Wednesday, August 22, 2012

இணையத்தில அறிவியல் பாடம் - வீடியோ...!!!

மக்களே...!!!

இன்னைக்கு பதிவுல ஒரு சின்ன விசயத்தை உங்களோட பகிர்ந்துக்கலாம்ன்னு இருக்கேன்.  மத்திய அரசின் தொழில்நுட்ப துறை, சென்னை ஐஐடி மற்றும் பெங்களூருவில் உள்ள அகில இந்திய அறிவியல் கழகம் இணைந்து உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஒரு திட்டத்தை உருவாக்கி இருக்கு. அதன்படி ஐஐடி மற்றும் அகில இந்திய அறிவியல் கழகம் பேராசிரியர்கள் பாடம் நடத்த அதை அப்படியே வீடியோவில் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு இருக்காங்க. 

இதை யார் வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து சொந்தமாக வைத்துக் கொள்ளலாம்.  அதுவும் முற்றிலும் இலவசமாக. இதில் பல்வேறு பொறியியல், அறிவியல், மேலாண்மை என அனைத்து பாடங்களும் அடக்கம்.

இதை யு டியூப் பிலும் சென்னை ஐ ஐ டி  இணைய பக்கத்திலும் இருந்து இலவசமாக தரவிறக்கம் செய்யலாம். 


நான் உதாரணத்துக்கு ரெண்டு வீடியோக்களை இங்க சேர்த்திருக்கேன். முழு வீடியோக்களுக்கு இங்க போய் பாருங்க.
யூகேரியோட் செல்கள்ள ஒரு ஜீன் எப்படி புரோட்டீனை உருவாக்கும் அப்படிங்கற லெக்சர் இந்த வீடியோல கெடைக்கும்.  
ஒவ்வொரு லிங்க்லயும் கிட்டத்தட்ட 30-40 வீடியோக்கள் இருக்கு. எல்லாத்தையும் உபயோகபடுத்திகோங்க.  இங்க பாடம் எடுக்கும் ஒவ்வொருத்தரும் பெரிய பேராசிரியர்கள். இந்தியாவின் மிகப்பெரிய கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்கள். இவங்க பாடம் எடுத்து கேக்கறதுக்கெல்லாம் குடுத்து வெச்சிருக்கணும். அதனால கண்டிப்பா மிஸ் பண்ணாம பாருங்க. 
அடுத்த பதிவுல சிந்திப்போம்...!!!

Wednesday, August 15, 2012

வரவேற்கிறோம்...!!!

மக்களே...!!!

நம்ம வலைப்பூவுக்கு புது நண்பர்கள் வரவு மறுபடியும். நம்ம புது நண்பர்கள் சாந்தி, சுப்பிரமணியன் மற்றும் கிருஷ்ணசுவாமி  அவர்களை உயிர்நுட்பம் சார்பாகவும், நமது வலைப்பூ நண்பர்கள் சார்பாகவும் வரவேற்கிறோம்.

அதோட நண்பர்கள் எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள். நமது வலைப்பூவுக்காக FACE BOOK கணக்கு செயல்படறது உங்க எல்லாருக்கும் தெரியும். முடிஞ்சவரைக்கும் எல்லாரும் அதுலயும் சேருங்க. இதன் மூலமா நண்பர்கள் எல்லாரும் ஒரே இடத்துல நம்ம கருத்துகளை பகிர்ந்துக்க முடியும். 
 

Saturday, August 11, 2012

வீடியோ: பூமி - ஒரு முன் வரலாறு...!!!

மக்களே...!!!

சுவாரஸ்யமான வீடியோக்கள் கிடைக்கும் போது அதை நம்ம வலைப்பூவுல போடப்போறேன்னு சொல்லியிருந்தேன் இல்லையா...? அந்த வகையில எனக்கு கெடைச்ச ஒரு வீடியோவை இங்க இணைக்கிறேன்.

