Saturday, March 30, 2013

சில சுவாரஸ்யங்கள்: ஒரு அரியக் கண்டுபிடிப்பு

மக்களே...!!!  

ஒரு சந்தோஷமான செய்தியோட இன்னைக்கு பதிவை ஆரம்பிக்கிறதா இருக்கேன். அது என்னன்னா இந்த பதிவு நம்ம வலைப்பூவின் 100 வது பதிவு. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. நான் எழுத ஆரம்பிக்கும்போது இவ்வளவு நாள் நான் தொடர்ந்து எழுதப்போறேன், என்னால எழுத முடியும் அப்படிங்கற நம்பிக்கை எனக்கே இல்லை. ஏன்னா வலைப்பூ ஆரம்பிச்சி முழுசா ரெண்டு பதிவு கூட எழுதாம, அதை டீல்ல விட்ட அனுபவம் எனக்கு ஏற்கனவே இருக்கு. ஆனா, எப்படியோ தட்டி தடுமாறி நூறு பதிவுகளை தொட்டுட்டேன். இது எல்லாத்துக்கும் உங்க ஆதரவு மட்டுமே காரணம். இது நூறாவது பதிவு அப்படிங்கறதால ஸ்பெஷலா ஏதாவது எழுதலாம்ன்னு இருந்தேன். அப்போ கெடைச்சதுதான் இந்த விஷயம். நம்ம நூறாவது பதிவும் சில சுவாரஸ்யங்கள் பகுதி தான். வாங்க இன்னைக்கு பதிவுக்கு போகலாம்.

இதுவரைக்கும் இந்த உலகத்துல கண்டுபிடிக்கப்பட்ட மேம்படுத்தப்படாத ஒரு செல் உயிரினங்கள்ள இருந்து, மேம்படுத்தப்பட்ட தாவரங்கள், மனிதன் வரைக்கும், எல்லாத்தையும் முறையா வகைப்படுத்தி பிரிவுகள், உட்பிரிவுகள் எல்லாம் பண்ணி பட்டியல் போட்டு வெச்சிருக்காங்க.  இன்னும் புதுசு புதுசா உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படும்போது ஏற்கனவே இருக்கிற பட்டியலோட ஒப்பிட்டு அதை சரியா வகைப்படுத்துவாங்க. ஒருவேளை ஏற்கனவே இருக்கிற பட்டியலோட ஒத்துப்போகலன்னா புதுசா ஒரு பிரிவை உண்டாக்கி அதுல சேர்த்து வெப்பாங்க. எந்த பிரிவுலயும் சேராத உயிரினங்களை வகைப்படுத்தடாதவை அப்படிங்கற ஒரு பிரிவை உண்டாக்கி அதுல சேர்த்து வெச்சிருக்காங்க. இது பொதுவா உயிரினங்களை வகைப்படுத்தி வெச்சிருக்கிற முறை.

சில சமயம், இதுல தவறுகளும் நடந்திருக்கு. ஒரு உயிரினத்தை வகைப்படுத்துபோது, அதனுடைய புறத்தோற்றம், உடல் உறுப்புகள், ஒரு செல் உயிரினமா இருந்தா செல் நுண்ணுறுப்புகள், உணவு, அதை சாப்பிடும் முறை, ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு எப்படி நகரும், அதனோட வாழிடம் இன்னும் என்னென்னவோ கணக்குல எடுத்து பரிசோதனைகள் எல்லாம் செய்து, அப்புறம் தான் அந்த உயிரினம் என்ன வகைப்பாட்டுல வரும்ன்னு முடிவு பண்ணுவாங்க. இதுல ஏதாவது தப்பு நடந்திட்டா, அது தப்பான பிரிவுக்கு போய் சேரும். அப்புறம் வேற யாராவது அதை கண்டுபுடிச்சி சரியான பிரிவுல மாத்தி வெப்பாங்க. இதுவெல்லாம் சொல்றதுக்கு சுலபமா இருந்தாலும் செய்யிறது அவ்வளவு சுலபம் இல்லை. ஒரு விஞ்ஞானி தான் வெக்கிற ஒவ்வொரு வாதத்துக்கும் சரியான ஆதாரங்களை காட்டனும். அந்த துறையில ஆராய்ச்சி செய்யும் எல்லாரையும் திருப்திப்படுத்தற  மாதிரியான ஆதாரங்கள் நம்மக்கிட்ட இருந்தா மட்டுமே நம்ம ஆராய்ச்சி முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்படும். இல்லைன்னா சுலபமா ஒதுக்கிடுவாங்க. அதுக்காக அதை தவறுன்னும் சொல்ல முடியாது. ஏன்னா, உயிரியல் துறையில் நடக்கிற எல்லா விதமான ஆராய்ச்சிகளும் எதோ ஒரு வகையில உயிரோட சம்பந்தப்பட்டது. எதோ ஒரு நோய்க்கு மருந்து, இல்லைன்னா புது சிகிச்சை இப்படி. மறுக்கப்படும் ஆதாரங்கள் ஒரு வேளை சரியாவே இருந்திட்டாலும் அதனால தவறு நேர வாய்ப்பில்லை. ஆனா, தவறான தகவல் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அதனால விளைவது உயிர் பலி  இல்லையா ...?????

