Showing posts with label தமிழில் பயோகெமிஸ்ட்ரி. Show all posts
Showing posts with label தமிழில் பயோகெமிஸ்ட்ரி. Show all posts

Sunday, January 5, 2014

SLEEP - THE BRAIN'S HOUSEKEEPER? - தூக்கம் - மூளையை சுத்தப்படுத்தும் வழிமுறையா...???

 மக்களே...!!!

ரொம்ப நாள் ஆச்சி, வலைப்பூ பக்கம் வந்து. முழுக்க முழுக்க நேரமின்மை, கூடவே கொஞ்சம் சோம்பேறித்தனம் தான் காரணம். ஆனா, தினம் தினம் நம்ம வலைப்பூவுக்கு வந்து போகும் நண்பர்களும், நம்ம உயிர்நுட்பம் - FACE BOOK பக்கத்தில் தினமும் சேரும் நண்பர்கள் எண்ணிக்கையும் பார்க்கும் போது எழுதாம இருக்கறதுல எனக்கே ஒரு குற்ற உணர்ச்சி எழ ஆரம்பிச்சிடுச்சி. ஸோ, இந்த புது வருசத்தில் நாம மறுபடியும் ஆட்டத்தை ஆரம்பிக்கிறோம்.

இப்போ, அனேகமா எல்லாருக்குமே, வேலை நிமித்தம் மட்டும் இல்ல, வேற சில காரணங்களால் நெடு நேரம் கண் விளிச்சிருக்கறது ஒரு வழக்கமா ஆயிடுச்சி. இந்த மாதிரியான தூக்கமின்மை எந்த மாதிரியான விளைவுகளை ஒரு உயிரினத்துக்கு ஏற்படுத்தும், தூக்கம் என்பது உண்மையிலேயே தேவையா அப்படிங்கறதை பத்தி ரொம்ப நாளாவே, நிறைய ஆராய்சிகள் நடந்திட்டு வருது. ஆனா முறையான பரிசோதனைகள் மூலம் யாரும் இதுவரை நிரூபிக்கல. ஆனா, இப்போ சில விஞ்ஞானிகள் அவர்களோட பரிசோதனை முடிவுகளை சமீபத்தில் அறிவிச்சிருக்காங்க. 

இது சம்பந்தமான விளக்கமான ஆராய்ச்சி கட்டுரை அமெரிக்காவை சேர்ந்த SCIENCE அப்படிங்கற அறிவியல் பத்திரிக்கையில வந்திருக்கு. அதை பத்தின இரு விரிவான பார்வை தான் இன்னைய பதிவு. 

மனிதன் அப்படின்னு இல்ல, உயிரினங்கள் குறிப்பிடத்தக்க அளவு பரிணாமம் அடைஞ்ச நாள்ல இருந்து பார்த்திங்கன்னா, ஒவ்வொரு உயிரினமும், தன்னோட அன்றாட வேலைகளான உணவு தேடல், பாதுகாப்பு, இனப்பெருக்கம் இதோட சேர்த்து தூக்கத்துக்கும் ஒரு குறிப்பிடத்தக்க அளவு நேரத்தை செலவிட்டுக்கிட்டே தான் இருக்கு. அந்த நேரம் கிட்டத்தட்ட தன்னோட வாழ்நாளின் மூன்றில் ஒரு பங்கு.

நெறைய விஞ்ஞானிகள் தூக்கம் அப்படிங்கறது ஒரு உயிரினத்துக்கு - ஞாபக திறமை, செல்களோட பல்வேறு வேலைகள், நோய் எதிர்ப்பு திறன் இன்ன பிற வேலைகள் சரியான முறையில் நடக்க தேவைப்படுவதாக சொல்லியிருந்தாலும், உலக அளவில் முறையான பரிசோதனைகள் மூலம் யாருமே இதுவரைக்கும் நிரூபணம் செய்யல.

முதன் முறையாக, அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள UNIVERSITY OF ROCHESTER - ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி Maiken Nedergaard மற்றும் அவரது குழுவினர் உலக அளவில் அனைத்து விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் தூக்கத்தின் உண்மையான தேவையை முழுமையா அறிவியல் பரிசோதனைகள் மூலம் நிரூபிச்சிருக்காங்க. தூக்கத்தின் முக்கியமான, உண்மையான தேவை - மூளை தன்னுடைய வேலையை செய்யும்போது உருவாகும் தேவையில்லாத, விஷத்தன்மையுள்ள வேதியியல் பொருட்களை வெளியேற்றுவதற்காக மட்டுமே. இந்த சுத்தப்படுத்தும் வேலை தூக்கத்தின் போது மட்டுமே முழுமையாக நடக்கும். தூக்கம் கெடுபவர்களின் மூலையில் இந்த வேதியியல் பொருட்கள் வெளியேற்றப்படாமல் தங்கிவிடும் அப்படின்னு நிரூபிச்சிருக்காங்க.

நம்ம உடலில் மூளையை தவிர, மத்த பாகங்களில் உருவாகும் தேவையில்லாத வேதிப்பொருட்களை சுத்தப்படுத்த இரத்த ஓட்ட மண்டலம், நிணநீர் மண்டலம் இந்த ரெண்டும் பயன்படும். உறுப்புகளின் செல்கள் வரைக்கும் இவை ஊடுருவி பாயும்போது செல்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு பொருட்கள் கரைந்து வெளியேற்றப்படும்.

ஆனால், மூளையில் இதற்குன்னு தனியா ஒரு சிஸ்டம் இருக்கு. நம்ம உடலின் முக்கிய உறுப்புகள் அப்படின்னு சொல்லப்பட கூடிய சிறுநீரகம், கல்லீரல், இதயம், மூளை எல்லாத்துக்கும் ஒரு பாதுகாப்பு உறை இருக்கும். இந்த பாதுகாப்பு உறைக்கும், இந்த உறுப்புகளுக்கும் இடையில ஒரு நீர்மம் பரவி இருக்கும். மூளையிலும் தான். இந்த நீர்மம் இந்த முக்கிய உறுப்புகள் நாம நடக்கும் போது, ஓடும்போது ஏற்படும் பல்வேறு அதிர்ச்சியினால் பாதிக்கப்படாமல் ஒரு SHOCK ABSORBER மாதிரி இருந்து பாதுகாக்கும்.

மூளையில் இதுமாதிரி இருக்க கூடிய நீர்மம் - CEREBROSPINAL FLUID - செரிப்ரோ ஸ்பைனல் ஃபுளூயிட் - CSF. இதுநாள் வரை இந்த நீர்மம்த்தோட வேலை வெறும் ஷாக் அப்சார்பர் மட்டும்தான்னு நெனச்சிட்டு இருந்தாங்க. இப்போ இவங்க இந்த நீர்மம் மூலமாத்தான் மூளை தன்னோட கழிவு வேதிப்பொருட்களை, மனிதன் தூங்கி ஓய்வில் இருக்கும் போது வெளியேத்துதுன்னு கண்டுபுடிச்சிருக்காங்க.


மனிதன் தூக்கத்தில் இருக்கும் போது மூளை வேலை பளு குறைஞ்சி ஓய்வில் இருக்கும் போது இந்த  CSF மூளையின் செல்கள் வரை ஊடுருவி போய் கழிவு வேதிப்பொருட்களை சுத்தபடுத்துது. அதுவே தூக்கம் கெடும்போது CSF ஊடுருவும் அளவு குறைஞ்சி சுத்தப்படுத்தும் வேலை நடக்காது. இந்த சுத்தப்படுத்தும் வேலை தடைப்பட்டால் விஷத்தன்மையுள்ள வேதிப்பொருட்கள் மூளையிலேயே தங்கி பல்வேறு நரம்பு செல்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்ப்பட காரணமாகும்.




