Wednesday, January 30, 2013

தெரிஞ்சவங்க சொல்லுங்க...!!!

மக்களே...!!!

கொஞ்ச நாளா என்னால சில பதிவுகளை முழுமையா நம்ம FACE BOOK கணக்குல பகிர முடியல. சில பதிவுகளுக்கு வெறும் லிங்க் மட்டும்தான் ஏத்துக்குது. என்ன பிரச்சனைன்னு புரியல. தெரிஞ்சவங்க சொல்லுங்க ப்ளீஸ்...!!!!

சில சுவாரஸ்யங்கள்: கோழி முட்டையின் அறிவியல் பூர்வமான கட்டமைப்பு - விரிவான அறிமுகம்...!!!

மக்களே...!!!

அடுத்த பதிவு என்ன எழுதலாம்ன்னு கொஞ்சம் யோசனையில இருந்தேன். சுவாரஸ்யங்கள் பகுதி எழுதி ரொம்ப நாள் ஆச்சி. அதோட சில தொடர்கள் எழுதப்போறேன்னு அறிவிச்சி ரொம்ப நாள் ஆகுது, ஆனா ஒன்னும் எழுத ஆரம்பிக்கல இப்படி பல யோசனைகள். ஆனா பாருங்க, இன்னைக்கு நான் ஒரு வலைப்பூவுல படிச்ச ஒரு பதிவு என்னை ரொம்பவே கோவப்படுத்தினது மட்டும் இல்லாம எனக்கு அடுத்ததா என்ன எழுதலாம்ன்னு ஒரு ஐடியாவும் கொடுத்தது. அந்த பதிவுக்கான லிங்க் இங்க குடுத்திருக்கேன்.

நாம சாப்பிடற கோழி முட்டை கோழியோட அசுத்த ரத்தத்துல இருந்து உருவாகுதுன்னும், அதை சாப்பிட கூடாதுன்னும் எழுதியிருந்தார் அந்த நண்பர். இதை விட ஒரு முட்டாள்தனமான  கருத்தை நான் கேட்டதும் இல்லை, படிச்சதும் இல்லை. முட்டை அசுத்தமானது என்பது மிக மிக தவறான தகவல். முட்டை என்பது முழுக்க முழுக்க புரதங்களும் கொழுப்பு வகை சத்துகளும் நிறைந்த சிறந்த உணவு.

முட்டையின் வெள்ளை பகுதியில் -

1. 54% - OVALBUMIN - ஓவாஆல்புமின்  - புரதம் 
2.  12% - OVATRANSFERRIN - ஓவாடிரான்ஸ்பெரின் - இரும்பு சத்து      
3. 11% - OVAMUCOID - ஓவாமியூக்காய்டு  - கிருமி நாசினி 
4.  4% - OVAGLOBULIN G2 - ஓவாகுலோபுலின் G2 - மற்றொருவகை புரதம். இதில்
     பல வகை உண்டு. அதில்  G2 என்பது ஒரு வகை     
5.  4% - OVAGLOBULIN G3 - ஓவாகுலோபுலின் G3
6. 3.5% - OVAMUCINE - ஓவாமியூசின் - நோய் எதிர்ப்பு புரோட்டீன் - கிட்டத்தட்ட
   கிருமிநாசினி வகை 
7. 3.4% - LYZOZYME - லைசோசைம் - கிருமி தொற்று எதிர்ப்பு நொதி 
8. 1.5% - OVAINHIBITOR - ஓவா இன்ஹிபிடார் - நோய் தொற்றை தடுக்கும்
    கரிமவேதி பொருள் 
9. 1% - OVAGLYCOPROTEIN - ஓவாகிலைக்கோபுரோட்டீன் - சர்க்கரை சத்தும்
    புரதசத்தும் இணைந்த மற்றொரு புரத வகை.    
10. 0.8% - FLAVOPROTEIN - பிளேவோபுரோட்டீன் - மற்றொரு புரத வகை - இரும்பு
     சத்து இணைந்த புரதம். 
11. 0.5% - OVAMICROGLOBULIN - ஓவாமைக்ரோகுலோபுளின் - இதுவும் ஒரு
     வகை புரதமே. 

நம்ம கோழி முட்டையில் கூட சில சுவாரஸ்யமான தகவல்கள் இருக்கு. ஒன்னு ஒண்ணா பார்க்கலாம். முதல் தகவல் கீழ சொல்லியிருக்கிற அவிடின் பத்தினது.

12. 0.05% - AVIDIN - அவிடின் - இது சமைக்காத முட்டையில் மட்டும் இருக்கும் ஒருவகை புரதபொருள் - சமைத்த முட்டையில் அளவுக்கு அதிக வெப்பத்தின் காரணமாக இது முழுமையாக உடைந்து செயலற்றதாகி விடும். பேக்டீரியா தொற்றை தடுக்கும் வேலையை செய்யும். ஆனால், அளவுக்கு அதிகமாக நமது உடலில் சேர்ந்தால் சில விட்டமின்களை அதனுடைய வேலையை செய்ய விடாமல் தடுக்கும் இயல்பு உடையது.   எனவே முட்டையை சமைக்காமல் உண்ணுவது முடிந்த வரை கைவிட வேண்டும். 

முட்டையின் மஞ்சள் பகுதி (EGG YOLK) என்பது முழுக்க முழுக்க நிறைவுற்ற மற்றும் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் நிறைந்தது. 

