Wednesday, July 17, 2013

ஒளிச்சேர்க்கை - CALVIN CYCLE - கேல்வின் சுழற்சி வினைகள் - C4 வினைகள் - C4 PATHWAY - 4

மக்களே...!!!

இந்த மாசத்துல இது நாலாவது பதிவு. என்னவோ நானே எதிர்ப்பார்க்காம ஓரளவுக்கு நல்லா போயிட்டு இருக்கு. எல்லாம் நல்லதுக்கேன்னு நெனப்போம். இது வரைக்கும் ஒளிச்சேர்க்கை தொடர்ல பார்த்ததை கொஞ்சமா திரும்பி பார்க்கலாம். ஒளிச்சேர்க்கை வினையில,

 1. ஒளி சார்ந்த வினைகள் - LIGHT REACTIONS 
 2. ஒளி சாராத இருட்டு வினைகள் - DARK REACTIONS 

அப்படின்னு ரெண்டு பகுதிகள் இருக்கு. இருட்டு வினைகளும், அதனுடைய முதல் விளைப்பொருளை பொறுத்து, அதாவது அதனுடைய கார்பன் அணுக்களின் எண்ணிக்கையை பொறுத்து ரெண்டு வகையா பிரிக்கப்பட்டு இருக்கு. 

1. C3 வினைகள் - C3 PATHWAY 
2. C4 வினைகள் - C4 PATHWAY 

C4 வினைகள் மொத்தம் மூணு வெவ்வேறு விதமான முறையில தாவரங்களுக்கு ஏத்த மாதிரி நடக்கும். இங்க நான் பொதுவான சில வினைகளை விளக்க போறேன். மத்த வினைகளையும் இதுல இருக்கிற வேறுபாடுகளையும் அடுத்தடுத்த பதிவுல விளக்கமா பார்க்கலாம். 

இதுல ஒளி சார்ந்த வினைகள் மற்றும் C3 வினைகள் பத்தி விளக்கமா போன பதிவுகள்ள பார்த்துட்டோம். இன்னும் பார்க்க வேண்டியது C4 வினைகள் பத்தியும் அதை சார்ந்த சில வினைகளும் தான். அவைகள் தான் இன்னைய பதிவு. வாங்க இன்னைக்கு பதிவுக்கு போகலாம். 

கேல்வின் வினைகள் - இருட்டு வினைகள் - C4 வினைகள் - C4 PATHWAY  

இங்க C4 வினைகள் அப்படின்னா என்ன அப்படின்னு பார்க்கறதுக்கு முன்னாடி தாவரங்கள் எல்லாம் ஒரே மாதிரி தான் சுவாசிக்கிறது, ஒரே மாதிரி தான் தனக்கான உணவான சர்க்கரை மூலக்கூறுகளை தயாரிச்சிக்கிதுன்னா, C3 அல்லது C4 வினைகள் அப்படின்னு ரெண்டு வகையான இருட்டு வினைகள் உருவாக என்ன காரணம்...? அப்படி என்ன அவசியம் வந்தது...? இங்கதான் இந்த பூமியில் உயிர்கள் தான் உயிர் வாழனும் அப்படிங்கற ஒரே காரணத்துக்காக எப்படி எல்லாம் தன்னை சூழ்நிலையோட பொருந்திப் போகுதுன்னு உங்களுக்கு புரியும். 

முதல்ல ஒளிச்சேர்க்கையோட இருட்டு வினைகள் எப்படி நடக்குது...?

