Sunday, August 11, 2013

லிப்பிடுகள்: PHOSPHOLIPIDS - பாஸ்போ லிப்பிடுகள் - ஒரு விரிவான பார்வை

மக்களே...!!!


நம்ம வலைப்பூ நல்ல முறையில வளர்ந்திட்டு வருது. அதுலயும் உயிர்நுட்பம் FACE BOOK கணக்கிலும் கடந்த ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட 25 புது நண்பர்கள் சேர்ந்திருக்காங்க. நம்ம வலைப்பூவை நம்ம ஊர்லயும், வெளிநாடுகளில் இருந்தும் நெறைய பேரு வாசிக்கறாங்க. நான் எழுதினாலும் இல்லன்னாலும் தெனமும் ஒரு தடவையாவது பார்த்திடறாங்க. ரொம்ப சந்தோசமா இருக்கு. அதே சமயம் படிக்கிற வாசகர்கள் ஆர்வத்துக்கு ஏத்த மாதிரி நெறைய எழுத முடியல அப்படிங்கறது எனக்கு கொஞ்சம் வருத்தம் தான். முடிஞ்ச வரைக்கும் நெறைய எழுத முயற்சி பண்றேன்.


அப்புறம், நம்ம வலைப்பூவை நம்ம வலைப்பூ நண்பர் தமிழ் கணினி கல்லூரி  - இவர் இலங்கை  சேர்ந்தவர் சரியான முறையில் மறு கட்டமைப்பு செய்து குடுத்திருக்கார். தேவையானப்போ மறுபடியும் செய்து தரேன்னும் சொல்லியிருக்கார். பாருங்க. அவருக்கு மிக்க நன்றி. 

ஒரு செல் உயிர் வாழ தேவையான நாலு கரிம வேதிப்பொருட்கள்  பத்தி ரொம்ப நாள் முன்னாடி எழுத ஆரம்பிச்ச தொடர். அதுல, புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட்ஸ், நியூக்ளிக் அமிலங்கள் பத்தி சொல்லி முடிச்சாச்சி. லிப்பிடுகள் பத்தி எழுதிட்டு இருந்தேன். அப்புறம், அங்க இங்கன்னு சுத்தி எங்கெங்கயோ போனதுல, இந்த தொடர் இப்படியே நின்னு போயிடுச்சி. மறுபடியும் அடுத்தடுத்து உயிர் வேதியியல் பத்தி தொடர்ந்து எழுதலாம்ன்னு இருக்கேன். ஸோ, இன்னிக்கு பதிவுக்கு போகலாம்.



லிப்பிடுகள் - LIPIDS



கொழுப்பு அமிலங்கள், அதை சார்ந்த கரிம வேதிப்பொருட்கள், இதை தயாரிக்க தேவைப்படும் மற்ற கரிம வேதிப்பொருட்கள், இவற்றுள் தண்ணீரில் கரையாத, அதே சமயம் குளோரோபார்ம், ஈதர், அசிட்டோன் மற்றும் பென்சீன்  - CHLOROFORM, ETHER, BENZENE, ACETONE போன்ற கரிம கரைப்பான்களில் மட்டும் கரையக்கூடிய வேதிப்பொருட்களை லிப்பிடுகள் அப்படின்னு சொல்வோம்.





பாஸ்போலிப்பிடுகள் - PHOSPHOLIPIDS 

பாஸ்போலிப்பிடுகள் பத்தி ஒரு அறிமுகம் ஏற்கனவே குடுத்திருக்கேன். ஆனா, பாஸ்போலிப்பிடுகள் பத்தி ஒரு தனி பதிவே போடலாம். அவ்ளோ விஷயம் இருக்கு. பாஸ்போ லிப்பிடுகள்லிப்பிடுகளோட ஒரு வகை. இது கூட்டு லிப்பிடுகள் வகையை சேர்ந்தது. இதுல ஒன்னு அல்லது ரெண்டு பாஸ்பேட் குரூப் இருக்கும். நம்ம உடல்ல இருக்கிற பல வகை லிப்பிடுகள்ள இது தான் அளவுலயும், பயன்பாட்டுலயும் ரொம்ப ரொம்ப  அதிகம். ஒரு செல்லுக்குள்ள இருக்கிற அனைத்து சவ்வுகளும், செல் சவ்வு உட்பட அனைத்துமே பாஸ்போலிப்பிடுகளால் ஆனது. இருக்கிற எல்லா பாஸ்போ லிப்பிடுகளோட வேதிக்கட்டமைப்பும் ஒரே மாதிரியான அடிப்படை அமைப்புல தான் இருக்கும்.