  • UNSATURATED FATTY ACIDS - நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் 
    • Oleic acid - ஒலியிக் அமிலம் - 47%
    • Linoleic acid - லினோலெயிக் அமிலம் - 16%
    • Palmitoleic acid - பால்மிடோலெயிக் அமிலம் -  5%
    • Linolenic acid - லினோலெயிக் அமிலம் - 2% 

  • SATURATED FATTY ACIDS - நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் 
    • Palmitic acid, பால்மிடிக் அமிலம் - 23%
    • Stearic acid - ஸ்டியரிக் அமிலம் - 4%
    • Myristic acid - மிரிஸ்டிக் அமிலம் - 1%
இது மட்டும் இல்லாமல் இன்னும் இன்னும் பல புரத சத்துகளை முட்டை தன்னுள் கொண்டது. மேற்சொன்ன கொழுப்பு அமிலங்கள் மனித நரம்பு மண்டலம் மற்றும் சிறந்த மூளை வளர்ச்சிக்கு மிக மிக இன்றியமையாத சத்துகள். கர்பிணி பெண்கள் மற்றும் வளரும் குழந்தைகளுக்கு மிக மிக சிறந்த உணவு. 

முட்டையின் ஓடு கால்சியம் கார்பனேட் என்னும் வேதிப்பொருள். தெரியாமல் குழந்தைகள் சாப்பிட்டாலும் நமது வயிற்றுக்குள் செரிக்கப்பட்டு இதில் உள்ள கால்சியம் நமது பற்கள் எலும்பு வளர்ச்சி மற்றும் இன்னும் பல விதங்களில் உபயோகபடுத்தப்படும். இதனால் நமது உடலுக்கு எந்த வித தீங்கும் இல்லை.

தற்போது முட்டையில் உள்ள ஒரே தீங்கு, முட்டை மட்டும் அல்ல கோழி இறைச்சியிலும் உள்ள தீங்கு என சொன்னால் அது மனிதர்களால் கோழிகளுக்கு சீக்கிரம் அதிக எடையில் வளர போடப்படும் ஸ்டீராய்ட் ஊசி மருந்துகள். இது மனிதர்களால் உண்டாக்கப்பட்ட தீங்கு. இந்த ஊசிகள் போடப்பட்டு வளர்க்கும் கோழியின் இறைச்சி மற்றும் முட்டைகள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. மற்றபடி முட்டையில் எவ்வித தீங்கும் இல்லை.

ஒரு முட்டை உருவாக தேவையான அனைத்து புரதங்களும் கொழுப்பு அமிலங்களும் கோழியின் இரத்தம் வழியா சப்ளை ஆகுது. இதுல கெட்ட இரத்தம் அப்படிங்கறது எல்லாம் ஒன்னும் இல்லை. இதை விட ஒரு முக்கியமான விஷயம் இரத்தத்தை அது கெட்ட இரத்தமாவே இருந்தாலும்  நாம சாப்பிடறதால நமக்கு எந்த கெடுதலும் வராது. நாம சாப்பிடறது எதுவா இருந்தாலும் அது BIOLOGICAL ORIGIN - அதாவது ஒரு உயிருள்ள பொருள் கிட்ட இருந்த நமக்கு கெடைக்கறதா இருந்தால் அது முழுக்க முழுக்க ஜீரணம் ஆயிடும்.


உதாரணம் சொல்லட்டுமா - பாம்பு விஷம் - பாம்போட விஷம் முழுக்க முழுக்க NUCLEASES, NUCLEOTIDASES மற்றும் PHOSPHOMONOESTERASES எனப்படும் நொதிகள் - அதாவது ENZYMES. இதனோட வேலை செல் ஜவ்வு, DNA, RNA இதெல்லாம் உடைக்கிறது. இது நமது இரத்தத்துக்குள்ள போயிடுச்சின்னா இரத்த செல்கள், அதுக்குள்ளே இருக்கிற DNA RNA இதையெல்லாம் உடைச்சி உடனடி மரணம். இந்த நொதிகள் எல்லாம் புரோட்டீன்கள். இது இரத்தத்துக்குள்ள போனாதான் நமக்கு ஆபத்து. பாம்பு கடிக்கிற பேர்ல நம்ம உடல் மேல துளை போட்டு விஷத்தை இரத்தம் உள்ள செலுத்துது. அதனால தான் மரணம் நிகழுது. இதுவே வாய் வழியா நாம எடுத்துகிட்டோம் அப்படின்னா, இது வெறும் புரோட்டீன். அப்படியே ஜீரணம் ஆயிடும். சாப்பிடும்போது நம்ம வாய், உணவுக்குழாய், வயிறு அதாவது இரைப்பை இங்க எங்கயும் புண் எதுவும் இருக்க கூடாது. அதாவது நம்ம இரத்தம் கூட சேரும் வாய்ப்பு எங்கயும் இருக்க கூடாது. அதுவே வேதிப்பொருள் கலந்து தயாரிக்கப்படும் விஷத்துக்கு இது பொருந்தாது.  

ஓகே மக்களே...!!! ரெண்டாவது சுவாரஸ்யமான தகவல் - வேகவைத்த முட்டையை உடைக்கிறப்போ  அதுக்குள்ளே ஒரு முனை கொஞ்சம் குழிவா இருக்கும். பார்த்திருக்கிங்களா...??? அதுக்கு AIR SACK OR AIR SPACE  - காற்றுப்பை அப்படின்னு பேரு. அது எப்படி எதுக்காக உருவாகுதுன்னு தெரியுமா? கோழியோட வயிற்றுக்குள் இருக்கிற வரை முட்டையில் அது மாதிரி குழிவான பகுதி இருக்காது. கோழியோட உடல் வெப்பநிலை கிட்டத்தட்ட 106 டிகிரி பேரன்ஹீட். செல்சியஸ்ல சொல்லனும்ன்னா 41 டிகிரி செல்சியஸ். இந்த அதிகபட்ச வெப்பநிலையில உருவாகும் முட்டை உள்ள இருக்கிற வரை முட்டையின் ஓடு முழுமைக்கும் பரவி இருக்கும். வெளிய வந்ததும் வெளியில உள்ள குறைந்த வெப்பநிலையில (அதிகபட்சம் முப்பது டிகிரிக்குள்ள தான் இருக்கும்) சுருங்க ஆரம்பிக்கும். அப்படி சுருங்கும்போது முட்டைக்குள்ள உருவாகும் வெற்றிடம் தான் நாம பார்க்கிற குழிவான பகுதி.