இன்னைக்கு பதிவு உங்களுக்கு புடிச்சிருக்கும்னு நம்பறேன். படிச்சிட்டு உங்க கருத்துக்களை பின்னூட்டத்தில் சொன்னா சந்தோசப்படுவேன். மறுபடியும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

NOTE: இந்த பதிவை வாசகர்கள் எவ்வளவு நாள் கழித்து படித்தாலும், பின்னூட்டம் போட தவற வேண்டாம். FACE BOOK பக்கத்திலும் இந்த பதிவுகள் காணக்கிடைக்கும்.

Sunday, August 11, 2013

லிப்பிடுகள்: PHOSPHOLIPIDS - பாஸ்போ லிப்பிடுகள் - ஒரு விரிவான பார்வை

மக்களே...!!!


நம்ம வலைப்பூ நல்ல முறையில வளர்ந்திட்டு வருது. அதுலயும் உயிர்நுட்பம் FACE BOOK கணக்கிலும் கடந்த ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட 25 புது நண்பர்கள் சேர்ந்திருக்காங்க. நம்ம வலைப்பூவை நம்ம ஊர்லயும், வெளிநாடுகளில் இருந்தும் நெறைய பேரு வாசிக்கறாங்க. நான் எழுதினாலும் இல்லன்னாலும் தெனமும் ஒரு தடவையாவது பார்த்திடறாங்க. ரொம்ப சந்தோசமா இருக்கு. அதே சமயம் படிக்கிற வாசகர்கள் ஆர்வத்துக்கு ஏத்த மாதிரி நெறைய எழுத முடியல அப்படிங்கறது எனக்கு கொஞ்சம் வருத்தம் தான். முடிஞ்ச வரைக்கும் நெறைய எழுத முயற்சி பண்றேன்.


அப்புறம், நம்ம வலைப்பூவை நம்ம வலைப்பூ நண்பர் தமிழ் கணினி கல்லூரி  - இவர் இலங்கை  சேர்ந்தவர் சரியான முறையில் மறு கட்டமைப்பு செய்து குடுத்திருக்கார். தேவையானப்போ மறுபடியும் செய்து தரேன்னும் சொல்லியிருக்கார். பாருங்க. அவருக்கு மிக்க நன்றி. 

ஒரு செல் உயிர் வாழ தேவையான நாலு கரிம வேதிப்பொருட்கள்  பத்தி ரொம்ப நாள் முன்னாடி எழுத ஆரம்பிச்ச தொடர். அதுல, புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட்ஸ், நியூக்ளிக் அமிலங்கள் பத்தி சொல்லி முடிச்சாச்சி. லிப்பிடுகள் பத்தி எழுதிட்டு இருந்தேன். அப்புறம், அங்க இங்கன்னு சுத்தி எங்கெங்கயோ போனதுல, இந்த தொடர் இப்படியே நின்னு போயிடுச்சி. மறுபடியும் அடுத்தடுத்து உயிர் வேதியியல் பத்தி தொடர்ந்து எழுதலாம்ன்னு இருக்கேன். ஸோ, இன்னிக்கு பதிவுக்கு போகலாம்.



லிப்பிடுகள் - LIPIDS



கொழுப்பு அமிலங்கள், அதை சார்ந்த கரிம வேதிப்பொருட்கள், இதை தயாரிக்க தேவைப்படும் மற்ற கரிம வேதிப்பொருட்கள், இவற்றுள் தண்ணீரில் கரையாத, அதே சமயம் குளோரோபார்ம், ஈதர், அசிட்டோன் மற்றும் பென்சீன்  - CHLOROFORM, ETHER, BENZENE, ACETONE போன்ற கரிம கரைப்பான்களில் மட்டும் கரையக்கூடிய வேதிப்பொருட்களை லிப்பிடுகள் அப்படின்னு சொல்வோம்.





பாஸ்போலிப்பிடுகள் - PHOSPHOLIPIDS 

பாஸ்போலிப்பிடுகள் பத்தி ஒரு அறிமுகம் ஏற்கனவே குடுத்திருக்கேன். ஆனா, பாஸ்போலிப்பிடுகள் பத்தி ஒரு தனி பதிவே போடலாம். அவ்ளோ விஷயம் இருக்கு. பாஸ்போ லிப்பிடுகள்லிப்பிடுகளோட ஒரு வகை. இது கூட்டு லிப்பிடுகள் வகையை சேர்ந்தது. இதுல ஒன்னு அல்லது ரெண்டு பாஸ்பேட் குரூப் இருக்கும். நம்ம உடல்ல இருக்கிற பல வகை லிப்பிடுகள்ள இது தான் அளவுலயும், பயன்பாட்டுலயும் ரொம்ப ரொம்ப  அதிகம். ஒரு செல்லுக்குள்ள இருக்கிற அனைத்து சவ்வுகளும், செல் சவ்வு உட்பட அனைத்துமே பாஸ்போலிப்பிடுகளால் ஆனது. இருக்கிற எல்லா பாஸ்போ லிப்பிடுகளோட வேதிக்கட்டமைப்பும் ஒரே மாதிரியான அடிப்படை அமைப்புல தான் இருக்கும்.









ஒரு டை கிளிசரைடு + ஒரு பாஸ்பேட் மூலக்கூறுகள் + ஒரு  கரிம வேதி பொருள்











இதுல டை கிளிசரைடு அப்படிங்கறது  

                     ஒரு கிளிசரால் + 2 கொழுப்பு அமிலம்

இதில் நிறைவுற்ற, நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் அப்படின்னு எல்லா வகை கொழுப்பு அமிலங்களும் அடங்கும். 

கரிம வேதிபொருட்கள் பாஸ்போலிப்பிடை பொறுத்து வேற வேற இருக்கும். உதாரணம் கோலைன்  அல்லது லெசித்தின். எல்லா துணை என்சைம்கள் - CO-ENZYMES, கொழுப்பில் கரையக்கூடிய தன்மை உள்ள விட்டமின்கள் - விட்டமின் A, விட்டமின் - D, விட்டமின் - E, விட்டமின் - K, நிறமிகள் இதெல்லாம் பாஸ்போலிப்பிடுகளுக்கு சில உதாரணங்கள். இதனோட பொதுவான அமைப்பு நீரில் கரைய கூடிய புரோட்டீனை தலை மாதிரியும், நீரில் கரையாத கொழுப்பு அமிலங்களை வால் மாதிரியும் கொண்டிருக்கும். 

பாஸ்போலிப்பிடுகள் பொதுவா நம்ம செல்லுக்குள் தான் தயாரிக்கப்படுது. இதுக்குன்னே ஒரு வேதி முறை லிப்பிட் பயோசிந்தசிஸ் - LIPID BIO-SYNTHESIS - லிப்பிட் தயாரித்தல் அப்படிங்கற  ஒரு தனி வேதி முறை செல்லுக்குள்ள இருக்கு. அதை பத்தி பின்னாடி ஒரு தனிப்பதிவுல பார்க்கலாம்.