ஓகே... நம்ம விசயத்துக்கு வருவோம். NANO-EUKARYOTES  (OR) PICO-EUKARYOTES - இது உயிரினங்களோட வகைப்பாடுல இருக்கிற, 2-10 மைக்ரான் அளவுள்ள (1 மைக்ரான் - 1 மீட்டர்ல பத்து லட்சத்துல ஒரு பங்கு)  கடல் வாழ் ஒரு செல் உயிரின பிரிவு (SINGLE  CELL ORGANISMS). கடல் தண்ணியோட மேற்பரப்புல வாழும் ஒரு செல் உயிரினங்கள் (PROTISTS). இந்த பிரிவு இருக்கே தவிர, முறையா, அதிகாரப்பூர்வமா உயிரினங்களோட வகைப்பாடுல இன்னும் சேர்க்கப்படல. இப்படி ஒரு பிரிவு உண்டாக்கிட்டாங்களே தவிர, உயிரினங்களோட வகைப்பாடுல மற்றப் பிரிவுகளோட, ஒரு பிரிவா சேர்க்கப்படற அளவுக்கு தேவையான தகவல்கள், ஆதாரங்கள் இன்னும் கிடைக்கல. சில உயிரினங்கள் இருக்குன்னு சில பரிசோதனைகளின் முடிவுகள் அடிப்படையில மட்டுமே (MOLECULAR PHYLOGENETIC ANALYSIS), அதாவது அந்த உயிரினங்களை நேரடியா கண்ணால பார்க்காமலேயே, அறிவிச்சிருக்காங்களே தவிர அந்த உயிரினங்களை தனியா பிரிச்செடுத்து, பரிசோதனைக்கூடத்துல வளர்த்து, யாரும் இதை மற்றவர்களுக்கு காட்ட முடியல.

கடல் தண்ணிய    2-10 மைக்ரான் அளவுள்ள உயிரினங்களை தனியா பிரிக்கும் அளவுள்ள வடிக்கட்டியில (MEMBRANE FILTERS) வடிக்கட்டி,  அதுல கிடைக்கும் உயிரினங்களோட DNA வை பரிசோதிச்சப்போ, ஏற்கனவே தெரிஞ்ச, முறையா வகைப்படுத்தப்பட்ட உயிரினங்களோட DNA-வோடவும், மற்ற பிரிவுகள்ள இருக்கும் எந்த உயிரினங்களின்  DNA கூடவும் சேராத, ஒரு புது DNA வகை இருக்கறதையும் கண்டுபிடிச்சாங்க. இதை வெச்சி தான் இப்படி ஒரு பிரிவு இருக்குன்னு தெரிஞ்சி, இந்த பிரிவை உண்டாக்கினாங்க. ஆனா, மிகச்சிறிய அளவுள்ள  இந்த செல்களோட ஏகப்பட்ட மற்ற செல்களும் சேர்ந்து தான் வந்ததாலயும், அந்த செல்களுக்கு இடையே இந்த செல்களை கண்டுபிடிக்கறதுல இருந்த சிரமங்கள், இவை என்ன மாதிரியான சூழ்நிலையில வளரும், என்ன சாப்பிடும் இதெல்லாம் ஒண்ணுமே தெரியாததாலயும்  பரிசோதனைக்கூடத்துல வளர்க்க முடியாத நிலை. அதனால இந்த பிரிவு அப்படியே இருந்தது.