அதே சமயம் முட்டையின் ஓடு - கால்சியம் கார்பனேட் - இது வேற ஒன்னும் இல்ல... நம்ம சுண்ணாம்பு கல் தான். பார்க்க கடினமா இருந்தாலும் அதுல கண்ணுக்கு தெரியாத நெறைய ஓட்டைகள் இருக்கும். கிட்டத்தட்ட 7000 ஓட்டைகள் இருக்கலாம்ன்னு கணிச்சிருக்காங்க. இந்த ஓட்டைகள் வழியே வெளிய இருந்து காற்று முக்கியமா பிராண வாயு உள்ள போகும். அந்த வெற்றிடத்தை அடைச்சிக்கும். இந்த வாயு புதியதாக உருவாகும் கோழிகுஞ்சு சுவாசிக்க உதவும்ன்னு கூட சொல்றாங்க. இயற்கை எவ்வளவு முன்னெச்சரிக்கையா ஒவ்வொரு விசயத்தையும் செய்து வெச்சிருக்கு பார்த்திங்களா ...???

ஓகே...!!! இன்னொரு முக்கியமான அதே சமயம் மிக மிக சுவாரஸ்யமான விஷயம். கோழி குஞ்சு எங்க இருந்து வருது? முட்டை நமக்கு தெரியும். அதுல வெள்ளை கரு மஞ்சள் கரு அப்படின்னு ரெண்டு பகுதி இருக்கறது தெரியும். சரி...!!!! இதுல எந்த பகுதியில் இருந்து கோழி குஞ்சு வரும் ? எதுவும் ஐடியா இருக்கா...?????

நானே சொல்றேன். கோழி குஞ்சு இந்த ரெண்டு பகுதியில இருந்தும் வரல. நம்ப முடியல இல்ல...!!!! மஞ்சள் மற்றும் வெள்ளை கரு ரெண்டுமே புதிதாக உருவாகும் கோழி குஞ்சு நன்றாக வளர தேவையான சத்துகளை மட்டுமே குடுக்கும். அதுவும் அந்த குஞ்சு உருவாகி வளர ஆரம்பித்த பிறகே...!!! அப்போ கோழிகுஞ்சு எங்கதான் இருந்து வருது? பாக்கலாமா ?

கோழியோட முட்டை வெளிய இருந்து பார்க்க எல்லாம் ஒரே மாதிரி இருந்தாலும் தனித்தனியா சில படலங்களால் உருவாகி இருக்கும். வெளிய இருந்து பார்க்கிற வெளிப்புற ஓடு- OUTER SHELL , அடுத்தது ஓட்டை ஒட்டி ஒரு மெல்லிய வெள்ளை நிற ஜவ்வு மாதிரியான வெளிப்புற உறை - OUTER SHELL MEMBRANE (வேக வைத்த முட்டையை உடைக்கும்போது சில சமயம் நாம இதை பார்க்கலாம்), அடுத்தது வெள்ளை கருவை சுத்தி ஒரு மெல்லிய படலம் - INNER SHELL MEMBRANE, இரு பகுதிகளாக வெள்ளைக்கரு - வெளிப்புற நீர்த்த வெள்ளை கரு - OUTER LAYER OF ALBUMEN, அடுத்த கெட்டியான வெள்ளைக்கரு - INNER LAYER OF ALBUMEN, அடுத்தது வெள்ளைக்கருவையும் மஞ்சள் கருவையும்  பிரிக்கும் வெகு மெல்லிய ஜவ்வு படலம் விட்டலின் படலம் - VITELLINE MEMBRANE (இந்த ஜவ்வு படலம் தான் மஞ்சள் கருவை முழுமையா உடைந்து போகாம பாதுகாக்குது. முட்டையை உடைச்சி பாத்திரத்துல கொட்டும்போதும் மஞ்சள் கரு முழுமையா உடையாம வர இதுதான் காரணம்). இதுக்கு அப்புறம் தான் மஞ்சள் கரு. மஞ்சள் கரு சாதாரண கண்ணால் பார்க்க முழு மஞ்சள் நிற கருவா இருந்தாலும் உண்மையில் மெல்லிய வெள்ளை மற்றும் மஞ்சள் நிற படலம் மாறி மாறி உருவானது. இந்த மஞ்சள் கருவுக்கு உள்ளேயும் சிறிய துளி அளவிலான வெண்ணிற கரு (வேகவைத்த மஞ்சள் கருவை இரண்டாக உடைக்கும்போது இதை பார்க்கலாம்). 

நான் ஒரு விஷயம் சொல்றேன். ஒரு கரு உருவாகனும்ன்னா பெண்ணின் கரு முட்டையும், ஆணின் விந்தணுவும் வேணும். முக்கியமா இந்த ரெண்டும் கண்ணுக்கே தெரியாத ஒரு ஒற்றை செல்கள். இப்போ எதுவும் தோணுதா ? நீங்க நெனக்கிறது சரிதான். முட்டையோட வெள்ளை மற்றும் மஞ்சள் கரு ரெண்டுமே இவ்வளவு சிறிய செல்கள் கிடையாது.