ஒரு சாதாரண சூழ்நிலையில், தண்ணீர், உணவு எல்லாம் ஈசியா கிடைக்கும் இடத்தில் வாழற தாவரங்களை முதல்ல எடுத்துக்கலாம். தாவர இலையோட மேற்புறம் ஒரு மெழுகுப்படலம் இருக்கும். இதை நாமலே சாதாரணமா எல்லா இலைகள் மேலயும் கவனிச்சிருப்போம். இது எதுக்குன்னா தாவர இலையில் இருந்து தண்ணீர் ஆவியாகாம தடுக்கறதுக்காக இயற்கையா உருவான தடுப்பு அமைப்பு. தண்ணீர் அப்படின்னு இல்லை, எதுவுமே இலைக்குள்ள இருந்து அதனோட மேற்பரப்பு வழியே வெளிய வரமுடியாது.  அதே சமயம், உள்ள இருக்கிற எதுவுமே எப்படி வெளிய வர முடியாதோ, அதேப்போல வெளிய இருந்தும் இலையோட மேற்பரப்பு வழியா, இந்த மெழுகுப்படலம் இருக்கிற காரணத்தால எதுவும் உள்ளே நுழைய முடியாது. 

ஒரு ஒளி சாராத வினை அல்லது இருட்டு வினை நடக்கணும் அப்படின்னா, அதுக்கு முன்னாடி   சூரிய ஒளியை சார்ந்த வினைகள் நடக்கணும். அப்படி நடக்கும் போது அதுல இருந்து கிடைக்கிற விளைப்பொருள்களில் ஒன்னு ஆக்சிஜன். இந்த ஆக்சிஜன் தாவர செல்லுக்குள்ள உருவாக உருவாக வெளிய வளிமண்டலத்துக்கு வெளியேத்திட்டே இருக்கும். அதேப்போல ஒளிச்சேர்க்கை நடக்க நடக்க கேல்வின் வினைகளுக்கு தேவையான கார்பன்-டை- ஆக்சைடும் வெளிய வளிமண்டலத்துல இருந்து இலைக்குள்ள போகணும். ஆனா, அதுதான் இலை மேல ஒரு கடினமான மெழுகுப்படலம் இருக்கே, பின்ன, எப்படி ஆக்சிஜன் வெளிய வருது...? கார்பன் டை ஆக்சைடு உள்ள போகுது...?

அதுக்கு இயற்கை உருவாக்கின வழி - ஸ்டோமேடா - STOMATA - இலையின் அடிப்புறம், அதனோட பரப்புல அமைஞ்சிருக்கிற துளைகள். இலையோட அடிப்பரப்புல பல நூத்துக்கணக்கான துளைகள் இருக்கு. இந்த துளைகளோட வாயிலை இரண்டு செல்கள் - காவல் செல்கள் - GUARD CELLS  காவல் காத்திட்டு இருக்கு. தேவையானப்போ இந்த வாயிலை திறந்து மூடுவது இதனோட வேலை. செல்லுக்கு உள்ளே கேல்வின் சுழற்சி வினைகள் நடக்க தேவையான கார்பன்-டை-ஆக்சைடு இதன் வழியாத்தான் இலைக்கு உள்ள போகும். இதுக்காக இந்த GUARD செல்கள் இந்த வாயிலை திறக்கும் போது, ஏற்கனவே ஒளி சார்ந்த வினைகள் மூலமா உருவான ஆக்சிஜன் வெளிய வந்திடும். அதாவது இந்த ரெண்டு செயல்களும் ஒரே சமயத்துல நடந்திடும். இது வாயுக்கள் பரிமாற்றம் - GASES EXCHANGE அப்படின்னு சொல்வாங்க. ஏன்னா, கார்பன் டை ஆக்சைடுக்கு ஒருமுறை, ஆக்சிஜனுக்கு ஒரு முறைன்னு இந்த வாயிலை திறந்தா, திறந்து மூடும் ஒவ்வொரு முறையும் உள்ள இருக்கிற தண்ணீர் ஆவியாகி வீணாகும்.  அதை தடுக்கவே வாயுக்கள் பரிமாற்றத்தை ஒரே சமயத்துல தாவரங்கள் செய்துக்குது. இது சாதாரண சூழ்நிலையில், நல்ல தண்ணீர் வசதி உள்ள இடங்களில் வளரும் தாவரங்களில். அந்த ஒரு சில முறை திறக்கும் போதும் தண்ணீர் வீணாகவே செய்யும். இருந்தாலும் நல்ல தண்ணீர் வசதி இருக்கறதால பெருசா ஒரு விளைவையும் இது ஏற்படுத்தாது.