ஒரு டை கிளிசரைடு + ஒரு பாஸ்பேட் மூலக்கூறுகள் + ஒரு  கரிம வேதி பொருள்











இதுல டை கிளிசரைடு அப்படிங்கறது  

                     ஒரு கிளிசரால் + 2 கொழுப்பு அமிலம்

இதில் நிறைவுற்ற, நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் அப்படின்னு எல்லா வகை கொழுப்பு அமிலங்களும் அடங்கும். 

கரிம வேதிபொருட்கள் பாஸ்போலிப்பிடை பொறுத்து வேற வேற இருக்கும். உதாரணம் கோலைன்  அல்லது லெசித்தின். எல்லா துணை என்சைம்கள் - CO-ENZYMES, கொழுப்பில் கரையக்கூடிய தன்மை உள்ள விட்டமின்கள் - விட்டமின் A, விட்டமின் - D, விட்டமின் - E, விட்டமின் - K, நிறமிகள் இதெல்லாம் பாஸ்போலிப்பிடுகளுக்கு சில உதாரணங்கள். இதனோட பொதுவான அமைப்பு நீரில் கரைய கூடிய புரோட்டீனை தலை மாதிரியும், நீரில் கரையாத கொழுப்பு அமிலங்களை வால் மாதிரியும் கொண்டிருக்கும். 

பாஸ்போலிப்பிடுகள் பொதுவா நம்ம செல்லுக்குள் தான் தயாரிக்கப்படுது. இதுக்குன்னே ஒரு வேதி முறை லிப்பிட் பயோசிந்தசிஸ் - LIPID BIO-SYNTHESIS - லிப்பிட் தயாரித்தல் அப்படிங்கற  ஒரு தனி வேதி முறை செல்லுக்குள்ள இருக்கு. அதை பத்தி பின்னாடி ஒரு தனிப்பதிவுல பார்க்கலாம்.

பாஸ்போ லிப்பிடுகள் தன்னோட கட்டமைப்பில் ரெண்டு பகுதிகளை கொண்டது. 1. உருண்டையான கோள வடிவ தண்ணீரில் கரையக்கூடிய தன்மை  உடைய தலை பகுதி 2. நீளமான நெறைய கார்பன்களை கொண்ட, தண்ணீரில் கரையும் திறன் இல்லாத செயின் பகுதி

இதனால், இது பாதி தண்ணீரில் கரையும் மற்றும் கரையாத தன்மை உடையது. இதை அறிவியல் பூர்வமா - ஆம்பிபதிக் - AMPHIPATHIC NATURE அப்படின்னு சொல்வாங்க. இதன் மூலம் இது லிப்பிட் இரட்டை படல அமைப்பை உருவாக்க முடியும். இரட்டை படல அமைப்பை உருவாக்க முடியும் அப்படிங்கறதால செல்லோட செல் சவ்வு, செல் நுண்ணுறுப்புகள் சுத்தி இருக்கிற சவ்வுகள் எல்லாமே பாஸ்போ லிப்பிடுகளால் ஆனது.


பாஸ்போலிப்பிடுகளின் அடிப்படை வேதிக்கட்டமைப்பு - BASIC CHEMICAL  STRUCTURE OF PHOSPHOLIPIDS

பாஸ்போலிப்பிடுகளோட வேதிக்கட்டமைப்பில் அடிப்படையா மொத்தம் நான்கு விதமான வேதிப்பொருட்கள் இருக்கு. அதுல முக்கியமானது கிளிசரால். கிளிசரால் மூணு கார்பன்கள் கொண்ட ஒரு ஆல்கஹால் வகையை சார்ந்த வேதிப்பொருள். வேதிக்கட்டமைப்போட அடிப்படையா அமைந்தது. இந்த அடிப்படையை வெச்சிதான் பாஸ்போலிப்பிடுகளை வகைப்படுத்தறாங்க.