                              (படத்து மேல கிளிக் பண்ணி பெருசாக்கி பார்க்கலாம்)


உங்களுக்கு இப்போ நான் சொல்ற விஷயம் கண்டிப்பா புதுசா இருக்கும். ஒரு கோழி சேவலோட கூடினாலும் இல்லன்னாலும் முட்டை குடுக்க முடியும். ஆனா, அந்த முட்டையில் இருந்து கோழிக்குஞ்சு வரத்தான் சேவல் வேணும். ஒரு கோழி முட்டையிடும் பருவம் வந்ததும் சேவலோட சேரும். அப்போ சேவல் வெளியிடற விந்து செல்களையும் சேர்த்து முட்டையை உருவாக்கும். அதாவது கோழியோட வயித்துக்குள்ள முதல் முதல்ல முட்டை உருவாகும்போது முட்டையோட மஞ்சள் கரு தான் மொதல்ல உருவாகும். உங்கள்ள நெறைய பேரு கோழி வெட்டும்போது குட்டிக்குட்டியா நெறைய பாசிமணி கோர்த்த மாதிரி சின்னதும் பெருசுமா மஞ்சள் கருவை பார்த்திருக்கலாம். இப்போ கோழி சேவலோட சேர்ந்து அதனோட விந்து செல்களை தனக்குள்ள பாதுகாப்பா சேர்த்து வெச்சிக்கும். அப்புறமா முட்டை உருவாகும்போது தன்னோட கருமுட்டை, சேவலோட விந்து செல் ரெண்டையும் சேர்த்து, ஒரு தட்டு மாதிரியான புரோட்டீனால் ஆன டிஸ்க்ல வெச்சி மஞ்சள் கருவோட ஓட்ட வெச்சிடும். அதை சுத்தி வெள்ளை கருவை உருவாக்கி ஒரு முழு முட்டையை உருவாக்கும். அந்த முட்டையை தான் நாம பார்க்கிறோம்.


இந்த கருமுட்டை, சேவலோட விந்து செல் இருக்கிற டிஸ்க் பேரு GERMINAL DISK (OR) BLASTODERM  - ஜெர்மினல் டிஸ்க் அல்லது பிளாஸ்ட்டோடெர்ம் அப்படின்னு பேரு. இந்த டிஸ்க்கை நாம வெறும் கண்ணால் பார்க்க முடியாது. இந்த ஜெர்மினல் டிஸ்க்ல இருக்கிற ரெண்டு செல்களும் சேர்ந்து புது கோழி குஞ்சை குடுக்கும். இந்த ரெண்டு செல்லும் கோழியின் உடல் வெப்பநிலையில் மட்டும் தான் வேலை செய்யும். அந்த வெப்பநிலை இல்லன்னா ஆக்டிவா இருக்காது. அந்த வெப்ப நிலை குடுக்கதான் நாம அடைக்கக்கறது அப்படின்னு ஒன்னை வெக்கிறோம். கடைசியா,  முழுக்க முழுக்க ஜெல் மாதிரி இருக்கிற மஞ்சள் கரு உடையாம இருக்கறதுக்காக அதை சுத்தி பாதுகாப்பு படலம் இருக்குன்னு சொன்னேன். அதே மாதிரி சின்ன அதிர்வுகள் காரணமா முட்டைக்குள்ள அங்க இங்க நகராம முட்டையோட நடுவுல இருக்க வைக்க மஞ்சள் கருவோட ரெண்டு பக்கமும் இழுத்து கட்டி வெச்ச மாதிரி ரெண்டு வெள்ளை நிற புரோட்டீன் படலம் இழுத்து பிடிச்சிருக்கும். அதுக்கு CHALAZA - கலாஸா அப்படின்னு பேரு. என்னே ஒரு முன்னெச்சரிக்கை...!!!!!!!!!


                                  (படத்து மேல கிளிக் பண்ணி பெருசாக்கி பார்க்கலாம்)

சேவலோட சேராம உருவாகும் முட்டையில் கோழியோட கருமுட்டை மட்டும் தான் இருக்கும். அதனால தான் அதுல இருந்து கோழிகுஞ்சு வராது. ஸோ மக்களே...!!! அநேகம் பேருக்கு இது கண்டிப்பா புது தகவல்கலா இருக்கும் அப்படின்னு நம்பறேன். படிங்க. உங்க கருத்துகளை சொல்லுங்க. அடுத்த பதிவுல சிந்திப்போம்.




Tuesday, January 22, 2013

வரவேற்கிறோம்...!!!

மக்களே...!!!

நம்ம உயிர்நுட்பம் எழுத ஆரம்பிச்சி கிட்டத்தட்ட 9 மாதங்கள் ஆகுது. ஆரம்பிச்ச புதுசுல வேகவேகமா நெறைய எழுதிட்டு இருந்த நான் நாளடைவில் நேரமின்மை, சோம்பேறித்தனம் இப்படி சில பல காரணங்களால நெறைய எழுத முடியாம போயிடுச்சி. 

இருந்தாலும் எந்தவிதமான எண்டர்டெயின்மெண்ட்டும் இல்லாத, முழுமையான அறிவியல் சம்பந்தப்பட்ட வலைப்பூவுக்கு இந்த குறைந்தபட்ச காலத்திற்குள் கெடைச்சிருக்கிற வரவேற்பு நெஜமாலுமே வியக்கத்தக்கது. எல்லாம் உங்க செயல். 

ஓகே...!!! இப்போ நம்ம வலைப்பூ நண்பர்கள் குழுவில் சேர்ந்திருக்கிற நண்பர்கள் 12th நண்பர்கள், ராமதாஸ் சின்னபிள்ளை, ஆனந்த் குமார், தேவராஜன். S மற்றும் ஸாம் டேவிட் தனபால் அவர்களை நம்ம உயிர்நுட்பம் நண்பர்கள் சார்பாக வரவேற்கிறது...!!!
***********************************************************************************

Monday, January 21, 2013

ADENOSINE 5' - TRI PHOSPHATE (ATP) - அடினோசின் 5' - டிரைபாஸ்பேட் - ஒரு அறிமுகம்...!!!

மக்களே...!!!  