இதுவே தண்ணீர் வசதி இல்லாத இடமா இருந்தால்? அப்போ இந்த ஒரு சில தடவை ஸ்டோமேட்டாவை திறந்து மூடுவது கூட கண்டிப்பாக தவிர்க்கப்படணும். ஆனா, அப்படி தவிர்க்கப்பட்டால், என்ன நடக்கும்? தண்ணீர் ஆவியாவது தடுக்கப்படும் அப்படின்னாலும், இலைக்குள்ள இருட்டு வினைகள் நடக்க தேவையான கார்பன்-டை- ஆக்சைடு இலைக்குள்ள போக முடியாது. அதே மாதிரி ஒளி சார்ந்த வினைகள் மூலம் வெளியிடப்பட்ட ஆக்சிஜன் வெளியேற்றப்படாமல் இலைக்குள்ள தங்கிடும்.


சரி... இதனால என்ன பிரச்சனை வரும்னு நெனக்கறிங்க...? வெறும் ஆக்சிஜன் தானே... இதனால, என்ன பிரச்சனை வரும்.   இருக்கு... இங்க ஒரு பிரச்சனை இருக்கு. இல்லன்னா, இப்படி ஒரு பெரிய பதிவு போடவேண்டிய அவசியமே இருந்திருக்காதே.

உங்க எல்லாருக்கும் CARBON FIXATION - கார்பன் ஃபிக்சேஷன் - கார்பன் நிலை நிறுத்துதல் வினைகள் ஞாபகம் இருக்கா ? கேல்வின் சுழற்சி வினைகளோட முதல் வினை. செல்லுக்குள்ள ஏற்கனவே உருவாகி இருந்த ரிபுலோஸ் - பிஸ் - பாஸ்பேட் மூலக்கூறுகள், வளிமண்டலத்துல இருக்கும் கார்பன்-டை -ஆக்சைடு மூலக்கூறுகள் கூட இணைந்து 3-பாஸ்போ கிளிசரேட் உருவாகும். இந்த வினையில், RuBisCo - ரிபுலோஸ்-பிஸ்-பாஸ்பேட் கார்பாக்சிலேஸ் அப்படிங்கற என்சைம் தான் ஸ்டோமேட்டா திறப்பு வழியா இலையின் உள்ளுக்குள்ள நுழையிற கார்பன்-டை-ஆக்சைடை எடுத்திட்டு போய் ரிபுலோஸ்-பிஸ்-பாஸ்பேட் கூட சேர்த்து கார்பன் நிலை நிறுத்துதல் வினைகளை ஆரம்பிச்சி வெக்கும்.

இந்த என்சைம்ல தான் பிரச்சனை இருக்கு. அதாவது, இலைக்குள்ள உருவாகும் ஆக்சிஜன் அப்பப்போ சரியா வெளியேத்திட்டு, அதே மாதிரி கார்பன்-டை-ஆக்சைடு அளவு இலைக்குள்ள ரொம்ப குறையாம சரியா சம நிலையில  இருக்கிற வரை இந்த என்சைம்னால எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. அதுவே, தண்ணீர் ஆவியாகாம தடுக்கறதுக்காக, ஸ்டோமேட்டா திறக்காம போயிட்டா, கார்பன்-டை-ஆக்சைடு அளவு குறைய ஆரம்பிச்சி, ஆக்சிஜன் அளவு அதிகமா ஆகும், இந்த நிலையில கார்பன் டை ஆக்சைடை கார்பன் நிலைநிறுத்துதல் வினைகளுக்காக எடுத்திட்டு போக அங்க வரும் ரிபுலோஸ் பிஸ் பாஸ்பேட் கார்பாக்சிலேஸ் என்சைம் கார்பன்-டை-ஆக்சைடு அப்படின்னு நெனச்சி ஆக்சிஜனை எடுத்திட்டு போய் கார்பன் நிலை நிறுத்துதல் வினைகளில் கலந்திடும். கார்பன்-டை-ஆக்சைடுக்கு பதிலாக ஆக்சிஜன் வந்ததால கேல்வின் சுழற்சி வினைகள் மேற்கொண்டு நடக்காம நின்னு போயிடும்.