உதாரணத்துக்கு, கிளிசராலை அடிப்படையா கொண்ட பாஸ்போலிப்பிடுகளை கிளிசரோ பாஸ்போலிப்பிடுகள் அப்படின்னும், ஸ்பிங்கால் அப்படிங்கற ஆல்கஹாலை அடிப்படையா கொண்ட பாஸ்போலிப்பிடுகளை பாஸ்போ ஸ்பிங்கோசைடுகள் அப்படின்னும், இனோசிடால் அப்படிங்கற ஆல்கஹாலை அடிப்படையா கொண்ட பாஸ்போலிப்பிடுகளை பாஸ்போ இனோசிடால் அப்படின்னும் சொல்வாங்க.


பாஸ்போலிப்பிடுகளின் பல்வேறு வகைப்பாடு - CLASSIFICATION   OF PHOSPHOLIPIDS

 

பாஸ்போலிப்பிடுகள் மொத்தம் மூணு வகையா வகைப்படுத்தி வைக்கப்பட்டு இருக்கு.
 

கிளிசரோ பாஸ்போலிப்பிட்ஸ் - GLYCERO PHOSPHOLIPIDS - கிளிசராலை அடிப்படையாகக் கொண்ட பாஸ்போலிப்பிடுகள் - GLYCEROL-ALCOHOL BASED PHOSPHOLIPIDS

கிளிசரோ பாஸ்போலிப்பிடுகள் என்பது அதனோட வேதிக்கட்டமைப்பு கிளிசரால் அடிப்படையா வெச்சி அமைஞ்சது. அடிப்படையா கிளிசராலும், அதனோட சில கொழுப்பு அமிலங்களும், அதனோட பாஸ்பேட் குரூப்பும் சேர்ந்தது. இந்த மூணு பொதுவான வேதிப்பொருட்களோட, ஒரு தனி கரிம வேதிப்பொருளும் இருக்கும். இந்த தனி வேதிப்பொருளை பொறுத்து இதுலயும் சில வகைகள் இருக்கு. இதுல இந்த வகை பாஸ்போலிப்பிடுகள் தான் ஒரு செல்லுல அதிகம். 






 

PHOSPHATIDIC ACID - பாஸ்பாடிடிக் ஆசிட்

பாஸ்பாடிடிக் ஆசிட் அப்படிங்கறது பாஸ்போலிப்பிடோட கிளிசரோ பாஸ்போலிப்பிட் வகையில ஒரு வகை. இதுல பொதுவான கட்டமைப்பான கிளிசரால், ரெண்டு கொழுப்பு அமிலம், ஒரு பாஸ்பேட் குரூப் இதெல்லாம் சேர்ந்தது இந்த பாஸ்பாடிடிக் ஆசிட். வழக்கமா இதுல இருக்கிற ரெண்டு முக்கியமான கொழுப்பு அமிலங்கள் பாமிடிக் ஆசிட் - PALMITIC ACID மற்றும் ஸ்டியரிக் ஆசிட் - STEARIC ACID. இது செல்லில் நெறையவெல்லாம் இருக்கிற லிப்பிட் எல்லாம் ஒன்னும் கிடையாது. ஆனா, லிப்பிட் உருவாதல் நிகழ்வுல இது முக்கியமான இடைநிலை வேதிப்பொருள்.  


PHOSPHATIDYLCHOLINE - பாஸ்பாடிடைல் கோலைன்

இது இன்னும் ஒரு வகை. பாஸ்பாடிடிக் ஆசிட்ல பாஸ்பேட் குரூப் இருக்கிற இடத்துல கோலைன் அப்படிங்கற ஒரு வேதிப்பொருள் இருக்கும். மத்தப்படி இங்கயும் கிளிசரால், ரெண்டு கொழுப்பு அமிலங்கள் எல்லாம் பொதுவாக இருக்கும். பாஸ்பாடிடைல் கோலைன் தான் செல் சவ்வோட முக்கியமான பாஸ்போலிப்பிட் வகை. நமக்கு இந்த பாஸ்போலிப்பிட் நமக்கு முட்டையோட மஞ்சள் கரு, சோயா இதுல இருந்து நெறைய கிடைக்கும். 