நம்ம வலைப்பூ நம்ம ஊரு மற்றும் வெளிநாட்டு வாசகர்கள் மத்தியில ஓரளவு நல்லாவே போய் சேர்ந்திருக்கு. கணிசமான எண்ணிக்கையில பின்தொடர்பவர்கள், ஒரு நாளைக்கு அறுபது பேர் குறையாம படிக்கிற வலைப்பூ நம்ம வலைப்பூ அப்படிங்கறது ஒரு முழுமையான அறிவியல் சம்பந்தப்பட்ட வலைப்பூவுக்கு பெரிய விஷயம் தான். ரொம்ப சந்தோசமா இருக்கு. எதோ எனக்கு தெரிஞ்சதை, என்னால செய்ய முடிஞ்சதை ஓரளவு நல்ல முறையில செய்யனும்ன்னு செய்திட்டு இருக்கேன். எல்லாம் நீங்க குடுக்கற வரவேற்பு தான் காரணம். இந்த வலைப்பூ படிக்கிற வாசகர்கள்ல ஒரு நாலு பேருக்காவது நான் எழுதறது உபயோகமா இருந்தா அதுவே நான் செய்யிற இந்த வேலைக்கு ஒரு அர்த்தம் குடுக்கும். உங்க கருத்துகளை மறக்காம பின்னூட்டத்தில் சொல்லுங்க. 

செல் அமைப்பு வரிசையில, செல் சுவர் பத்தின நம்ம பதிவுகள் முடிஞ்சி போயிடுச்சி. எப்படி இருந்தது? உபயோகமா இருந்ததா? உங்க கருத்துகள் கேக்க, தெரிஞ்சிக்க ரொம்ப ஆவலா இருக்கேன்.   அடுத்ததா நாம பார்க்கபோற செல் நுண்ணுறுப்பு மைட்டோகாண்ட்ரியா. இங்க மைட்டோகாண்ட்ரியாவை பத்தின முதல் அறிமுகம், அதன் அமைப்பு, வேலை, அதன் முக்கியத்துவம் அப்படின்னு அதனோட ஆதி முதல் அந்தம்  வரை எல்லாமே பார்க்கலாம். இருந்தாலும் மைட்டோகாண்ட்ரியா பத்தி நேரிடையா பார்க்க, சொல்றதுக்கு முன்னாடி நாம தெரிஞ்சிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கு. அதை முதல்ல பார்த்திட்டு அப்புறமா நாம மைட்டோகாண்ட்ரியா பத்தி பார்க்கலாம். இன்னைக்கு பதிவுக்கு போகலாம். 

ADENOSINE 5' - TRIPHOSPHATE (ATP) - அடினோசின் 5' - டிரைபாஸ்பேட் 

அடினோசின் டிரை பாஸ்பேட் - கரிம வேதிப்பொருள். உங்களுக்கு ஞாபகம் இருக்கும்ன்னு நெனக்கிறேன். நியூக்ளிக் அமிலங்கள் - DNA மற்றும் RNA பத்தி படிக்கும்போது அவைகள் உருவாக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களான கார மூலக்கூறுகள் பத்தி சொல்லியிருக்கேன். அது என்னென்னன்னு உங்களால ஞாபகப்படுத்திக்க முடியுதா? நானும் சொல்றேன். 

A - ADENINE - அடினைன் 
G - GUANINE - குவானைன் 
T - THYMINE - தைமின் 
C - CYTOSINE - சைட்டோசின் 

இதுல அடினைன்-ADENINE-ல இருந்து பெறப்பட்ட (DERIVATIVE) கரிம வேதி மூலக்கூறுதான் நம்ம ATP - அப்படின்னு செல்லமா கூப்பிடப்படற அடினோசின் டிரைபாஸ்பேட். ஓகே... எல்லாம் சரி...!!! மைட்டோகாண்ட்ரியா பத்தி பார்க்கறதுக்கு முன்னாடி பார்க்கற அளவுக்கு இதுல அப்படி என்ன முக்கியத்துவம் இருக்கு? அது பத்தி கீழ- 

1. மைட்டோகாண்ட்ரியா அப்படிங்கற ஒன்னு நம்ம செல்லுக்குள்ள வந்ததே
   நெறைய ATP உருவாக்க தான்.

அப்போ அதுக்கு முன்னாடி ATP நம்ம செல்லுல உருவாகலையா ? 

உருவாச்சி - ஆனா அளவு ரொம்ப கம்மி. அதுக்கு நெறைய சக்தியை நம்ம செல் செலவழிக்க வேண்டி இருந்தது. ATP-உருவாகறதே நம்ம செல்லுக்கு தேவையான சக்தி குடுக்கதான். உருவாகற சக்தி எல்லாம் மறுபடியும் வேற ATP உருவாக செலவு பண்ணிட்டா நம்ம செல்லுக்கு தேவையான அளவு சக்தி கிடைக்காம போயிடும். அதை சரிபண்ண தான் நம்ம செல் மைட்டோகாண்ட்ரியாவை கொண்டுவந்தது. இந்த எல்லாத்தையும் நாம ஒன்னொன்னா இனி வரப்போற பதிவுகள்ள பார்க்கலாம்.

இப்போ இன்னைய பதிவுக்கு போகலாம்.

ATP அப்படிங்கறது அடினோசின், ஒரு 5 கார்பன் இருக்கிற சர்க்கரை மூலக்கூறு- ரைபோஸ் சர்க்கரை மூலக்கூறு அதோட மூன்று பாஸ்பேட் மூலக்கூறுகள் - இது எல்லாம் சேர்ந்தது அடினோசின் டிரைபாஸ்பேட். அடினோசின் அப்படிங்கறது அடினோசின் மூலக்கூறையும், டிரைபாஸ்பேட் அப்படிங்கறது மூன்று பாஸ்பேட் மூலக்கூறுகளையும் குறிக்கிற சொற்கள். அடினோசின் மூலக்கூறு ரைபோஸ் சர்க்கரையோடும், ஒன்று, இரண்டு அல்லது மூன்று பாஸ்பேட் மூலக்கூறுகளோட இருக்க முடியும்.