ஏன்னா, ஒரே காரணம் - என்சைம் ரிபுலோஸ்-பிஸ்-பாஸ்பேட் கார்பாக்சிலேஸ் கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் ஆக்சிஜன் இந்த ரெண்டுக்கூடவும் இணையிற தன்மையை கொண்டது. முதல்ல எது வருதோ அதுக்கூட சேர்ந்துக்கும். ஸோ, ஒளிச்சேர்க்கை ஆரம்பமானதும், அதிக அளவு கார்பன்-டை-ஆக்சைடு தான் இருக்கும். ஏன்னா ஒரு சுழற்சியோட முடிவுல ஒரே ஒரு மூலக்கூறு ஆக்சிஜன் உருவாகும். அதே சமயம், ஒரு சுழற்சி கேல்வின் வினைகள் நடக்க ஆறு மூலக்கூறுகள் கார்பன்-டை-ஆக்சைடு வேணும். அதனால அதிக அளவுக்கு கார்பன்-டை-ஆக்சைடை இலைகள் தனக்குள்ள எடுத்து வெச்சிருக்கும். ஆனா, சுழற்சி நடக்க நடக்க எல்லா கார்பன்-டை-ஆக்சைடு மூலக்கூறுகளும் உபயோகப்படுத்தப்பட்டு, அளவு குறைய ஆரம்பிக்க, உருவான ஆக்சிஜன் எல்லாம் இலை முழுதும்  நிரம்ப ஆரம்பிக்கும். இப்போ, RuBisCo என்சைம் கார்பன்-டை-ஆக்சைடுக்கு பதிலா ஆக்சிஜனை எடுக்க தொடங்கும். இது ஒளிச்சேர்க்கை செயலுக்கு பிரச்சனை இல்லையா...?

இந்த பிரச்சனைய சரி செய்ய, இந்த மாதிரி சூழலில் வளரும் தாவரங்கள் தனக்குள்ள ஏற்படுத்திக்கிட்ட மாற்றம் தான் C4 வினைகள். மாற்றம் இந்த வேதி வினைகளில் மட்டும் இல்லை, இந்த புது மாதிரியான வினைகளை சரியான முறையில நடத்தறதுக்கு ஏத்த மாதிரி இலையோட அமைப்புலயும் சில மாற்றங்களை இயற்கை செய்திருக்கு. முதல்ல அந்த அமைப்பை பார்க்கலாம். அப்புறம் வேதி வினைகளை பார்க்கலாம்.

C3 தாவர இலையின் அமைப்பு

இலையை குறுக்காக வெட்டி உருப்பெருக்கி மூலமா பார்த்தா, அதனோட உட்புற அமைப்பு இந்த மாதிரி தான் இருக்கும்.


1. முதல்ல, இலையோட மேற்புறமும் அடிப்புறமும் மெழுகுப்படலம். இதுக்கு பேரு - கியூட்டிக்கில் - CUTICLE

2. மேற்புறம் மற்றும் கீழ்புறமா - EPIDERMIS - எபிடெர்மிஸ் செல்கள்

3. அடுத்ததா மீசொஃபில் செல்கள். இதுக்கு ரெண்டு வகை இருக்கு.

இலையோட மேற்புறத்துக்கு எபிடேர்மிஸ் செல்களுக்கு அடுத்ததா கீழ்புறம் இருக்கறது PALISADE MESOPHYLL - பாலிசேட் மீசோஃபில்  செல்கள். இந்த செல்கள் நல்ல நெருக்கமா, ஒன்னுக்கு அடுத்து இன்னொன்னு அப்படின்னு செங்கல் அடுக்கின மாதிரி அமைஞ்சிருக்கும். இந்த செல்களில் நெறைய குளோரோபிளாஸ்ட்கள் இருக்கும். இதுக்கு காரணம் இது இலையோட மேற்புறமா இருக்கறதால, சூரிய ஒளி இந்த செல்கள் மேல நேரிடையாப்படும். அதேசமயம், இதுல நெறைய குளோரோபிளாஸ்ட்கள் இருக்கறதால இதனால மத்த செல்களை விட அதிக அளவு, ஒளிச்சேர்க்கைக்கு தேவையான சூரிய ஒளியை கிரச்சி குடுக்க முடியும்.    