பாஸ்போ லிப்பிடுகள் தன்னோட கட்டமைப்பில் ரெண்டு பகுதிகளை கொண்டது. 1. உருண்டையான கோள வடிவ தண்ணீரில் கரையக்கூடிய தன்மை  உடைய தலை பகுதி 2. நீளமான நெறைய கார்பன்களை கொண்ட, தண்ணீரில் கரையும் திறன் இல்லாத செயின் பகுதி

இதனால், இது பாதி தண்ணீரில் கரையும் மற்றும் கரையாத தன்மை உடையது. இதை அறிவியல் பூர்வமா - ஆம்பிபதிக் - AMPHIPATHIC NATURE அப்படின்னு சொல்வாங்க. இதன் மூலம் இது லிப்பிட் இரட்டை படல அமைப்பை உருவாக்க முடியும். இரட்டை படல அமைப்பை உருவாக்க முடியும் அப்படிங்கறதால செல்லோட செல் சவ்வு, செல் நுண்ணுறுப்புகள் சுத்தி இருக்கிற சவ்வுகள் எல்லாமே பாஸ்போ லிப்பிடுகளால் ஆனது.


பாஸ்போலிப்பிடுகளின் அடிப்படை வேதிக்கட்டமைப்பு - BASIC CHEMICAL  STRUCTURE OF PHOSPHOLIPIDS

பாஸ்போலிப்பிடுகளோட வேதிக்கட்டமைப்பில் அடிப்படையா மொத்தம் நான்கு விதமான வேதிப்பொருட்கள் இருக்கு. அதுல முக்கியமானது கிளிசரால். கிளிசரால் மூணு கார்பன்கள் கொண்ட ஒரு ஆல்கஹால் வகையை சார்ந்த வேதிப்பொருள். வேதிக்கட்டமைப்போட அடிப்படையா அமைந்தது. இந்த அடிப்படையை வெச்சிதான் பாஸ்போலிப்பிடுகளை வகைப்படுத்தறாங்க.





உதாரணத்துக்கு, கிளிசராலை அடிப்படையா கொண்ட பாஸ்போலிப்பிடுகளை கிளிசரோ பாஸ்போலிப்பிடுகள் அப்படின்னும், ஸ்பிங்கால் அப்படிங்கற ஆல்கஹாலை அடிப்படையா கொண்ட பாஸ்போலிப்பிடுகளை பாஸ்போ ஸ்பிங்கோசைடுகள் அப்படின்னும், இனோசிடால் அப்படிங்கற ஆல்கஹாலை அடிப்படையா கொண்ட பாஸ்போலிப்பிடுகளை பாஸ்போ இனோசிடால் அப்படின்னும் சொல்வாங்க.


பாஸ்போலிப்பிடுகளின் பல்வேறு வகைப்பாடு - CLASSIFICATION   OF PHOSPHOLIPIDS

 

பாஸ்போலிப்பிடுகள் மொத்தம் மூணு வகையா வகைப்படுத்தி வைக்கப்பட்டு இருக்கு.
 

கிளிசரோ பாஸ்போலிப்பிட்ஸ் - GLYCERO PHOSPHOLIPIDS - கிளிசராலை அடிப்படையாகக் கொண்ட பாஸ்போலிப்பிடுகள் - GLYCEROL-ALCOHOL BASED PHOSPHOLIPIDS

கிளிசரோ பாஸ்போலிப்பிடுகள் என்பது அதனோட வேதிக்கட்டமைப்பு கிளிசரால் அடிப்படையா வெச்சி அமைஞ்சது. அடிப்படையா கிளிசராலும், அதனோட சில கொழுப்பு அமிலங்களும், அதனோட பாஸ்பேட் குரூப்பும் சேர்ந்தது. இந்த மூணு பொதுவான வேதிப்பொருட்களோட, ஒரு தனி கரிம வேதிப்பொருளும் இருக்கும். இந்த தனி வேதிப்பொருளை பொறுத்து இதுலயும் சில வகைகள் இருக்கு. இதுல இந்த வகை பாஸ்போலிப்பிடுகள் தான் ஒரு செல்லுல அதிகம். 






 

PHOSPHATIDIC ACID - பாஸ்பாடிடிக் ஆசிட்

பாஸ்பாடிடிக் ஆசிட் அப்படிங்கறது பாஸ்போலிப்பிடோட கிளிசரோ பாஸ்போலிப்பிட் வகையில ஒரு வகை. இதுல பொதுவான கட்டமைப்பான கிளிசரால், ரெண்டு கொழுப்பு அமிலம், ஒரு பாஸ்பேட் குரூப் இதெல்லாம் சேர்ந்தது இந்த பாஸ்பாடிடிக் ஆசிட். வழக்கமா இதுல இருக்கிற ரெண்டு முக்கியமான கொழுப்பு அமிலங்கள் பாமிடிக் ஆசிட் - PALMITIC ACID மற்றும் ஸ்டியரிக் ஆசிட் - STEARIC ACID. இது செல்லில் நெறையவெல்லாம் இருக்கிற லிப்பிட் எல்லாம் ஒன்னும் கிடையாது. ஆனா, லிப்பிட் உருவாதல் நிகழ்வுல இது முக்கியமான இடைநிலை வேதிப்பொருள்.  


PHOSPHATIDYLCHOLINE - பாஸ்பாடிடைல் கோலைன்

இது இன்னும் ஒரு வகை. பாஸ்பாடிடிக் ஆசிட்ல பாஸ்பேட் குரூப் இருக்கிற இடத்துல கோலைன் அப்படிங்கற ஒரு வேதிப்பொருள் இருக்கும். மத்தப்படி இங்கயும் கிளிசரால், ரெண்டு கொழுப்பு அமிலங்கள் எல்லாம் பொதுவாக இருக்கும். பாஸ்பாடிடைல் கோலைன் தான் செல் சவ்வோட முக்கியமான பாஸ்போலிப்பிட் வகை. நமக்கு இந்த பாஸ்போலிப்பிட் நமக்கு முட்டையோட மஞ்சள் கரு, சோயா இதுல இருந்து நெறைய கிடைக்கும். 


பாஸ்பாடிடைல் இனோசிடால் - PHOSPHATIDYL INOSITOL


இது அடுத்த வகை. எப்படி மேல இருக்கிற ரெண்டு வகையில பாஸ்பேட் குரூப், கோலைன் வேதிப்பொருட்கள் இருக்கோ அதே மாதிரி தான் இனோசிடால் வேதிப்பொருள் இந்த வகையில இருக்கு. இந்த பாஸ்பாடிடைல் இனோசிடால் செல் சவ்வோட சைட்டோபிளாசம் பக்கத்துல நெறைய இருக்கு. 


பாஸ்பாடிடைல் எத்தனாலமைன் - PHOSPHATIDYL ETHANOLAMINE

இந்த வகையும் செல் சவ்வுல இருக்கிற பாஸ்போலிப்பிடோட இன்னும் ஒரு வகை. இது வரைக்கும் இருக்கிற எல்லா பாஸ்போலிப்பிடுகள்ள 25 சதவிதம் இந்த பாஸ்பாடிடைல் எத்தனாலமைன் தான். மனித உடலின் நரம்பு மண்டலத்தில் முக்கியமான வேதிப்பொருள், மூளையோட வெள்ளைப்பகுதி எல்லாமே இந்த வகை தான். 