பாஸ்பாடிடைல் இனோசிடால் - PHOSPHATIDYL INOSITOL


இது அடுத்த வகை. எப்படி மேல இருக்கிற ரெண்டு வகையில பாஸ்பேட் குரூப், கோலைன் வேதிப்பொருட்கள் இருக்கோ அதே மாதிரி தான் இனோசிடால் வேதிப்பொருள் இந்த வகையில இருக்கு. இந்த பாஸ்பாடிடைல் இனோசிடால் செல் சவ்வோட சைட்டோபிளாசம் பக்கத்துல நெறைய இருக்கு. 


பாஸ்பாடிடைல் எத்தனாலமைன் - PHOSPHATIDYL ETHANOLAMINE

இந்த வகையும் செல் சவ்வுல இருக்கிற பாஸ்போலிப்பிடோட இன்னும் ஒரு வகை. இது வரைக்கும் இருக்கிற எல்லா பாஸ்போலிப்பிடுகள்ள 25 சதவிதம் இந்த பாஸ்பாடிடைல் எத்தனாலமைன் தான். மனித உடலின் நரம்பு மண்டலத்தில் முக்கியமான வேதிப்பொருள், மூளையோட வெள்ளைப்பகுதி எல்லாமே இந்த வகை தான். 



பாஸ்போஇனோசிடைடுகள் - PHOPHOINOSITIDES - இனோசிடைடுகள் அடிப்படையாக கொண்ட பாஸ்போலிப்பிடுகள் - INOSITOL BASED PHOSPHOLIPIDS

பாஸ்போஇனோசிடைடுகள் பாஸ்போலிப்பிடுகளோட இன்னும் ஒரு வகை. இந்த பாஸ்போலிப்பிடுகள் முந்தைய வகையில் கிளிசரால் எப்படி அடிப்படையா இருந்ததோ, அது மாதிரி இந்த வகையில இனோசிடால் - INOSITOL வேதிக்கட்டமைப்பில் அடிப்படையா இருக்கும். இந்த வகை லிப்பிடுகள் செல் சிக்னலிங் - CELL SIGNALLING அதாவது, செல்லுக்குள்ள செய்தியை கடத்தும் வேலையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வகை லிப்பிடுகள் செல் சவ்வின் சைட்டோபிளாசம் பக்கத்தில் இருக்கும்.  


இதுல மொத்தம் மூணு வகை இருக்கு. ஒன்னு, பாஸ்பாடிடைல் இனோசிடால் நான் ஏற்கனவே மேல சொல்லியிருக்கேன். அந்த பாஸ்பாடிடைல் இனோசிடால் கூட ஒன்னு, ரெண்டு மற்றும் மூணு பாஸ்பேட் குரூப்கள் சேர்ந்த கரிம வேதிப்பொருட்கள் இதுக்குள்ள இருக்கிற இதனோட துணை வகைகள்.






 

இந்த லிப்பிடுகள் சிக்னலிங் வேலை, முக்கியமா செல் சிக்னல், லிப்பிட் சிக்னல், உருவான புரோட்டீன்களை, குறிப்பாக செல் சவ்வு புரோட்டீன்களை செல் சவ்வுக்கு கொண்டு சேர்க்கும் வேலை இது எல்லாவற்றிலும் இதனோட பங்கு மிக மிக அதிகம்.   


PHOSPHATIDYL INOSITOL PHOSPHATE - பாஸ்பாடிடைல் இனோசிடால் பாஸ்பேட் - பாஸ்போ இனோசிடாலோட ஒற்றை பாஸ்பேட் குரூப் சேர்ந்தது. 

PHOSPHATIDYL INOSITOL DIPHOSPHATE - பாஸ்பாடிடைல் இனோசிடால் - டை - பாஸ்பேட்  - பாஸ்போ இனோசிடாலோட இரட்டை பாஸ்பேட் குரூப் சேர்ந்தது.

PHOSPHATIDYL INOSITOL TRIPHOSPHATE - பாஸ்பாடிடைல் இனோசிடால் -டிரை-பாஸ்பேட்  - பாஸ்போ இனோசிடாலோட மூன்று பாஸ்பேட் குரூப் சேர்ந்தது.