அடுத்தது SPONGY MESOPHYLL - ஸ்பாஞ்சி மீசோஃபில் செல்கள். இது பாலிசேட் மீசோஃபில் செல்களுக்கு அடுத்ததா, அதே சமயம் இலையோட அடிப்புற பரப்புக்கு ரொம்ப பக்கமா இருக்கும். அந்த செல்கள் மாதிரி நெருக்கமா இல்லாம, நெறைய இடைவெளி விட்டு அமைஞ்சிருக்கும். இந்த இடைவெளி எல்லாம் பார்த்திங்கன்னா, ஒரு பெரிய கூடத்தை சுவர் வெச்சி அறைகள் தடுத்த மாதிரி இருக்கும். இது எதுக்காகன்னா, ஒளிச்சேர்க்கைக்கு தேவையான கார்பன்-டை-ஆக்சைடு கொண்டு வந்து சேர்த்து வெக்கவும், ஒளி சார்ந்த வினைகளில் உருவாகும் ஆக்சிஜனை அது வெளியேத்தற வரை சேர்த்து வெக்கவும் இந்த ஏற்பாடு.

இந்த ஸ்பாஞ்சி செல்களுக்கு நடுவுல தான் இலைகளுக்கு உணவு விநியோகத்திற்காக இணைக்கும் இணைப்பு மண்டலம். நம்ம செல்களை இணைக்கும் இரத்தக்குழாய்கள் மாதிரி. VASCULAR TISSUE - வாஸ்குலர் அமைப்பு அல்லது VEIN அப்படின்னு சொல்வாங்க.

இந்த இணைப்பு மண்டலத்தை பாதுகாக்க, அதை சுத்தி சுவர் மாதிரி இருக்கிறது BUNDLE SHEATH - பண்டில் சீத் செல்கள். சாதாரண சூழ்நிலையில் வளரும் C3 தாவர வகைகளில் இந்த பண்டில் சீத் செல்கள் ஒளிச்சேர்க்கையில் ஈடுபடறது இல்லை. 

இப்போ C4 தாவர வகை இலையோட அமைப்பு பார்க்கலாம்.


1. முதல்ல, இலையோட மேற்புறமும் அடிப்புறமும் மெழுகுப்படலம். இதுக்கு பேரு - கியூட்டிக்கில் - CUTICLE

2. மேற்புறம் மற்றும் கீழ்புறமா - EPIDERMIS - எபிடெர்மிஸ் செல்கள்

3. அடுத்ததா மீசொஃபில் செல்கள். C3 இலை மாதிரி இதுல ரெண்டு வகை எல்லாம் கிடையாது. 

இலையோட மேற்புற எபிடேர்மிஸ் செல்களுக்கு அடுத்ததா கீழ்புறம் இருக்கறது MESOPHYLL - மீசோஃபில்  செல்கள். இந்த செல்கள் நல்ல நெருக்கமா, ஒன்னுக்கு அடுத்து இன்னொன்னு அப்படின்னு செங்கல் அடுக்கின மாதிரியும், இதே செல்கள் இடைவெளி விட்டு விட்டு அறை தடுத்த மாதிரியும் அமைஞ்சிருக்கும். இந்த செல்களிலும் நெறைய குளோரோபிளாஸ்ட்கள் இருக்கும்.

இந்த மீசோஃபில் செல்களுக்கு நடுவுல தான் இலைகளுக்கு உணவு விநியோகத்திற்காக இணைக்கும் இணைப்பு மண்டலம் - VASCULAR TISSUE - வாஸ்குலர் அமைப்பு, அதை சுத்தி பாதுகாப்புக்காக BUNDLE SHEATH - பண்டில் சீத் செல்கள்.