பாஸ்போஇனோசிடைடுகள் - PHOPHOINOSITIDES - இனோசிடைடுகள் அடிப்படையாக கொண்ட பாஸ்போலிப்பிடுகள் - INOSITOL BASED PHOSPHOLIPIDS

பாஸ்போஇனோசிடைடுகள் பாஸ்போலிப்பிடுகளோட இன்னும் ஒரு வகை. இந்த பாஸ்போலிப்பிடுகள் முந்தைய வகையில் கிளிசரால் எப்படி அடிப்படையா இருந்ததோ, அது மாதிரி இந்த வகையில இனோசிடால் - INOSITOL வேதிக்கட்டமைப்பில் அடிப்படையா இருக்கும். இந்த வகை லிப்பிடுகள் செல் சிக்னலிங் - CELL SIGNALLING அதாவது, செல்லுக்குள்ள செய்தியை கடத்தும் வேலையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வகை லிப்பிடுகள் செல் சவ்வின் சைட்டோபிளாசம் பக்கத்தில் இருக்கும்.  


இதுல மொத்தம் மூணு வகை இருக்கு. ஒன்னு, பாஸ்பாடிடைல் இனோசிடால் நான் ஏற்கனவே மேல சொல்லியிருக்கேன். அந்த பாஸ்பாடிடைல் இனோசிடால் கூட ஒன்னு, ரெண்டு மற்றும் மூணு பாஸ்பேட் குரூப்கள் சேர்ந்த கரிம வேதிப்பொருட்கள் இதுக்குள்ள இருக்கிற இதனோட துணை வகைகள்.






 

இந்த லிப்பிடுகள் சிக்னலிங் வேலை, முக்கியமா செல் சிக்னல், லிப்பிட் சிக்னல், உருவான புரோட்டீன்களை, குறிப்பாக செல் சவ்வு புரோட்டீன்களை செல் சவ்வுக்கு கொண்டு சேர்க்கும் வேலை இது எல்லாவற்றிலும் இதனோட பங்கு மிக மிக அதிகம்.   


PHOSPHATIDYL INOSITOL PHOSPHATE - பாஸ்பாடிடைல் இனோசிடால் பாஸ்பேட் - பாஸ்போ இனோசிடாலோட ஒற்றை பாஸ்பேட் குரூப் சேர்ந்தது. 

PHOSPHATIDYL INOSITOL DIPHOSPHATE - பாஸ்பாடிடைல் இனோசிடால் - டை - பாஸ்பேட்  - பாஸ்போ இனோசிடாலோட இரட்டை பாஸ்பேட் குரூப் சேர்ந்தது.

PHOSPHATIDYL INOSITOL TRIPHOSPHATE - பாஸ்பாடிடைல் இனோசிடால் -டிரை-பாஸ்பேட்  - பாஸ்போ இனோசிடாலோட மூன்று பாஸ்பேட் குரூப் சேர்ந்தது.



PHOSPHOSPHINGOSIDES - பாஸ்போஸ்பின்கோசைட்ஸ் - ஸ்பிங்கால் அடிப்படையாகக் கொண்ட பாஸ்போ லிப்பிடுகள் - SPINGOL BASED PHOSPHOLIPIDS

இதுவும் சிக்னலிங் வேலையை செய்யக்கூடிய லிப்பிடுகள். அதுலயும் செல் மேற்பரப்பு ரிசப்டார்கள் இந்த வகை லிப்பிடுகள் தான். இதுல மூன்று வகைகள் உண்டு. 


செராமைடு பாஸ்பாரைல் கோலைன் - CERAMIDE PHOSPHORYL CHOLINE 






செராமைடு பாஸ்பாரைல் எத்தனாலமைன் - CERAMIDE PHOSPHORYL
ETHANOLAMINE 




 செராமைடு பாஸ்பாரைல் கிளிசரால் - CERAMIDE PHOSPHORYL GLYCEROL


பாஸ்போலிப்பிடுகளின் சில முக்கிய பண்புகள்

பாஸ்போலிப்பிடுகளுக்கு ஆம்பிபதிக் பண்பு - AMPHIPATHIC NATURE   இருக்கு அப்படின்னு ஏற்கனவே சொல்லியிருக்கேன். இந்த பண்பு இருக்கறதால இதால லிப்பிட் இரட்டை படல அமைப்பு ஏற்படுத்த முடியும். அதனால தான் இந்த எல்லா சவ்வுகளிலும் செல் சவ்வு உட்பட பாஸ்போ லிப்பிடுகளே அதிகம் இடம் பிடிச்சிருக்கு. இவைகள் மூலம் உருவாகிற ஒரு படல அமைப்பு மத்த லிப்பிட் பொருட்கள் சுலபமா ஊடுருவி கடக்க முடியும்.





செல் சவ்வின் வழியே ஊடுருவி கடத்தல் 

அதுவே இந்த லிப்பிடுகள் உருவாக்கும் இரட்டை படல அமைப்பு சுலபமா ஊடுருவி கடக்க முடியாது. இது தேர்ந்தெடுத்து கடக்க முடியும். அதாவது, SEMI PERMEABLE MEMBRANE. அதாவது, தேர்ந்தெடுத்து கடத்தல் அப்படின்னா சில வேதிப்பொருட்கள் மட்டுமே கடக்க முடியும். அதுலயும் லிப்பிடுகளில் கரையும், கரையக்கூடிய பொருட்கள், தண்ணீர், ஆல்கஹால் இதெல்லாம் கடக்க முடியும். அயனிகள் கடக்கவே முடியாது.




 

ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் போன்ற வாயுக்களும், தண்ணீர், இண்டோல், கிளிசரால் மாதிரியான சிறு தண்ணீரில் கரையும் மூலக்கூறுகளும் சுலபமாக கொழுப்பு இரட்டை படல அமைப்பு செல் சவ்வை சுலபமாக கடக்க முடியும். குளுகோஸ், சுக்ரோஸ் மாதிரியான சர்க்கரை மூலக்கூறுகளும், அயனிகளும் கடக்க முடியாது. அதற்கான தனித்தனி கடத்தி புரோட்டீன்கள் இருக்கு. 

ஸோ, மக்களே பாஸ்போலிப்பிடுகள் பத்தி எனக்கு தெரிஞ்ச விசயங்களை ஓரளவுக்கு இங்க தொகுத்திருக்கேன். உங்களுக்கு புடிக்கும், புரியும் அப்படின்னு நெனக்கிறேன். படிச்சிட்டு உங்க கருத்துக்களை பின்னூட்டத்துல சொல்லுங்க. அடுத்த பதிவுல சிந்திப்போம்.

NOTE: மக்களே, எப்போது இந்த பதிவை படித்தாலும் தவறாமல் பின்னூட்டம் போட தவற வேண்டாம். இந்த பதிவுகள் உயிர்நுட்பம் FACE BOOK பக்கத்திலும் காண கிடைக்கும்.

Wednesday, July 31, 2013

மனிதனின் முன்னோர்கள் - ஒரு பரிணாம வளர்ச்சியின் கதை...!!!


மக்களே...!!!

அடுத்த பதிவுக்கு தயார் பண்ணிட்டு இருந்தேன். தற்செயலா FACE BOOK-ல இந்த வீடியோ பார்த்தேன். குரங்கு இனத்தில் இருந்து மனித முகம் எப்படி பரிணாமம் அடைஞ்சிருக்கலாம் அப்படின்னு கிராபிக்ஸ் பண்ணியிருக்காங்க.  பார்க்க ரொம்ப நல்லா வேற இருந்தது. அதான், இங்க பகிர்ந்திருக்கேன். கிட்டத்தட்ட 7 மில்லியன் வருசத்துல நடந்த மாற்றங்களை அப்படியே தத்ரூபமா பண்ணியிருக்காங்க. 