1. அடினோசின் 5'-மோனோபாஸ்பேட் - ADENOSINE 5'-MONOPHOSPHATE (AMP )
    இது ஒரே ஒரு பாஸ்பேட் மட்டும் கொண்ட வகை

2. அடினோசின் 5'-டைபாஸ்பேட் - ADENOSINE 5'-DIPHOSPHATE (ADP )
    இது இரண்டு பாஸ்பேட் மட்டும் கொண்ட வகை

3. அடினோசின் 5'-டிரைபாஸ்பேட் - ADENOSINE 5'-TRIPHOSPHATE (ATP)
    இது நமக்கு நல்லா தெரிஞ்ச ATP. இதுல இன்னொரு முக்கிய விஷயம்  
    என்னன்னா ADP-யோ அல்லது ATP-யோ நேரிடையா அடினைன்ல இருந்து
    வர முடியாது. அடினைன்ல இருந்து AMP, AMP ல இருந்து ADP, ADPல இருந்து
    ATP  இப்படி படிப்படியா தான் வர முடியும். உருவாகும்.

AMP, ADP மற்றும் ATP யில் இருக்கிற ஒவ்வொரு பாஸ்பேட் மூலக்கூறும் மிக வலிமையான வேதிப்பினைப்பு மூலம் பிணைக்கப்பட்டு இருக்கும். இந்த பிணைப்பு பாஸ்போ அன்ஹைட்ரைட் பிணைப்பு - PHOSPHOANHYDRIDE BOND அப்படின்னு சொல்லுவாங்க. இந்த பிணைப்பு உருவாக மிக அதிக அளவில் சக்தி வேணும். அதேப்போல இந்த வேதிப்பிணைப்பு உடைக்கப்படும் போது அதே அளவில் சக்தி வெளிப்படும். இதுதான் இந்த ATP நமக்கு சக்தி கொடுக்கும் வேதிப்பொருளா மாறினதோட பின்னணி.

இந்த ATP எப்படி நமக்கு சக்தியை குடுக்க முடியும் ?

நம்ம உடல்ல அதாவது செல்லுல எங்க எல்லாம் சக்தி உருவாகுதோ அந்த சக்தி தேவைக்கு போக மீதி இருக்கிற சக்தி ATP -யா நம்ம செல்லுக்குள்ளயே சேர்த்து வைக்கப்படும். எப்படினா மீதி இருக்கிற சக்தியை உபயோகப்படுத்தி நம்ம செல்லுல இருக்கிற ADP யில புதிய வேதிப்பிணைப்பு உருவாகி அடினோசின் 5'-டிரைபாஸ்பேட்டாக மாற்றப்படும். எப்போ எல்லாம் நமக்கு சக்தி தேவைப்படுதோ அப்போ இந்த ATP அந்த இடத்துக்கு எடுத்துபோகப்பட்டு    அங்க இந்த ATP யில் இருக்கிற கடைசி அதாவது மூன்றாவது வேதிப்பிணைப்பு உடைக்கப்பட்டு தனி பாஸ்பேட் மூலக்கூறாகவும், ADP யாகவும் மாற்றப்படும். வெளியாகிற சக்தி நமது செல்லால் அதனுடைய பல வேலைகளுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படும்.

                             (படத்துமேல கிளிக் பண்ணி பெருசாக்கி பார்க்கலாம் )

இங்க சொல்லவேண்டிய இன்னொரு விஷயம் ATP மட்டும்னு இல்ல, சில இடங்களில் GTP - GUANINE 5'-TRIPHOSPHATE - குவானைன் 5'-டிரைபாஸ்பேட்டும் உபயோகப்படுத்தப்படும்.  மத்த ரெண்டும் TTP மற்றும் CTP அதாவது டிரை பாஸ்பேட் மூலக்கூறுகளான CYTOSINE - சைட்டோசின், THYMINE - தைமின் எங்கயும் சக்தி சம்பந்தப்பட்ட வேலைக்கு உபயோகப்படுத்தபடறதா எனக்கு தெரியல. தெரிஞ்சவங்க சொல்லலாம்.

                                      (படத்துமேல கிளிக் பண்ணி பெருசாக்கி பார்க்கலாம் )

இதுக்கு எனக்கு தெரிஞ்ச ரெண்டு காரணங்கள் இருக்கலாம்.

1. அடினைன் மற்றும் குவானைன் ரெண்டும் பியூரின் வகையை சேர்ந்த கார மூலக்கூறுகள். பிரிமிடின் வகையை சேர்ந்த மத்த ரெண்டையும் விட இது செல்லோட ஏதாவது ஒரு வேலைக்கு மிக உகந்ததாக இருக்கலாம்.

2. இதை உடைத்து ரெண்டு பாஸ்பேட் கொண்ட மூலக்கூறாக மாற்ற பயன்படுத்தப்படும் நொதி அதாவது என்சைம் - ATPase மற்றும் GTPase. இது செல்லின் எல்லா பகுதியிலும் சுலபமா கிடைக்கக்கூடியது. வேற ஏதாவது காரணம் இருப்பின் எனக்கு தெரியப்படுத்தலாம்.

ஓகே மக்களே...!!! இந்த பதிவிலும்  தொடர்ந்து வரும் பதிவுகளில் மைட்டோகண்ட்ரியா பத்தி சொல்ல தொடங்கற வரை சொல்ல போறதையும் கவனமா ஞாபகம் வெச்சிக்கோங்க. இது பின்னாடி நெறையவே தேவைப்படும். அடுத்த பதிவில் சிந்திப்போம்.

Sunday, January 20, 2013

சென்னை ஐஐடி: உதவித்தொகையுடன் கூடிய இரண்டு மாத கோடைக்கால பயிற்சி ஆராய்ச்சி திட்டம் - 2013

மக்களே...!!!

சென்னையில் உள்ள ஐஐடியில் இரண்டு மாத உதவித்தொகையுடன் கூடிய கோடைக்கால பயிற்சி ஆராய்ச்சி திட்டம் - 2013 அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி தேர்வாகும் மாணவர்களுக்கு நல்ல உதவித்தொகையும் வழங்கப்படும். மாணவர்களுக்கு இடையே ஆராய்ச்சி குறிந்த ஆர்வமும் விழிப்புணர்வும் உண்டாக்கவும், இதன் மூலம் சரிந்து வரும் ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களின் எண்ணிக்கையை கூட்டவும் இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம், வணிகம், மேலாண்மை மனிதநேயவியல் மற்றும் அறிவியல் துறையை சேர்ந்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் - பிப்ரவரி 18, 2013.