இங்க தான் பெரிய வித்தியாசம் இருக்கு. C4 தாவர வகைகளில் இருக்கிற  இந்த பண்டில் சீத் செல்கள் ஒளிச்சேர்க்கையில் ஈடுபடும். இந்த செல்கள் ஒளிச்சேர்க்கைக்கு எப்படி, எங்க  உதவுது அப்படின்னு பார்க்கலாம். இப்போ C3 மற்றும் C4 வினைகளை ஒப்பிட்டு பார்த்தா விளக்கமா புரியும்.

 C3 வினைகள் - C3 PATHWAY 

மக்களே, C3 வினைகள் படி, இலைக்குள்ள கொண்டு வரப்படும் வளிமண்டல கார்பன் டை ஆக்சைடு RuBisCo என்சைம் உதவியோட ரிபுலோஸ் பிஸ் பாஸ்பேட் கூட சேர்ந்து 3-பாஸ்போ கிளிசரேட்டா மாத்தப்படும். இந்த 3-பாஸ்போ கிளிசரேட் 3 கார்பன்கள் கொண்ட கரிம வேதிப்பொருள் அப்படிங்கறதால இதுக்கு C3 வேதி வினைகள் அப்படின்னு பேரு.



இந்த வினைகள் இலைக்குள்ள எங்க நடக்கும் அப்படின்னா மீசோபில் செல்கள்ள நடக்கும். C3 இலையில் ரெண்டு வகை மீசொஃபில் செல்கள் இருந்தாலும் இந்த ரெண்டு வகை செல்கள்லயும் இதே வினைகள் எந்த பிரச்சனையும் இல்லாம நடக்கும். இங்க உருவாகும் சர்க்கரை மூலக்கூறுகள் இணைப்பு மண்டலத்தை பாதுகாத்திட்டு இருக்கும் பண்டில் சீத் செல்களை கடந்து இணைப்பு மண்டலத்துக்குள்ள போய் தாவரம் முழுக்க விநியோகம் ஆயிடும். மீதி இருக்கற சர்க்கரை ஸ்டார்ச்சா மாறி சேமிக்கப்படும்.

ஆனா, C4 இலையில் தான் RuBisCo என்சைம்ல பிரச்சனை. அதனால ஆக்சிஜன் - கார்பன்-டை-ஆக்சைடு சமநிலை மாறும் போது வினைக்கு தேவையான கார்பன்-டை-ஆக்சைடை இனம் காணறதுல பிரச்சனை இருக்கு.

C4 தாவரங்களுக்கு இருந்த பிரச்சனைகளும், அதை சரி செய்ய தேவைப்பட்டதும் என்னன்னா, 

1. வாயுக்கள் சமநிலை மாறினாலும், அந்த கலவையில் இருக்கிற குறைந்த அளவு கார்பன்-டை-ஆக்சைடை கூட சரியா இனம் காணக்கூடிய கூடிய ஒரு என்சைம். அந்த என்சைம் கார்பன் டை ஆக்சைடு மட்டும் எடுக்கணும். எடுத்து சரியா RuBisCo - வுக்கு கொண்டு வந்து தரனும். கார்பன் டை ஆக்சைடு RuBisCo - வுக்கு வந்து சேர்ந்திட்டா, அதுக்கு அப்புறம் மீதி எல்லாம் தானா நடக்கும்.
2. ஸோ, இந்த தாவரங்கள் C4 வினைகளை ரெண்டு பகுதியா பிரிச்சது.

கார்பன் டை ஆக்சைடு - ஆக்சிஜன் கலவையில இருந்து கார்பன் டை ஆக்சைடு மட்டும் எடுத்து, RuBisCo - வுக்கு குடுக்கிறது ஒரு பகுதி. அதுக்கு அப்புறம் வழக்கமா நடக்கிற வினைகள் ரெண்டாவது பகுதி. 