பார்த்து என்ஜாய் பண்ணுங்க.

NOTE: இந்த பதிவை வாசகர்கள் எவ்வளவு நாள் கழித்து படித்தாலும், பின்னூட்டம் போட தவற வேண்டாம். FACE BOOK பக்கத்திலும் இந்த பதிவுகள் காணக்கிடைக்கும்.

Saturday, July 20, 2013

சில சுவாரஸ்யங்கள்: SEVEN EVOLUTIONARY LEFTOVERS IN THE HUMAN BODY- மனித உடலில் பரிணாமத்தின் மிச்சங்கள் - 2

மக்களே...!!!

போன சில சுவாரஸ்யங்கள் பதிவு நம்ம வாசகர்கள் நெறைய பேருக்கு புடிச்சிருந்திருக்கு  போல. FACEBOOK பக்கத்துலயும், நம்ம வலைப்பூவுக்கும் நெறைய பேர் வந்து போயிருக்காங்க. ரொம்ப சந்தோசம்.  மனித உடலில் இருக்கிற பரிணாமத்தோட மிச்சங்கள் பத்தி ஒரு பதிவை இந்த பகுதிக்கு நான் எழுதி இருந்தேன். அந்த பதிவை வெளியிட்டதுக்கு அப்புறமா, இன்னும் சில தகவல்கள் காண கிடைச்சது. அப்போ பரிணாமம் தொடருக்காகவும், கேல்வின் சுழற்சி வினைகளுக்காகவும் எழுதிட்டு இருந்ததால, இதை கொஞ்ச நாள் தள்ளி வெச்சிருந்தேன். ஸோ, இன்னைக்கு பதிவு மனித உடலில் பரிணாமத்தின் மிச்சங்கள் பதிவோட ரெண்டாம் பகுதி. ஸோ, இன்றைய பதிவுக்கு போகலாம்.

இந்த பதிவோட முதல் பகுதியில மனித உடலில் பரிணாம வளர்ச்சியோட அடையாளமா இன்னமும் இருக்கிற சில உறுப்புகளை பத்தி சொல்லியிருந்தேன். அதுல ரெண்டு முக்கியமான உறுப்புகள் விட்டு போச்சி.

மூன்றாவது இமை - PLICA SEMILUNARIS OF CONJUNCTIVA - THIRD EYELID 

புறா மாதிரியான சில பறவைகள், தவளை, ஆந்தை இதுக்கெல்லாம் கண்ணுல மூணாவதா ஒரு கண் இமை இருக்கறதை நீங்க கவனிச்சிருக்கலாம். கண்ணோட மேல் மற்றும் கீழ் இமை தவிர, மூணாவதா ஒரு சவ்வு மாதிரியான அமைப்பு, பறவைகள் பறக்கும் போது கண்ணை பாதுகாக்க தன்கிட்ட வெச்சிருக்கு. அந்த மூணாவது இமை இன்னமும் நமக்கு இருக்கு அப்படிங்கறதை உங்களால நம்ப முடியிதா...? ஆனா, நம்பித்தான் ஆகனும். இன்னும் நமக்கு இருக்கு, ஆனா செயல்பாடு இல்லாமல். இமை அமைஞ்சிருக்கிற இடமும், அந்த இமை சுருங்கி, ஒரு செயல்படாத உறுப்பா, நம்ம கண்ணோட ஓரத்தில் அமைஞ்சிருக்கு. கீழ படத்தை பாருங்க.

 
NECK RIB or CERVICAL RIB - கழுத்துக்கு பக்கத்தில் ஒரு அதிகப்படியான நெஞ்செலும்பு 

இந்த பகுதி இதுவரைக்கும் நானும் கேள்விப் படாத ஒன்னு. உடலியல் படிச்ச காலத்தில் கூட யாரும் இதை பத்தி சொன்னதாவோ, வேற எங்கயும் படிச்சதாவோ ஞாபகமே இல்லை.  நெஞ்செலும்புகள் அப்படிங்கறது, பின்புறமா முதுகுத் தண்டில் இருந்து, இடது வலது அப்படின்னு இரு புறமும் வந்து, முன்புறமாக இதயத்தையும்,நுரையீரலையும் சுத்தி, ஒரு கூடு மாதிரியான தோற்றத்தில் அமைஞ்சிருக்கும். இதனுடைய வேலை, இதயத்தையும், நுரையீரலையும்  பாதுகாப்பது. வழக்கமா மனிதர்களுக்கு 12 நெஞ்செலும்புகள்  இருக்கும்.


ஆனால், 200- ல் ஒருவருக்கு 13-வதா ஒரு நெஞ்செலும்பு அதிகப்படியா இருக்கு. மருத்துவத்தில் இதை CERVICAL RIB SYNDROME அப்படிங்கற பேர்ல, மனிதர்களில் இதை ஒரு நோயா நம்பப்படுது அப்படின்னாலும், இது ஊர்வன விலங்குகளோட மிச்சம் அப்படின்னு விஞ்ஞானிகள் நம்பறாங்க. ஏன்னா, ஊர்வன விலங்குகளுக்கு இது மாதிரி கழுத்துக்கு பக்கத்தில் இதே மாதிரி ஒரு அமைப்பு இருக்கு. அதுக்கு அப்புறம் இது மனிதர்களில் இருக்கு. 

ஓகே மக்களே...!!! உங்க எல்லாருக்கும் இந்த பதிவும் புடிக்கும்னு நம்பறேன். கடந்த ரெண்டு நாள்ல மட்டும் 12 நண்பர்கள் FACEBOOK பக்கத்தில் சேர்ந்திருக்காங்க. அதுல நெறைய பேர் ஆசிரியர்கள். ரொம்ப சந்தோசமா இருக்கு. படிச்சிட்டு உங்க கருத்துக்களை பின்னூட்டத்துல சொல்லுங்க. மறுபடியும் அடுத்த பதிவில் சிந்திப்போம். 

NOTE: இந்த பதிவை வாசகர்கள் எவ்வளவு நாள் கழித்து படித்தாலும், பின்னூட்டம் போட தவற வேண்டாம். FACE BOOK பக்கத்திலும் இந்த பதிவுகள் காணக்கிடைக்கும்.

Sunday, July 14, 2013

பரிணாமம்: புதிய பூமியில் நிலவிய சூழ்நிலை - ATMOSPHERE OF EARLY EARTH - 3

மக்களே...!!!   
அடுத்த பதிவுல சந்திக்கிறோம். நம்ம பரிணாமம் தொடர்ல கொஞ்சம் அதிகமாவே இடைவெளி விழுந்திடுச்சி. மத்த தொடர்கள் மாதிரி இல்லாம பரிணாமம் தொடருக்காக கொஞ்சம் அதிகமாவே படிக்க வேண்டியிருக்கு. நெறைய தேட வேண்டியிருக்கு. அதனால இந்த இடைவெளி தவிர்க்க முடியாததா ஆயிடுச்சி. நாம ஒரு விஷயத்தை பத்தி முழுசா தெரிஞ்சிக்கணும் அப்படின்னா, அதைப்பத்தின அடிப்படையை மொதல்ல தெரிஞ்சிக்கணும். அப்போதான் அதைப்பத்தின மேலதிக விவரங்கள் போகப்போக நமக்கு சுலபமா புரியும்.