தேர்வாகும் மாணவர்கள் சென்னை ஐஐடியை சேர்ந்த பேராசிரியர்களின் மேற்பார்வையில் சிறிய அளவிலான இரண்டு மாத ஆராய்ச்சி திட்டத்தில் வேலை செய்ய பணிக்கப்படுவார்கள்.

இத்திட்டத்திற்கு 3வது ஆண்டு B.E/B.Tech/B.Sc (Eng) / Integrated M.E/M.Tech. அல்லது முதல் வருட ME/M.Tech/M.Sc./M.A, MBA மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆனால் ஏற்கனவே ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க அனுமதி, தகுதி இல்லை.

சென்னை ஐஐடியில் உள்ள Aerospace Engineering, Applied Mechanics, Bio Technology, Chemical Engineering, Civil Engineering, Computer Science & Engineering, Engineering Design, Electrical Engineering, Mechanical Engineering, Metallurgical & Materials Engineering, Ocean Engineering, Physics, Chemistry, Mathematics, Humanities & Social Sciences, Management Studies துறைகள் இந்த திட்டத்தில் இணையவுள்ளன. இதன்படி தேர்வாகும் மாணவர்கள் அவரவரது பின்புலத்திற்கு ஏற்ப மேற்குறிப்பிட்ட துறைகளில் ஆராய்ச்சியை மேற்கொள்ள பணிக்கப்படுவார்கள்.

மேலதிக தகவல்களுக்கு http://www.iitm.ac.in/iitm-summer-fellowship-programme-2013 இந்த லிங்க்கை பின்தொடரவும். 

திட்டத்தின் காலம் - 2 மாதங்கள். மாணவர்கள் தான் துவங்கும் ஆராய்ச்சி திட்டத்தை இரண்டு மாதத்திற்குள் முடித்து தர வேண்டும். இவர்களுக்கு மாதம் ரூ. 6, 500/- என்ற கணக்கில் இரண்டு மாதங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.


ஸோ... மக்களே உங்களுக்கு தெரிஞ்சவங்க இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களாக இருந்தால் அவங்களுக்கு தெரிவியிங்க. இல்ல நீங்களே விண்ணபிக்க முடியும்ன்னா கண்டிப்பா முயற்சி பண்ணுங்க. எனது  வாழ்த்துக்கள். அடுத்த பதிவில் சிந்திப்போம்...!!!

Thursday, January 17, 2013

பொங்கல் வாழ்த்துக்கள்...!!!

மக்களே...!!!

                            

இது ரொம்ப தாமதம் தான். இருந்தாலும் மன்னிச்சிக்கோங்க. நமது உயிர்நுட்பம் நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் அனைவருக்கும் உயிர்நுட்பம் மற்றும் உயிர்நுட்பம் நண்பர்கள் சார்பாக பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 
******************************

Friday, January 11, 2013

செல் அமைப்பு: செல் சுவர் அமைப்பு - CELL WALL STRUCTURE (மைக்கோபேக்டீரியா - MYCOBACTERIA) - 6

மக்களே...!!!
புது வருஷம் தொடங்கியிருக்கு. ஆரம்பம் என்னவோ நல்லாத்தான் இருக்கு. நம்ம வலைப்பூ 10000 PAGEVIEWS கடந்திருக்கு. போன வருசத்தோட கடைசி மாசம் தொடர்ச்சியா சில பதிவுகள் எழுத முடிஞ்சது. இப்படியே எல்லா மாசமும் இந்த வருஷம் முழுக்க இருக்க முடிஞ்சா நல்லா இருக்கும். முயற்சி பண்றேன். அப்புறம் நம்ம வலைப்பூவுல தொடர்ச்சியா எழுதிக்கிட்டு இருந்த தொடர் செல் அமைப்பு. இது ஒண்ணுதான் ஒழுங்கா போயிட்டு இருந்தது. அதுவும் கொஞ்ச நாளா தொடர முடியாம போயிடுச்சி. புது வருசத்துல மறுபடியும் ஆரம்பிக்கிறேன். 

செல் அமைப்புல செல் சுவர் பத்தி பார்த்திட்டு இருந்தோம். பேக்டீரியா, தாவரம், பூஞ்சைகள் இப்படி வேற வேற செல் சுவர் பத்தி பார்த்திட்டு இருந்தோம். இந்த வரிசையில இப்போ நாம பார்க்க போறது மைக்கோபேக்டீரியாவோட செல் சுவர். பேக்டீரியா அப்படின்னு பொதுவான பெயர் இருந்தாலும் இதுலயும் வேற வேற டைப் இருக்கு. பேக்டீரியாவை செல் சுவர் அமைப்பு வெச்சி வகைப்படுத்தி பிரிச்சா,

1) ஆர்க்கியே பேக்டீரியா - ARCHAEA BACTERIA 
    ஆர்க்கியே பேக்டீரியா ஒரு தனி குடும்பமா இருந்தாலும் இப்போதைக்கு  
    நம்ம வசதிக்காகவும், ஒரு ஒப்பீட்டுக்காகவும் இதையும் இந்த லிஸ்ட்ல
    வெச்சிப்போம். 
2) கிராம் பாசிடிவ் பேக்டீரியா - GRAM POSITIVE BACTERIA 
3) கிராம் நெகடிவ் பேக்டீரியா - GRAM NEGATIVE BACTERIA 
4) மைக்கோபேக்டீரியா - MYCOBACTERIA 

இப்படி 4 முக்கியமான வகை உண்டு. இதுல முதல் மூணு வகை பேக்டீரியாவோட செல் சுவர் அமைப்பு பத்தி ஏற்கனவே பார்த்திட்டோம். அடுத்ததா 4வது வகை மைக்கோபேக்டீரியா. இந்த வரிசையில மைக்கோபேக்டீரியா செல் சுவர் மட்டும் தான் இன்னும் பாக்கி. இன்னைக்கி அதுவும் பார்த்திடலாம்.