3. ஆனா, இப்போ வரது புது என்சைம் அப்படிங்கறதால, அதால கார்பன் டை ஆக்சைடை, ஆக்சிஜன் - கார்பன் டை ஆக்சைடு கலவையில இருந்து, கார்பன் டை ஆக்சைடை சரியா எடுத்திட்டாலும், நேரிடையா ரிபுலோஸ் பாஸ்பேட் கூட சேர்க்க முடியாது. அதை RuBisCo - ரிபுலோஸ் பிஸ் பாஸ்பேட் கார்பாக்சிலேஸ் மட்டும் தான் செய்ய முடியும். ஏன்னா ஒவ்வொரு என்சைமுக்கும் இந்த வேதிப்பொருள் கூடத்தான் இணைய முடியும் அப்படின்னு இருக்கும் - இதை SPECIFICITY அப்படின்னு சொல்வாங்க. அதனால தான் இன்னொரு புது என்சைம் வந்ததுக்கு அப்புறமும் RuBisCo இன்னமும் இருக்கறதுக்கு காரணம்.

 6. இப்போ C4 தாவரம் என்ன மாற்றம் பண்ணிக்கிச்சி அப்படின்னா, பாஸ்போ ஈனால் பைருவேட் கார்பாக்சிலேஸ் - PHOSPHO ENOL PYRUVATE CARBOXYLASE அப்படிங்கற என்சைமை தேர்வு செய்தது. இந்த என்சைம் கார்பன் டை ஆக்சைடு கூட மட்டும் சேரும் தன்மை கொண்டது. இதுக்குன்னு SPECIFICITY இருக்கிற கரிம வேதிப்பொருள் PYRUVATE - பைருவேட். 

7. இந்த பைருவேட், கார்பன் டை ஆக்சைடு கூட சேர்ந்து  ஆக்ஸலோ அசிடேட் - OXALO ACETATE அப்படிங்கற 4 கார்பன்கள் இருக்கிற வேதிப்பொருளா மாறும் தன்மை கொண்டது. தேவைப்படும் போது அதே கார்பன் டை ஆக்சைடை விட்டுட்டு திரும்ப பைருவேட்டா மாறிடும். இந்த வினையை C4 தாவரம் இந்த வினையை தன்னோட இருட்டு வினைகளோட முதல் வினையா மாத்திக்கிச்சி.

பயங்கரமா குழப்பிட்டேன்னு நெனக்கிறேன். ஆனா, இது வரைக்கும் தனித்தனியா சொன்னதை கோர்வையா சொன்னா சரியா புரியும்னு நெனக்கிறேன்.

இப்போ C4 வினைகளை ஒரு கோர்வையா பார்க்கலாம். 

C4 வினைகள் ரெண்டு பகுதியா பிரிக்கப்பட்டு இருக்கு. முதல் பகுதி மீசோஃபில் செல்களிலும், ரெண்டாவது பகுதி பண்டில்ஷீத் செல்களிலும் நடக்கும். இது எதுக்காகன்னா, ரெண்டாவது பகுதியில தான் RuBisCo - வருது. இது பண்டில் ஷீத் செல்லில் நடக்கறதால இந்த என்சைம் ஆக்சிஜன் - கார்பன் டை ஆக்சைடு கலவை இருக்கிற மீசோஃபில் செல் கிட்ட இருந்து விலகி வந்திடறதால ஆக்சிஜனை மாத்தி எடுக்கிற தவறு நடக்காது. 


இன்னொரு காரணம் - ரெண்டாவது பகுதி நடக்கிற பண்டில் ஷீத் செல்கள் இணைப்பு மண்டலத்தை சுத்தி பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டது. C3 தாவரங்களில் இது இருட்டு வினைகளில் ஈடுபடறது இல்லை. ஆனா C4 தாவரங்களில் RuBisCo வினைகள் பகுதி இதுல நடந்து சர்க்கரை இங்க உருவாகும். இந்த செல்கள் இணைப்பு மண்டலத்தை ஒட்டியே இருக்கறதால உருவாகும் சர்க்கரை அப்படியே சுலபமா இணைப்பு மண்டலத்துக்குள்ள திறந்து விட்டுடலாம்.