அந்த வகையில ஒரு முக்கியமான கேள்வியை உங்க முன்னால வெக்கிறேன். இப்போ, தற்கால உலகத்துல இருக்கிற எல்லா உயிர்களுக்கும் அடிப்படை - நீர், கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன். ஒரு செல்லை எடுத்து அதனோட புரோட்டீன்கள், லிப்பிட், நியூக்ளிக் அமிலம், கார்போஹைட்ரேட் எல்லாத்தையும் எடுத்து அதனோட கட்டமைப்பை பார்த்தா, இந்த நாலு வேதிப்பொருட்கள் தான் திரும்ப திரும்ப அமைஞ்சிருக்கிறது தெரியும். இந்த பூமியில எவ்வளவோ தனிமங்கள் (தனிம வரிசை அட்டவணைப்படி 118 தனிமங்கள் இதுவரைக்கும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு) அதனால உருவாகியிருக்கிற பல ஆயிரக்கணக்கான கூட்டு வேதிப்பொருட்கள் அப்படின்னு பல இருந்தும், ஏன் இந்த நாலு தனிமங்கள் மட்டும் செல்லை, ஒரு உயிரினத்தை முழுமையா ஆக்கிரமிச்சிருக்கு...?

இந்த கேள்வியும், அதுக்கான பதிலும் தான் பரிணாமம் தொடருக்கான அடுத்த பதிவு. அதுக்காக இது ஒன்னும் பதில் சொல்ல முடியாத கேள்வியோ அல்லது புரிஞ்சிக்க முடியாத கேள்வியோ இல்லை. வெகு சுலபமா இந்த உயிர் பொருட்கள் புரோட்டீன், லிப்பிட், கார்போஹைட்ரேட் இது எல்லாம் உருவான காலம், அப்போ இருந்த சூழ்நிலை இதை பத்தி தெரிஞ்சிக்கிட்டாலே போதுமானது. இதை தான் விளக்கமா இப்போ பார்க்க போறோம். ஸோ, இன்னைக்கு பதிவுக்கு போகலாம். 

 

 

 

புதுசா உருவான பூமி அதனோட வெப்பம் எல்லாம் குறைஞ்சி, பூமி குளிர்ந்து தண்ணீரும் உருவானதுக்கு அப்புறமா இருந்த அந்த காலகட்டம். இது தான் இப்போ இருக்கிற பூமிக்கு அடிப்படை. அது வரைக்கும் உருவாகி இருந்த சுற்றுபுற சூழல் எப்படி இருந்ததுன்னா, பூமி முழுக்க தண்ணீர் இருந்தது. நெறைய எரிமலைகள், ஏன்னா மேற்புறம் பூமி தண்ணீரினால குளிர்திருந்தாலும், உள்ளுக்குள்ள இன்னும் நெருப்பு, வெப்பம் அப்படியேதான் இருந்தது. மேற்புறம் குளிர்ந்து இருகிப்போனதால நெருப்பு குழம்பும், உருவான வாயுக்களும் வெளியேற முடியாம உள்ளேயே சேர்ந்து சேர்ந்து அழுத்தம் தாங்க முடியாம அங்கங்க எரிமலைகளா உருவாகி இருந்தது. அந்த எரிமலைகளில் இருந்து வாயுக்கள் வெளி வந்திட்டு இருந்தது. 

பூமியோட ஆரம்ப காலத்தை ரெண்டு பகுதிகளா பிரிக்கலாம். 

1. பூமிக்குன்னு தனியா நிலா உருவாகறதுக்கு முன் 
2. நிலா உருவாகறதுக்கு பின் 

நிலா உருவாகறதுக்கு முன்னாடி பூமியில வாயு மண்டலம் எல்லாம் தனியா கிடையாது. இப்போ இருக்கிற வாயு மண்டலம் எப்படி உருவானது அப்படின்னு விஞ்ஞானிகள் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காங்க. அப்படி பண்ணும் போது அவங்க கண்டுபிடிச்சது என்னன்னா, வானவெளியில் கோள்கள் நட்சத்திரங்கள் மாதிரியே வாயு கோளங்களும் இருக்கு. சில கிலோமீட்டர்கள் சுற்றளவுக்கு வாயுக்களை உள்ளடக்கின சோலார் நெபுலா - SOLAR NEBULA அப்படிங்கற இடங்கள் இவை. புதுசா பூமி உருவானதும், அதனுடைய புவி ஈர்ப்பு விசையினால பூமிக்கு பக்கத்துல இருந்த சோலார் நேபுலாவுல இருந்து சில வாயுக்களை தன்னை நோக்கி ஈர்த்து இருக்கலாம் அப்படின்னு கண்டு புடிச்சிருக்காங்க. அப்படி ஈர்த்த சில வாயுக்கள் தான் - ஹைட்ரஜன், நைட்ரஜன். இப்படியே பூமி பல ஆயிரக்கணக்கான வருடங்கள் இருந்தது. 

அப்பறமா, நிலா உருவானதுக்கு அப்புறமா, பூமியினுடைய பூமியினுடைய ஈர்ப்பு விசையில பல மாற்றங்கள் ஏற்பட்டது. நிலநடுக்கம் உண்டாச்சி. பல எரிமலைகள் உருவாச்சி. கார்பன் டை ஆக்சைடு - CARBON DIOXIDE (CO2), நைட்ரஜன் - NITROGEN (N2), ஹைட்ரஜன் சல்பைட் - HYDROGEN SULFIDE (H2S), மற்றும் சல்பர் டை ஆக்சைடு - SULFUR DIOXIDE (SO2) எல்லாம் உருவாச்சி. ஹைட்ரஜன் பல மாற்றகளுக்கு உண்டாக, அதோட வேற சில நட்சத்திரங்களில் இருந்து உறைந்த தண்ணீர் மூலக்கூறுகள் பூமிக்கு வந்து சேர அப்படியே தண்ணீரும் உருவாச்சி.  

இப்போ பூமியில பார்த்திங்கன்னா, தண்ணீர் (H2O), கார்பன்-டை-ஆக்சைடு (CO2), நைட்ரஜன் (N2), கொஞ்சமான அளவு கார்பன் மோனாக்சைடு (CO) மற்றும் ஹைட்ரஜன் (H2) அதோட மேற்சொன்ன வாயுக்கள் எல்லாம் இருந்தது. கார்பன்-டை-ஆக்சைடு, தண்ணீர் எல்லாம் இருந்தாலும் ஆக்சிஜன் மட்டும் தனியா கெடையாது.