PHOSPHOSPHINGOSIDES - பாஸ்போஸ்பின்கோசைட்ஸ் - ஸ்பிங்கால் அடிப்படையாகக் கொண்ட பாஸ்போ லிப்பிடுகள் - SPINGOL BASED PHOSPHOLIPIDS

இதுவும் சிக்னலிங் வேலையை செய்யக்கூடிய லிப்பிடுகள். அதுலயும் செல் மேற்பரப்பு ரிசப்டார்கள் இந்த வகை லிப்பிடுகள் தான். இதுல மூன்று வகைகள் உண்டு. 


செராமைடு பாஸ்பாரைல் கோலைன் - CERAMIDE PHOSPHORYL CHOLINE 






செராமைடு பாஸ்பாரைல் எத்தனாலமைன் - CERAMIDE PHOSPHORYL
ETHANOLAMINE 




 செராமைடு பாஸ்பாரைல் கிளிசரால் - CERAMIDE PHOSPHORYL GLYCEROL


பாஸ்போலிப்பிடுகளின் சில முக்கிய பண்புகள்

பாஸ்போலிப்பிடுகளுக்கு ஆம்பிபதிக் பண்பு - AMPHIPATHIC NATURE   இருக்கு அப்படின்னு ஏற்கனவே சொல்லியிருக்கேன். இந்த பண்பு இருக்கறதால இதால லிப்பிட் இரட்டை படல அமைப்பு ஏற்படுத்த முடியும். அதனால தான் இந்த எல்லா சவ்வுகளிலும் செல் சவ்வு உட்பட பாஸ்போ லிப்பிடுகளே அதிகம் இடம் பிடிச்சிருக்கு. இவைகள் மூலம் உருவாகிற ஒரு படல அமைப்பு மத்த லிப்பிட் பொருட்கள் சுலபமா ஊடுருவி கடக்க முடியும்.





செல் சவ்வின் வழியே ஊடுருவி கடத்தல் 

அதுவே இந்த லிப்பிடுகள் உருவாக்கும் இரட்டை படல அமைப்பு சுலபமா ஊடுருவி கடக்க முடியாது. இது தேர்ந்தெடுத்து கடக்க முடியும். அதாவது, SEMI PERMEABLE MEMBRANE. அதாவது, தேர்ந்தெடுத்து கடத்தல் அப்படின்னா சில வேதிப்பொருட்கள் மட்டுமே கடக்க முடியும். அதுலயும் லிப்பிடுகளில் கரையும், கரையக்கூடிய பொருட்கள், தண்ணீர், ஆல்கஹால் இதெல்லாம் கடக்க முடியும். அயனிகள் கடக்கவே முடியாது.




 

ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் போன்ற வாயுக்களும், தண்ணீர், இண்டோல், கிளிசரால் மாதிரியான சிறு தண்ணீரில் கரையும் மூலக்கூறுகளும் சுலபமாக கொழுப்பு இரட்டை படல அமைப்பு செல் சவ்வை சுலபமாக கடக்க முடியும். குளுகோஸ், சுக்ரோஸ் மாதிரியான சர்க்கரை மூலக்கூறுகளும், அயனிகளும் கடக்க முடியாது. அதற்கான தனித்தனி கடத்தி புரோட்டீன்கள் இருக்கு. 

ஸோ, மக்களே பாஸ்போலிப்பிடுகள் பத்தி எனக்கு தெரிஞ்ச விசயங்களை ஓரளவுக்கு இங்க தொகுத்திருக்கேன். உங்களுக்கு புடிக்கும், புரியும் அப்படின்னு நெனக்கிறேன். படிச்சிட்டு உங்க கருத்துக்களை பின்னூட்டத்துல சொல்லுங்க. அடுத்த பதிவுல சிந்திப்போம்.

NOTE: மக்களே, எப்போது இந்த பதிவை படித்தாலும் தவறாமல் பின்னூட்டம் போட தவற வேண்டாம். இந்த பதிவுகள் உயிர்நுட்பம் FACE BOOK பக்கத்திலும் காண கிடைக்கும்.

No comments:

Post a Comment