1. இலைக்குள்ள நுழையும் கார்பன் டை ஆக்சைடை பாஸ்போ ஈனால் பைருவேட் கார்பாக்சிலேஸ் எடுத்துட்டு போய் பைருவேட் கூட சேர்த்து அதை ஆக்ஸலோ அசிடேட் - OXALO ACETATE அப்படிங்கற 4 கார்பன்கள் இருக்கிற வேதிப்பொருளா மாத்தும். இந்த ஆக்ஸலோ அசிடேட் தான் C4 வினைகளில் உருவாகும் முதல் விளைப்பொருள். இது 4 கார்பன்கள் கொண்டது. அதனால தான் இதை C4 வினைகள் அப்படின்னு சொல்றோம். இந்த ஆக்ஸலோ அசிடேட் ஒடுக்கம் அடைஞ்சி, மாலேட் - MALATE அப்படிங்கற வேதிப்பொருளா மாறும். இந்த வினைகள் வரை இலையோட மீசொஃபில் செல்லில் நடக்கும். 
2. இங்க உருவான மாலேட் மீசொஃபில் செல்களை ஊடுருவி கடந்து போய் பண்டில் ஷீத் செல்களில் இருக்கிற RuBisCo - கிட்ட கார்பன்-டை-ஆக்சைடை குடுத்திட்டு திரும்ப பைருவேட்டா மாறி மறுபடியும் கார்பன்-டை-ஆக்சைடை எடுக்க வந்திடும்.

3. பண்டில்சீத் செல்களில் கார்பன்-டை-ஆக்சைடு மட்டும் இருக்கிறதால இப்போ RuBisCo - மீதி வினைகளை வழக்கம் போல செய்யும். இதுக்கு அப்புறம் இங்க நடக்கிறது வழக்கமான C3 வினைகள் தான்.

4. இதுல சில இடைநிலை வினைகள் இருக்கு. அதையும் சேர்த்து சொன்னா ஏற்கனவே குழம்பி இருக்கிற நீங்க இன்னமும் குழம்பிடுவிங்க. அதை விளக்கப்படத்துல சேர்த்து சொல்றேன். அங்க பார்த்துக்கலாம்.



இந்த வீடியோவுல ரொம்ப அழகா சொல்லியிருக்காங்க. இதையும் பார்க்கலாம். வெறும் விளக்கம் மட்டும் படிச்சா கண்டிப்பா குழப்பும். நான் எழுதி இருக்கிற விளக்கங்களோட,   விளக்கப்படங்களையும் பாருங்க. புரிஞ்சிக்க சுலபமா இருக்கும். பதிவு ரொம்ப நீளமா போயிட்டதால, இன்னைய பதிவை இதோட நிறுத்தறேன். உங்க சந்தேகங்களை பின்னூட்டத்துல சொல்லுங்க. அடுத்த பதிவும் C4 வினைகள் தான். அடுத்த பதிவுல சிந்திப்போம்.

NOTE: இந்த பதிவை வாசகர்கள் எவ்வளவு நாள் கழித்து படித்தாலும், பின்னூட்டம் போட தவற வேண்டாம். FACE BOOK பக்கத்திலும் இந்த பதிவுகள் காணக்கிடைக்கும்.

3 comments:

  1. உயிர் வாழணும் என்பதற்காக என்னவெல்லாம் நடக்கிறது - நான் மனித மனதை யோசித்துப் பார்த்தேன்...

    ஒளிச்சேர்க்கை செயலுக்கான பிரச்சனையின் விளக்கம் அருமை... படங்களுடன் பல விளக்கங்களுக்கு நன்றி...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. உங்களின் முக நூல் பக்கத்தில் இணைந்து விட்டேன்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார்
      எப்பவும் போல உங்களோடது தான் முதல் கருத்து
      FACE BOOK பக்கத்துல சேர்ந்ததுக்கும் நன்றி

      Delete