மேற்சொன்ன வேதிப்பொருட்கள் எல்லாம் தண்ணீர்ல கரையக்கூடியது. கடுமையான வெப்பம் தணிந்து, பூமி குளிரவும் பூமியில மழை பெய்ய ஆரம்பிச்சது, கடுமையான இடி மின்னலோட. அதுவும் தொடர்ந்து, இடைவிடாமல் பல ஆண்டுகள். பூமி முழுக்க தண்ணீர் பரவி கடல்கள் தோன்றினது. பூமியினோட மேற்பரப்புல பரவி இருந்த வாயுக்கள், வேதிப்பொருட்கள் எல்லாம் தண்ணீர்ல கரைந்திருந்ததாலயும், கடுமையான வெப்பமும், இடைவிடாத மின்னல் மூலம் கெடைச்ச சக்தியினாலயும் இவைகள் எல்லாம் ஒன்னுக்கொன்னு வினை புரிய ஆரம்பிச்சது. அதன் மூலமா கிடைச்ச புது வேதிப்பொருட்கள் தான் மீத்தேன், அம்மோனியா இதெல்லாம். இதுவும் தண்ணீர்ல கரையக்கூடியதே. ஆனா, இந்த படிநிலைகள் ஒவ்வொன்னும் நடக்க தோராயமா பல நூறு வருடங்கள் எடுத்திருக்கு. அப்போ இருந்த ஆரம்ப கட்ட வேதிப்பொருட்கள் வெறும் நைட்ரஜன், ஹைட்ரஜன் மற்றும் கார்பன் அதோட தண்ணீர். அதனால தான் ஆரம்ப காலத்தில் உருவான வேதிப்பொருட்கள் எல்லாத்துலயும் மீத்தேன்( CH4), அம்மோனியா(NH3), ஹைட்ரஜன் சயனைட்(HCN) வெறும் கார்பன், ஹைட்ரஜன் ஆக்சிஜன் மட்டும் தான் இருந்தது. அந்தக் காலத்துல தனியா ஆக்சிஜன் இல்லேன்னாலும் தண்ணீர் மூலக்கூறுகள் வேதி மாற்றம் அடைஞ்சி இந்த வினைகளுக்கு தேவையான ஆக்சிஜன் கெடைச்சிட்டு இருந்தது. 

இப்போ பூமியில இருந்த சூழ்நிலை - கடல் தண்ணீர் அதாவது உப்பு இல்லாம, ஹைட்ரஜன், கார்பன், நைட்ரஜன் அதோட அம்மோனியா, மீத்தேன், ஹைட்ரஜன் சயனைட், அப்புறம் இதெல்லாம் தண்ணீர்ல கரைஞ்ச கலவை. உதாரணத்துக்கு 1994 - ல ஷூமேக்கர் லெவி - 9 அப்படிங்கற ஒரு வால் நட்சத்திரம் வியாழன் கிரகத்து மேல மோதுச்சி. நம்ம எல்லாருக்கும் நல்லா ஞாபகம் இருக்கும். அப்போ கிளம்பின வாயுக்களை சேகரம் பண்ணி விஞ்ஞானிகள் சோதனை செய்து பார்த்ததுல அதுல இருந்த வேதிப்பொருட்கள் என்னென்ன தெரியுமா  -

ஹைட்ரஜன் சயனைட் - HCN, அசிட்டிலீன் - C2H2, எத்திலீன் - C2H4, சல்பஃர் - S2, சீசியம் - CS, கார்பன் டை சல்பைட் - CS2, கார்போனைல் சல்பைட் - OCS மற்றும் கார்பன் டை ஆக்சைடு - CO2

 அடுத்த படி நிலை - சிறு ஒற்றை தனிமங்கள் நிலையில இருந்து சிறு கூட்டு மூலக்கூறுகள் உருவானதும் அடுத்து சில நூறு வருசங்கள் அப்படியே போக, இவை எல்லாம் தனக்குள்ள வினை புரிய ஆரம்பிச்சது. அதுல இருந்து நமக்கு கிடைச்சது தான் ஒரு உயிருள்ள செல் உருவாக தேவையான அமினோ அமிலங்கள், கார மூலக்கூறுகள், சிறி சிறு கார்பன் செயின்கள் எல்லாம். ஆனா, அதுக்காக மிக சிக்கலான கட்டமைப்பு உள்ள வேதி பொருட்கள் எல்லாம் ஒன்னும் உருவாகல. எல்லாமே வெகு அடிப்படை நிலையில இருக்கிற மூலக்கூறுகள் மட்டுமே உருவாகி இருந்தது. பின்னாளில் அதை அடிப்படையா வெச்சி தான் சிக்கலான வேதி மூலக்கூறுகள் உருவாகி இருக்கலாம்.  இந்த காலகட்டத்தை, அதுவும் முதல் வேதிப்பொருள் உருவான காலகட்டத்தில் இருந்து ஒரு செல் உருவாக தேவையான அமினோ அமிலங்கள் முதலான வேதிப்பொருட்கள் உருவான கால கட்டம் வரை இருந்த காலத்தை CHEMICAL EVOLUTION PERIOD - வேதியியல் ரீதியான பரிணாமம் அடைந்த காலம் அப்படின்னு சொல்றாங்க.  

MILLER - UREY EXPERIMENT - மில்லர் - யூரே பரிசோதனை 

அந்த காலத்தில் ஒரு செல் எப்படி உருவாகி இருக்கும் அப்படிங்கறதை விட எதுவுமே இல்லாத இந்த பூமியில செல் உருவாவதற்கான வேதிப்பொருட்கள் எங்கே இருந்து கெடைச்சிருக்கும் அப்படிங்கறது தான் முக்கியமான கேள்வியா இருந்திருக்க முடியும். ஏன்னா, எல்லா மூலப்பொருட்களும் சரியான முறையில கெடைச்சிட்டா தேவையானதை யாரு வேண்டுமானாலும், எப்படியாவது உருவாக்கிக்க முடியும். ஆனா மூலப்பொருட்களே இல்லாம எப்படி ஒரு விஷயத்தை உண்டாக்க முடியும் ? நம்மக்கிட்ட இரும்பு இருந்தா, அதை வெச்சி என்ன வேணும்ன்னாலும் இயந்திரங்களை வெச்சோ, அல்லது சாதாரண பட்டறையில வெச்சோ கூட உருவாக்கிக்கலாம். அதுவே இரும்பையே அதற்கான  இரும்பு தாதுக்களே இல்லாத நிலைமையில உருவாக்கணும் அப்படின்னா எவ்வளவு கடினமான விஷயம்? 

ஸோ, ஒரு செல் உருவானது எப்படின்னு ஆராயறது இரும்புல இருந்து அரிவாள் செய்யிறது எப்படின்னு தேடற மாதிரி. அதுவே செல் உருவாக தேவையான அமினோ அமிலங்கள், நைட்ரஜன் கார மூலக்கூறுகள், கொழுப்பு அமிலங்கள் இதெல்லாம் எப்படி உருவாகி இருக்க முடியும்னு தேடறது இரும்பு தாதுக்கள் இல்லாத நிலையில இரும்பு செய்யிறது எப்படின்னு ஆராயிர மாதிரி. அதை தான் யூரே - மில்லர் சோதனை மூலமா செய்தாங்க. 

1953-வது வருஷம், ஸ்டான்லி மில்லர் - STANLEY MILLER மற்றும் HAROLD UREY - ஹெரால்ட் யூரே அப்படிங்கற இரு அமெரிக்க விஞ்ஞானிகள் சிக்காகோ பல்கலைக்கழகத்துலயும், பின்னாடி கலிபோர்னியா பல்கலைக்கழகத்துலயும் வேலை பார்த்தவங்க, ஒரு பரிசோதனையை செய்திருந்தாங்க. இவங்க இந்த பரிசோதனையை செய்யிற வரைக்கும் ஆரம்ப கால பூமியில உயிர் வேதிப்பொருட்கலான அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள் இதெல்லாம் எப்படி உருவாகி இருக்கலாம் அப்படிங்கறதுக்கான ஆதாரப்பூர்வமான, அறிவியல் பூர்வமான தடயங்கள் எதுவும் கிடையாது. 