அப்போ இன்னைக்கு பதிவுக்கு போகலாம். 

மைக்கோபேக்டீரியா - செல் சுவர் அமைப்பு 

பேக்டீரியா அப்படின்னாலே செல் சவ்வும் செல் சுவரும் தான், கொஞ்சம் ஒழுங்கா இருக்கிற செல் நுண்ணுருப்பு. ஆனா வகைக்கு ஏத்த மாதிரி அமைப்பு தான் மாறும். இதுக்கு முன்னாடி பார்த்த  கிராம் நெகடிவ் மற்றும் கிராம் பாசிடிவ் பேக்டீரியாவோட செல் சுவர் அமைப்புல இருந்து தெரிஞ்சிட்டு இருந்திருப்பிங்க.

இதுல பொதுவான விஷயங்கள் செல் சவ்வும், பெப்டிடோகிலைக்கனும் இருந்தாலும், பெப்டிடோகிலைக்கன் அளவு, பெப்டிடோகிலைக்கன் வேதி கட்டமைப்பு, அந்தந்த குறிப்பிட்ட வகைக்குன்னே இருக்கிற ஸ்பெஷல் வேதி பொருள் இவைகள் தான் ஒரு வகையில் இருந்து இன்னொரு வகையை வேறுபடுத்தி காட்டும். காட்டுது.

அதன்படி, பார்த்தா மைக்கோபேக்டீரியாவுல செல் சவ்வு, பெப்டிடோகிலைக்கன் அளவு, செல் சவ்வை ஒட்டி வெளிப்புறமா சூழ்ந்திருக்கிற செல் சுவரும் அப்படியே கிராம் பாசிடிவ் பேக்டீரியா மாதிரி தான்.

இது வேறுபடறது மொத்தம் மூணு இடத்துல,

வேறுபாடு - 1

செல் சவ்வும் செல் சுவரும் தனித்தனின்னாலும், முதல்ல செல் சவ்வு,  அதை ஒட்டி வெளிப்புறமா செல் சுவர் சூழ்ந்திருக்கும். இந்த செல் சவ்வும் செல் சுவரும்   ஒன்னுக்கொன்னு  அங்கங்க சில வேதி மூலக்கூறுகள் மூலமா  ஒட்டி இணைஞ்சிருக்கும். கிராம் பாசிடிவ் பேக்டீரியாவோட  செல்சுவர்ல இருக்கிற பெப்டிடோகிலைக்கன் செல் சவ்வோட இணைய லிப்போடெக்காயிக் ஆசிட் - LIPOTECHOIC ACID அப்படிங்கற கரிம  வேதிப்பொருள் உதவும்.

ஆனா, மைக்கோபேக்டீரியாவோட செல் சுவர்ல  இருக்கிற பெப்டிடொகிலைக்கன் செல் சவ்வோட இணைஞ்சிருக்க,   லிப்போ-அராபினோமேனன் - LIPO-ARAABINOMANNAN அப்படிங்கற வேதிப்பொருளும் PIM - PHOSPHATIDYLMYO - INOSITOL MANNOSIDES - பாஸ்பாடிடைல் மையோ - இனோசிடால் மேனோசைட்ஸ் அப்படிங்கற வேதிப்பொருளும் உதவும்.

வேறுபாடு - 2

கிராம் பாசிடிவ் பேக்டீரியாவுல இருக்கிற ஸ்பெஷல் வேதிப்பொருள் TECHOIC ACID - டெக்காயிக் ஆசிட் மற்றும் லிப்போ டெக்காயிக் ஆசிட் - LIPO TECHOIC ACID. ஒரு வேளை நமக்கு கிராம் பாசிடிவ் பேக்டீரியா இன்பெக்சன் ஏதாவது வந்து, அதனால ஏதாவது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டா அது இந்த குறிப்பிட்ட வேதிப்பொருள் உடலுக்குள்ள போறதால தான்.

அதே மாதிரி மைக்கோபேக்டீரியாவுல இது மாதிரி இருக்கிற வேதிப்பொருள் மைக்காலிக் ஆசிட் - MYCOLIC ACID.

வேறுபாடு - 3

ரெண்டு குறிப்பிட்ட வேதிப்பொருட்கள் மைக்கோபேக்டீரியாவுல மட்டும் ஸ்பெசலா இருக்கு. இது மாதிரி வேதிப்பொருட்கள் மற்ற பேக்டீரியாக்கள்ல  கிடையாது. மைக்கோபேக்டீரியாவுல மட்டும் இருக்கிற அந்த ரெண்டு வேதிப்பொருட்கள்  அராபினோகேலக்டன் - ARABINOGALACTAN மற்றும் ACYL LIPIDS  - அசைல் லிப்பிடுகள். 

                      (படத்துமேல க்ளிக் பண்ணி பெருசாக்கி பார்க்கலாம்) 

 எங்க எல்லாம் வேறுபடுதோ அதை விளக்க படத்துல வேற கலர்ல சொல்லியிருக்கேன். ரொம்ப விரிவா இல்லன்னாலும் இதுவரை சொன்னது ஓரளவுக்கு எல்லாருக்கும் புரியும்படியா இருக்கும்ன்னு நம்பறேன். இன்னைய பதிவோட செல் சுவர் அமைப்பு முடியிது. அடுத்த செல் நுண்ணுறுப்பு அமைப்போட மறுபடியும் வரேன். அடுத்த பதிவுல சிந்திப்போம்.  


Tuesday, January 1, 2013

ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!!!

நண்பர்களே...!!!


உங்க எல்லாருக்கும் உயிர்நுட்பம் நமது நண்பர்கள் குழு சார்பாக இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை 
தெரிவித்துக்கொள்கிறது. 

இந்த புதிய வருடம் உங்க வாழ்க்கையில் சந்தோசத்தை கொண்டுவரட்டும்...!!!
****************************************