சுமார் 5 பில்லியன் (500 X 10 ஆண்டுகள் ) ஆண்டுகள் முன்னாடி சூரியன்ல இருந்து உடைஞ்சி, பிரிஞ்சி வந்து ஒரு சாதாரண விண்கல்லா இருந்த ஒன்னு எப்படி பூமியா உருவாகி இருக்கும்...? அதுக்கு அப்புறம் உயிர் அப்படின்னு ஒன்னு எப்படி இந்த பூமியில உருவாகி இருக்கும்ன்னு ரொம்ப தெளிவா சொல்லியிருக்காங்க. ஆனா இந்த வீடியோ ஆங்கிலத்துல இருக்கறது தான் ஒரு வருத்தமான செய்தி. உருவான உயிரினங்களோட பரிணாம வளர்ச்சி பத்தி அவ்வளவா தெளிவா சொல்லபடல. இருந்தாலும் நம்ம பூமியோட ஆரம்ப கட்ட வரலாற்றை தெரிஞ்சிக்க இது ஒரு நல்ல வீடியோ. பார்த்து என்ஜாய் பண்ணுங்க. அப்புறம் மக்களே நம்ம வலைப்பூவை படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க. அது என்னோட வேலையை இன்னும் நல்லா செய்ய ஊக்கமளிக்கும். அடுத்த பதிவுல சிந்திப்போம்...!!!

D - வகை மற்றும் L - வகை அமினோ அமிலங்கள்- அறிமுகம்...!!!

மக்களே...!!!

இன்னைக்கு பதிவு ஆர்க்கியே பேக்டீரியா செல் சுவர் அமைப்பு பத்தின பதிவுக்கு தொடர்ச்சி. போன பதிவுல D வகை L வகை அமினோ அமிலங்களை பத்தி சொல்லியிருந்தேன். அதுக்கான விளக்கம் தான்   இன்னைக்கு பதிவு. பதிவுக்கு போகலாமா? 

D - வகை மற்றும் L - வகை அமினோ அமிலங்கள்- D- AND L- FORM AMINO ACIDS - அறிமுகம்

நம்ம உடல்ல இருக்கிற, அதாவது செல்லுல இருக்கிற எல்லா புரோட்டீன்களும் அமினோ அமிலங்களால் ஆனது. அமினோ அமிலம் அப்படிங்கறது ஒரு வேதி பொருள் இன்னும் சொல்லப்போனா  கரிம வேதி பொருள். இந்த அமினோ அமிலங்கள் ஒண்ணுகொண்ணு இணைஞ்சி நீளமா செயின் மாதிரி உருவாகி, அதுக்குன்னு கொடுக்கப்பட்ட வேலையை செய்ததுன்ன்னா அது தான் புரோட்டீன். (இதுல புரோட்டீன் அப்படிங்கறது ஆங்கில சொல். புரதம் அப்படிங்கறது புரோட்டீன் அப்படிங்கற ஆங்கில சொல்லுக்கு இணையான, சரியான தமிழ் சொல். ஆனா பேசவும், படிக்கவும், புரிஞ்சிக்கவும் வசதியா இருக்குமேன்னு புரோட்டீன் அப்படின்னே சொல்லுவோம்)

இந்த அமினோ அமிலம் அப்படிங்கறது ஒரு கார்பன் மூலக்கூறுல (C) ஒரு ஹைட்ரஜன் (-H), ஒரு அமில மூலக்கூறு (-COOH), ஒரு கார மூலக்கூறு அல்லது அமினோ மூலக்கூறு (-NH2 )அது இல்லாம ஒரு வேலை செய்யும் திறனுள்ள, ஒரு அடையாள, வேதி மூலக்கூறு (மொத்தம் உள்ள இருபது அமினோ அமிலத்துக்கும் தனி தனியா இந்த அடையாள மூலக்கூறு இருக்கு. அதனால, இதை பொதுவா R குரூப் அப்படின்னு சொல்லுவோம்) இணைஞ்ச வேதி பொருள். R குரூப் தவிர மத்த மூணு மூலக்கூறுகளும் எல்லா அமினோ அமிலங்கள்லயும் பொதுவா இருக்கும். நம்ம செல்லுல இருக்கிற மொத்த புரோட்டீன்களும் இருபது விதமான அமினோ அமிலங்கள் கலந்து உருவானது. இதையெல்லாம் நம்ம அமினோ அமிலங்கள் பதிவுல முன்னாடியே பார்த்திருக்கறோம். 