இந்த பிரிவுல இருந்த ஒரு உட்பிரிவு - சிறிய கடல்பாசிகள் - PICOPLANKTON. இந்த உட்பிரிவை சேர்ந்த இரண்டாம் நிலை ஒட்டுண்ணி (SECONDARY ENDOSYMBIONTS) வகை -  PICOBILIPHYTA. இந்த ஒட்டுண்ணி வகையிலயும் அதே கதைதான். யாரும் இந்த பிரிவுல இருந்த செல்களை இதுவரைக்கும் கண்ணால பார்த்தது இல்லை. இந்த பிரிவுல இருக்கிற செல்கள் தனக்கு தானே உணவு தயாரிக்கிற திறமை (AUTOTROPH) இருக்குன்னு சில பேரும், இல்லைன்னு (HETEROTROPHS) சில பேரும், (இந்த ரெண்டு பண்புகளையும் கொண்டதுன்னும் சொல்றவங்க இருக்காங்க), சூரிய ஒளியை பயன்படுத்தி சக்தி தயாரிக்க கூடியவை (PHOTOSYNTHETIC) அப்படின்னு சில பேரும், இல்லைன்னு சில பேரும், இவைகள் மிகச் சிறிய EUKARYOTES வகையை சேர்ந்தது அல்ல  அப்படின்னு சில பேரும் சொல்லிட்டு இருந்தாங்க. ஆனா, எதுக்குமே முறையான ஆதாரங்கள் கிடையாது.


இதுல என்ன சுவாரஸ்யம் அப்படின்னு பார்க்கறிங்களா...!!!! இனிமே தான் மேட்டரே. மேல சொன்னது எல்லாம் கொஞ்ச நாள் முன்னாடி இருந்த நிலைமை. இப்போ இந்த PICOBILIPHYTA அப்படிங்கற வகையே தப்புன்னும், தனக்கு தானே உணவு தயாரிக்கிறது - AUTOTROPHS  கிடையாதுன்னும், சூரிய ஒளியை பயன்படுத்தி உணவு தயாரிக்கிறது - PHOTOSYNTHETIC கிடையாதுன்னும், இந்த பிரிவை சேர்ந்த, ஒரு செல் உயிரினத்தை கண்டுபுடிச்சி, அதை தனியா வெற்றிகரமா பிரிச்செடுத்து, பரிசோதனைக்கூடத்துல வளர்த்து புகைப்படங்களோட முறையா நிரூபிச்சிருக்காங்க. அந்த செல்லோட பேரு Picomonas judraskeda - பிக்கோமோனஸ் யுட்ராஸ்கீடா. PICOBILIPHYTA அப்படிங்கற இந்த வகையோட பேரையே இந்த ஆதாரங்களோட அடிப்படையில PICOZOA அப்படின்னு புதுசா மாத்தியும் வெச்சிருக்காங்க. ஏன்னா, உலக அளவில் விஞ்ஞானிகள் வகுத்து வெச்சிருக்கிற வகைப்பாட்டு விதிமுறைகள்படி, தன்னிச்சையாக உணவு தயாரிக்கும் செல்களுக்கு (AUTOTROPHS) மட்டும் தான் பேருக்கு பின்னாடி - PHYTA அப்படின்னு வரும். தானே உணவு தயாரித்துக்கொள்ள இயலாத செல்களுக்கு -ZOA அப்படின்னுதான் வரும்.   