அலெக்ஸாண்டர் ஒபாரின் - ALEXANDER OPARIN அப்படிங்கற ரஷ்யன் விஞ்ஞானியும் J.B.S. HALDANE - ஜே. பி. எஸ் ஹால்டேன் அப்படிங்கற பிரிட்டிஷ் விஞ்ஞானியும் டார்வினுடைய பரிணாமம் பற்றிய கொள்கைகளையும், பரிணாமம் பத்தி பலர் சொல்லியிருந்த கருத்துக்களையும், அப்போ நடந்திட்டு இருந்த பல ஆராய்ச்சி முடிவுகளையும் ஒண்ணா சேர்த்து பரிசீலித்து, 1922-ஆம் வருஷம் சில யூகங்களை வெளியிட்டு இருந்தாங்க. அதுல முக்கியமானது, 

பூமியில் முதன் முதலில் உருவான அமினோ அமிலங்கள் போன்ற உயிர்வேதிப்பொருட்கள் எல்லாமே ஹைட்ரஜன், நைட்ரஜன் போன்ற கனிம வேதிப்பொருட்களில் இருந்து பல வேதி வினைகளுக்கு அப்புறமா சில படிநிலைகள் தாண்டி உருவாகி இருக்கலாம் அப்படின்னு சொல்லியிருந்தாங்க. ஆனா, அவங்க தன்னோட யூகத்தை நிரூபிக்க பரிசோதனை எல்லாம் ஒன்னும் செய்யல. 

பின்னாளில் மில்லரும், யூரேவும் இதை நிரூபிக்க ரொம்ப  ஒரு பரிசோதனையை வடிவமைச்சாங்க. அதன்படி ஒரு கண்ணாடி குடுவையில் தண்ணீர், ஹைட்ரஜன், மீத்தேன், அம்மோனியா இதெல்லாம் கலந்த கலவையும், அதோட கடல் தண்ணீர்  ஒரு குடுவையில் எடுத்துக்கிட்டாங்க. அந்த குடுவையை நல்லா கொதிக்க வெக்க ஏற்பாடு பண்ணப்பட்டது. பின்னர், இந்த கலவை கொதிச்சி ஆவியாகி மேல வரும்போது அது ஒரு குழாய் மூலம் வேற ஒரு தனிக்குடுவைக்கு கொண்டு போகப்பட்டது. தனிக்குடுவையில சேகரமான ஆவியில் மின்னலில் இருந்து வெளிவரும் அதே அளவுக்கு மின்சாரம் மூலம் ஒளியும் சக்தியும் செலுத்தினாங்க. அப்புறமா, அந்த ஆவியை குளிர்ந்த தண்ணீர் மூலம் குளிர வெச்சி சேகரிச்சாங்க. இப்போ, இந்த கலவையை சோதனை செய்து பார்த்தப்போ அதுல நெறைய அமினோ அமிலங்கள், முக்கியமா ஒரு உயிருள்ள செல்லுக்குள்ள இருக்கிற அதே முக்கியமான 20 அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள்,  டி.என். ஏ - ஆர். என்.ஏ வுல இருக்கிற அதே கார மூலக்கூறுகள் எல்லாம் உருவாகி இருந்தது.  இந்த குடுவைகளை அப்படியே முத்திரை வெச்சி தன்னோட வாழ்நாள் வரை பத்திரமா வெச்சிருந்தாங்க. 



விஞ்ஞானி மில்லர் 2007 - தான் இறந்து போனாரு. அவரோட இறப்புக்கு அப்புறம் அவர் தன்னோட பரிசோதனைக்கூடத்துல பத்திரப்படுத்தி வெச்சிருந்த அந்த குடுவைகளை திறந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த முக்கியமான விஞ்ஞானிகள் முன்னாடி சோதனை செய்தாங்க. அப்போ அந்த கலவையில எல்லா அமினோ அமிலங்கள் போன்ற உயிர்வேதிப்பொருட்கள் இன்னமும் இருக்கறதை பார்த்தாங்க. 


எல்லா உயிர் மூலக்கூறுகளும் உருவான ஆரம்ப காலக்கட்டத்துல இருந்த மூலபொருட்கள் ஹைட்ரஜனும், நைட்ரஜனும் கார்பனுமா இருந்த காரணத்தால தான் ஒரு செல்லோட எல்லா பகுதியையும் இந்த மூலக்கூறுகளே ஆக்கிரமிச்சி இருக்கு. 

இன்னொரு கேள்வியும் உங்களுக்கு எழலாம். அந்த காலத்துல தான் வெறும் கார்பன், ஹைட்ரஜன் மற்றும் நைட்ரஜன் மட்டும் இருந்தது. அப்போ உருவான உயிர் வேதிப்பொருட்கள் தன்னோட கட்டமைப்புல இவைகளை வெச்சிருக்கு. சரி...!!! ஆனா, பின்னாளில் எவ்வளவோ தனிமங்கள், புதுப்புது வேதிப்பொருட்கள் உருவாச்சி. பரிணாம வளர்ச்சியில இவையெல்லாம் ஏன் அந்த உயிர் வேதிப்போருளோட கட்டமைப்புல பங்கு வகிக்கல...??? அந்த காலத்துல, இவை எல்லாம் இல்லாத காரணத்தால தான் பங்கு வகிக்கல அப்படிங்கறது உண்மைன்னா, உருவானதுக்கு அப்புறம் பங்கு வகிக்கனும் அப்படிங்கறதும் உண்மை தானே...??? ஆனா, பல லட்சக்கணக்கான வருடங்களா, எல்லா உயிர் வேதிப்பொருட்களிலும் அதே கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன். அதுக்கு காரணம் என்னவா இருக்க முடியும்...???

காரணம் - இந்த பொருட்களோட நிலைத்தன்மை - ஸ்திரத்தன்மை - STABILITY. இந்த மூலப்பொருட்கள் கொண்டு உருவான எல்லா உயிர் வேதிப்பொருட்களும் ஸ்திரத்தன்மையிலும் உறுதியா இருக்கு. ஒரு வேளை அதிக காலம் நிலைச்சிருக்க முடியாம போயிருந்தா பரிணாம வளர்ச்சியில இதுவும் எப்பவோ காணாம போயிருக்க முடியும். இந்த காரணத்தால தான் அப்போ உருவான ஒரு செல் உயிர்கள் சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி தன்னோட வடிவத்துல பல பரிணாமம் அடைஞ்சாலும், உயிர் வேதிப்பொருட்களில் மட்டும் அந்த கால ஒரு செல் உயிரினங்கள் முதல் இந்த கால மனிதன் வரை வேதிக்கட்டமைப்பு ரீதியா, எவ்வளவோ புதிய தனிமங்களும், வேதிப்பொருட்களும் உருவானதுக்கு அப்புறமும்,  இன்னமும் அதே கலவையில மாறாமல் இருக்கு. 

ஸோ, மக்களே பரிணாமம் தொடர்ல மூணாவது பதிவும் உங்களுக்கு புடிச்சிருக்குன்னு நெனக்கிறேன். படிச்சிட்டு உங்க கருத்துக்களை மறக்காம பின்னூட்டத்துல சொல்லுங்க. மீண்டும் அடுத்த பதிவுல சிந்திக்கலாம்.

NOTE: இந்த பதிவை வாசகர்கள் எவ்வளவு நாள் கழித்து படித்தாலும், பின்னூட்டம் போட தவற வேண்டாம். FACE BOOK பக்கத்திலும் இந்த பதிவுகள் காணக்கிடைக்கும்.