இப்போ, நம்ம விசயத்துக்கு வருவோம். அமினோ அமிலத்துல மொத்தம் இருக்கிற நாலு விதமான மூலக்கூறுகள்ல  கார மூலக்கூறு அல்லது அமினோ மூலக்கூறு தான் இப்போ நாம கவனிக்க வேண்டிய ஒன்னு.  ஒரு அமினோ அமிலத்துல உள்ள கார அல்லது அமினோ மூலக்கூறு வலது பக்கமா இருந்தா அது D - வகை அமினோ அமிலம். அதுவே கார அல்லது அமினோ மூலக்கூறு இடது பக்கமா இருந்தா அது L - வகை அமினோ அமிலம். ஆனா, அமினோ அமிலத்துல இந்த கார மூலக்கூறு வலது பக்கமா இருக்கா இடது பக்கமா இருக்கான்னு எப்படி தெரிஞ்சிக்கறது? ஒரே ஒரு அமினோ அமில மூலக்கூறை தனியா பிரிச்செடுத்து அதுல இருக்கற அமினோ மூலக்கூறு எந்த பக்கம் இருக்குன்னு பார்க்கிற அளவுக்கு நாம இன்னும் வளரல.

இதை எப்படி பார்க்கறதுன்னா, ஒரு தள முனைவுற்ற ஒளி கற்றையை (POLARIZED LIGHT) ஒரு அமினோ அமிலத்தை தண்ணீர்ல கரைச்சி, அந்த கரைசல் வழியா செலுத்தினா, கரைசலுக்குள்ல போகும் இந்த ஒளி கற்றையோட மின் காந்த அலைகள் இந்த அமினோ மூலக்கூறு இருக்கிற பக்கத்தை பொறுத்து, மறு பக்கம் வெளிய வரும்போது வலது அல்லது இடது இப்படி ஏதாவது ஒரு பக்கம் திரும்பி அதிவுறும். அதை வெச்சி சொல்லிடலாம்.


அதென்ன POLARIZED LIGHT - தள முனைவுற்ற ஒளி...? இன்னொரு கேள்வி வருது இல்லையா...? ஒரு சாதாரண ஒளி கற்றை (சாதாரண டார்ச் லைட் வெளிச்சம் தான்) எடுத்து அதை குறுக்கு வாட்டுல வெட்டி பார்த்தா, அதனோட மின்காந்த அலைகள் (PHOTONS) ஒளி பாயும் நேர்கோட்டுக்கு செங்குத்தா, அதே சமயம் எல்லா திசையிலயும், அதிர்வுருவதை பார்க்கலாம். அதுவே தள முனைவுற்ற ஒளி (POLARIZED LIGHT) அப்படின்னா அதனோட மின்காந்த அலைகள் (PHOTONS) ஒளி பாயும் நேர்கோட்டுக்கு செங்குத்தா, ஆனா அதேசமயம், ஏதாவது ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி (இங்க மேலும் கீழும் நோக்கி) அதிர்வுறும். ஒரு சாதாரண ஒளியை தள முனைவுற்ற ஒளியா மாத்தக்கூடிய அளவுக்கு சில ஊடகங்கள் நம்ம கிட்ட இருக்கு. உதாரணம், நிக்கல் முப்பட்டகம் - NICKEL PRISM . ஒரு சாதாரண ஒளியை இந்த முப்பட்டகத்து வழியா செலுத்தினா, மறுபக்கம் வரும்போது தள முனைவுற்ற ஒளியா மாறி வரும். இப்படி வெளிய வரும் ஒளி பாயும் வழியில அமினோ அமில கரைசலை வெச்சி, கரைசலோட மறுபக்கம் வெளிய வரும் ஒளியோட மின் காந்த அலைகளை சோதிச்சி பார்த்தா, அது அமினோ குரூப் இருக்கும் பக்கத்தை பொறுத்து வலது பக்கமோ அல்லது இடது பக்கமோதிரும்பி அதிவுருவத பார்க்கலாம். அதை வெச்சி அந்த அமினோ அமிலம் L - வகையா அல்லது D - வகையா அப்படின்னு தெரிஞ்சிக்கலாம்.



அது ஓரளவுக்கு புரிஞ்சிருக்கும்ன்னு நெனக்கிறேன். மறுபடியும் படிச்சி பாருங்க. சந்தேகத்துக்கு விளக்க படங்களை எடுத்து பாருங்க. பதிவு நீளமா போயிட்டதால, ஆர்க்கியே பேக்டீரியாவோட செல் சுவரை பத்தின மற்றொரு புது தகவலோட மறுபடியும் சந்திக்கறேன்.