள் அப்படின்னு தான் இங்க விளக்க போறேன். ஓகே...? பதிவுக்கு போகலாம்.

ஆர்க்கியே பேக்டீரியா - செல் சுவர் - ARCHAEA BACTERIA - CELL WALL

ஆர்க்கியே பேக்டீரியாவோட செல் சுவர் கிலைக்கோ புரோட்டீன் (GLYCOPROTEINS) அப்படிங்கற வேதி பொருளால ஆனது. கிலைக்கோ புரோட்டீன் அப்படின்னா என்ன அப்படின்னு அதனோட பேரை பார்த்தே நமக்கு இந்நேரம் புரிஞ்சிருக்கனும். இல்லைன்னாலும் பரவாயில்லை. ஒரு சின்ன அறிமுகம் குடுக்கறேன். கிலைக்கோ  புரோட்டீன்கள் அப்படிங்கறது புரோட்டீனோட ஒருவகை.  ஒரு வேலை செய்யும் திறனுடைய புரோட்டீன் அப்படிங்கறது தனியா சுத்தமான புரோட்டீனாகவும் இருக்கலாம் அல்லது கார்போஹைட்ரேட் எனப்படும் சர்க்கரை அல்லது கொழுப்பு எனப்படும் லிப்பிட் இப்படி அல்லது இன்னொரு புரோட்டீன் இப்படி எதனோடவாவது கூட்டணி வெச்சும் இருக்கலாம். கூட்டணியை பொறுத்து வேற வேற வகைப்படுத்துவாங்க. இந்த கிலைக்கோ புரோட்டீன் கார்போஹைட்ரேட் அதாவது சர்க்கரை கூட கூட்டணி வெச்சிக்கிட்ட புரோட்டீனோட வகை.

கிலைக்கோ அப்படிங்கறது கார்போஹைட்ரேட் சம்பந்தப்பட்டது.  புரோட்டீன் அப்படின்னா என்னன்னு நமக்கு ஏற்கனவே தெரியும். அப்போ ஒரு வரியில சொல்லனும்ன்னா, சிறு சிறு கார்போஹைட்ரேட் செயின்கள் அதிகப்படியா இணைக்கப்பட்ட நீளமான புரோட்டீன்கள் தான் இவை.  பொதுவா, செல்களோட செல் சவ்வு மேற்பரப்புல இருக்கிற புரோட்டீன்கள் இந்த வகை புரோட்டீன்கள் தான். இதை பத்தி வேற ஒரு தனி பதிவுல விளக்கமா பார்க்கலாம்.

ஓகே... கிலைக்கோ-புரோட்டீன்கள் சரி... இதனோட வேதி கட்டமைப்பு எப்படி இருக்கும்...? இதனோட குண நலன்கள் என்ன...? அது தான் இன்னைக்கி நாம பார்க்க போறோம்.

செல் சவ்வு மேற்பரப்பு புரோட்டீன்கள் எல்லாமே கிலைக்கோ புரோட்டீன்கள் வகையை சேர்ந்தது. அதை செல் சவ்வு புரோட்டீன்கள் (MEMBRANE PROTEINS) அப்படின்னு சொல்வாங்க. ஏன்னா செல்லோட சவ்வுக்கு வெளிப்புறமா மேற்பரப்புல தான் இது அதிகமா இருக்கும்.  




இதனோட கட்டமைப்பு கொஞ்சம் சிக்கலானது. கிலைக்கோ புரோட்டீன்கள் செல் மேற்பரப்புல இருந்தாலும், அது செல் சவ்வு வழியா ஊடுருவி செல்லுக்குள்ள வரைக்கும் போய், சைட்டோபிளாசத்துக்குள்ள நீட்டிட்டு இருக்கும். கிலைக்கோ புரோட்டீன்களோட முக்கியமான வேலை என்னன்னா செல்லுக்கு வெளிய இருந்து வர செய்திகளை கிரகிச்சி அதை செல்லுக்குள்ள அனுப்பறதும், செல்லுக்குள்ள இருந்து செய்திகளை கடத்தி வெளிய அனுப்பறதும் தான். அதனால தான் அது செல் மேற்பரப்புல அமைஞ்சிருக்கு. செல்லுக்குள்ள வரைக்கும் ஊடுருவி இருக்கும். 

ஸோ,  இதனோட கட்டமைப்பு மூணு விதமா பிரிக்கலாம். செல்லுக்கு வெளிய நீட்டிட்டு இருக்கிற செல் மேற்பரப்பு பகுதி (EXTRACELLULAR FRAGMENT), செல் சவ்வுக்குள்ள ஊடுருவின பகுதி (TRANS MEMBRANE FRAGMENT), செல்லுக்குள்ள அதாவது சைட்டோபிளாசம் உள்ள நீட்டிட்டு இருக்கிற பகுதி (CYTOPLASMIC FRAGMENT). இதை தவிர செல்லுக்கு வெளிய நீட்டிட்டு இருக்கிற பகுதியோட இணைஞ்சிருக்கிற கார்போஹைட்ரேட் செயின்கள். (இந்த கார்போஹைட்ரெட் செயின்கள் எல்லா செல்கள்லயும் ஒரே மாதிரி இருக்காது. செல்லுக்கு செல், கிலைக்கோ புரோட்டீன்களே பல வகை இருக்கறதால, ஒவ்வொரு வகையிலயும் வேற வேற கார்போஹைட்ரேட் செயின்கள் இருக்கும். இதுல பொதுவா மேன்னோஸும், N - அசிட்டைல் குளுகோஸ் அமைனும் நெறைய செல்கள்ல பார்க்கலாம்) இவைதான் கிலைக்கோ புரோட்டீன்கள். 


 ஆனா மக்களே, மேல சொல்லியிருக்கிறது கிலைக்கோ புரோட்டீனோட பொதுவான அமைப்பு தான். ஒரு கிலைக்கோ புரோட்டீன் அப்படிங்கறது இப்படி தான் இருக்கும் அப்படின்னு தெரிஞ்சிக்கறதுக்காக. இதை அடிப்படையா வெச்சிக்கிட்டு ஆர்க்கியே பேக்டீரியாவோட செல் சுவர் அமைப்பை பார்க்கலாம், ஆனா அடுத்த பதிவுல. பதிவு ரொம்ப நீளமா போயிட்டதால நான் இன்னிக்கு இதோட நிறுத்திக்கறேன்.

இதை படிச்சதுக்கு அப்புறம், உங்க கிட்ட இருந்து கேள்விகளும் சந்தேகங்களும் வரவேற்கப்படுகிறது. அடுத்த பதிவுல சிந்திப்போம். 

NOTE: நம்ம FACE BOOK கணக்குல சேருங்க.