எலக்ட்ரான் மைக்ராஸ்கோப்ல பார்த்து இன்னும் நிறைய சோதனைகளை செய்து பார்த்ததுல, இந்த செல்களுடைய அமைப்பு, செல் நுண்ணுறுப்புகள் பத்தியெல்லாம் பல சுவாரஸ்யமான தகவல்கள் கெடைச்சிருக்கு. இந்த செல்லோட வெளிப்புற அமைப்பு, அது ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு இடம்பெயரும் முறை, உணவு பழக்கம் எல்லாமே இப்போ இருக்கிற செல்கள்ல இருந்து முழுமையா வேற மாதிரி இருக்கு. வழக்கமா மத்த ஒரு செல் வகை உயிரினங்கள் இன்னொரு ஒரு செல் உயிரினங்களை உணவாக சாப்பிடும். ஆனா, இவை கடல் தண்ணியோட மேற்பரப்புல மிதக்கும் கரிம வேதிப்பொருட்களையும், கடல் கூழ்மங்கள் - COLLOIDS மாதிரியான பொருட்களை சாப்பிடும். இந்த, உணவு பழக்கத்தின் காரணமா, இந்த உயிரினங்கள் கடலின் மேற்பரப்பில் உள்ள மாசுக்களை அகற்றும் பணியில் முக்கிய பங்காற்றும் எனவும் நம்பப்படுகிறது.




இதை செய்தது, என்னோட நண்பர் பேரு டாக்டர். ராம்குமார் சீனிவாசன், ஊரு மதுரை பக்கத்துல திருமங்கலம். இங்க நான் ரிசர்ச் பண்ணிட்டு இருக்கிற பல்கலைக்கழகத்துல தான் Ph. D முடிச்சிருக்கார். அவர் தன்னோட Ph. D- க்காக செய்திருக்கிற ரிசர்ச் தான் மேல சொன்னது. உயிரினங்களோட வகைப்பாட்டுல ஒரு புது உட்பிரிவையே உண்டாக்கியிருக்கார். அவர் என்னோட நண்பர் அப்படிங்கறது எனக்கு பெருமை. நம்ம தமிழ்நாட்டுக்காரர் அப்படிங்கறது நமக்கெல்லாம் பெருமை. இவர் செய்த ஆராய்ச்சி கட்டுரை உலக அளவில் வெளிவரும் PLOS ONE பத்திரிகையில் வெளியாகியுள்ளது

என்னதான் விஞ்ஞானிகள் உயிரினங்களோட பரிணாம வளர்ச்சி பத்தின ஆராய்ச்சியை முழுமூச்சா செய்தாலும், அத்தனை தகவல்களும் நமக்கு இன்னும் கெடைக்கல. பரிணாம வளர்ச்சியில உருவான எத்தனையோ உயிரினங்கள் இன்னும் நம்மால அறியப்படாமலே இருக்கு. இந்த செல் கூட அப்படிப்பட்ட ஒண்ணுதான்.   இதுமாதிரியான கண்டுபிடிப்புகள் பரிணாம வளர்ச்சியில் விட்டுப்போன தகவல்களை தெரிஞ்சிக்க ரொம்பவே உதவியா இருக்கும். ஸோ, மக்களே சில சுவாரஸ்யங்கள் பகுதியில இந்த சுவாரஸ்யமும் உங்களுக்கு பிடிச்சிருக்கும்ன்னு நெனக்கிறேன். என்ஜாய் பண்ணுங்க. அடுத்த பதிவுல சிந்திப்போம்.

6 comments:

  1. விளக்கங்கள் சுவாரஸ்யமாகத்தான் இருந்தன... நன்றி...

    100-க்கும், மென்மேலும் சிறக்கவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார்.
      இருந்தாலும் நீங்க அநியாயத்துக்கு வேகமா இருக்கீங்க, பின்னூடம் போடறதுல...!!!!
      ரொம்ப நன்றி.

      Delete
  2. Replies
    1. Thank you doctor sir.
      I will conway your wishes to him.

      Delete
  3. கற்றார்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு

    ReplyDelete
    Replies
    1. நன்றி சாமுவேல்...!!!
      தொடர்ந்து படிங்க பின்னூடத்துல உங்க கருத்துக்களை தவறாம சொல்லுங்க. அது என்னோட எழுத்தை இன்னும் சிறப்பாக்க உதவும்.

      Delete